நீரிழிவு நிர்வாகத்தில் மன அழுத்த பாதிப்பின் தாக்கம்
இன்றைய பரபரப்பு நிறைந்த போட்டி உலகில், மன அழுத்தம் என்பது தவிர்க்க முடியாத நிகழ்வாக மாறிவிட்டது. மன அழுத்த பாதிப்பிற்கும், நீரிழிவு நோய்ப்பாதிப்புக்கும் தொடர்பு இருப்பதாக, மக்களிடையே ஒரு தகவல் நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது. இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகளிலும், இவ்விரண்டிற்கும் இடையே தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மன அழுத்த பாதிப்பானது, நேரடியாக நீரிழிவுப் பாதிப்பை ஏற்படுத்தாது என்றபோதிலும், அது மறைமுகமாக, நீரிழிவுப் பாதிப்பு ஏற்படுவதற்குக் காரணமாக உள்ளது.
மன அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்குமா?
ஒருவர் மன அழுத்த பாதிப்பை உணரும்போது, அவரின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இது அவர்களின் உடலில் கார்டிசோல் மற்றும் அட்ரினலின் ஹார்மோன்களை வெளியிடத் தூண்டுகிறது. இந்த ஹார்மோன்கள், இன்சுலின் எதிர்ப்பு நிலையை ஏற்படுத்துகின்றன. இந்த நிலையானது, செல்கள் குளுக்கோஸ் உறிஞ்சுதலைத் தடுக்கின்றன. செல்களுக்குள் குளுக்கோஸ் உறிஞ்சப்படாததால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. மன அழுத்த பாதிப்பு நிகழ்வின் போது வெளியிடப்படும் ஹார்மோன்கள், இன்சுலின் செயல்பாட்டில் தலையிடுவதன் மூலம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமாக அதிகரிக்கிறது என்பது நிரூபணம் செய்யப்பட்டு உள்ளது.
மன அழுத்தம், நீரிழிவுப் பாதிப்பை உண்டாக்குமா?
நாள்பட்ட மன அழுத்த பாதிப்பு, இரண்டாம் வகை நீரிழிவு ஏற்பட முக்கிய காரணமாக இருப்பதாக, பல்வேறு ஆய்வுகள் குறிப்பிட்டு உள்ளன.
கார்டிசோல் மற்றும் இன்சுலின் எதிர்ப்பு
மன அழுத்த பாதிப்பிற்கு உள்ளாகும்போது, அவர்களின் உடலில் கார்டிசோல் ஹார்மோன் வெளியிடப்படுகிறது. கார்டிசோல் ஹார்மோன், மன அழுத்த ஹார்மோன் என்று வரையறுக்கப்படுகிறது. இந்த ஹார்மோனின் அதிகச் சுரப்பானது, உடல் செல்கள் குளுக்கோஸ் உறிஞ்சுதலைத் தடுத்து, இன்சுலின் ஹார்மோன் எதிர்ப்பு நிலை உருவாகக் காரணமாக அமைகிறது. இதன்விளைவாக, செல்களால் உறிஞ்ச முடியாத குளுக்கோஸ், ரத்தத்திலேயே தங்கி விடுவதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இது இரண்டாம் வகை நீரிழிவுப் பாதிப்பு ஏற்படுவதற்கான முதல்படியாக அமைகிறது.
ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை நடத்தைகள்
ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை நடத்தைகள், நீரிழிவு பாதிப்பிற்கான அபாயத்தை அதிகரிக்கிறது. அதிகப்படியான உணவுகளை உட்கொள்ளுதல், மோசமான உணவுத்தேர்வுகள், உடல் எடை அதிகரிப்பு, புகைப்பிடித்தல், உடற்பயிற்சி இன்மை, ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து இருக்கும் வாழ்க்கைமுறை உள்ளிட்ட காரணிகள், நாள்பட்ட மன அழுத்த பாதிப்பிற்குக் காரணமாக அமைகின்றன. உடல் பருமன், இன்சுலின் எதிர்ப்பு முன்னேற்றம் மற்றும் நீரிழிவு மேம்பாடுகளுக்கு, இந்த ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை நடத்தைகள் முக்கியக் காரணமாக அமைகின்றன.
சீரற்ற உறக்க முறைகள்
மன அழுத்த பாதிப்பானது, உறக்கத்தின் அளவையும், தரத்தையும் சீர்குலைத்துவிடுகிறது. உறக்க இழப்பு நிகழ்வானது, வளர்சிதை மாற்றங்களுடன் பிணைக்கப்பட்டு உள்ளது ஆகும். சீரற்ற உறக்க முறையானது, இன்சுலின் உணர்திறன் குறைதல், கார்டிசோல் அளவு அதிகரிப்பு, பசி உணர்வின்மை உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. நாள்பட்ட உறக்க இழப்பு நிகழ்வானது, பலவீனமான குளுக்கோஸ் சகிப்புத்தன்மை மற்றும் நீரிழிவு நோய்ப்பாதிப்பை ஏற்படுத்துவதற்கான ஆபத்து அபாயத்தை உள்ளடக்கியதாக உள்ளது.
நாள்பட்ட மன அழுத்தத்தால் தூண்டப்படும் ஹைபர்கிளைசீமியா மற்றும் இன்சுலின் எதிர்ப்பு, இரண்டாம் வகை நீரிழிவுப் பாதிப்பை ஏற்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
மேலும் வாசிக்க : அதிகக் கொழுப்புப் பாதிப்பின் அறிகுறிகளை அறிவோமா?
மன அழுத்த பாதிப்பு நேரத்தில் ரத்த சர்க்கரை அளவைக் கண்காணித்தல்
மன அழுத்த பாதிப்பிற்கும், ரத்த சர்க்கரைக்கும் இடையிலான தொடர்பை, எல்லா நேரங்களிலும் நினைவில் கொள்ள வேண்டும். குளுக்கோமீட்டர் உதவியுடன், மன அழுத்த பாதிப்பு நேரங்களில் ரத்த சர்க்கரை அளவைத் தொடர்ந்து கண்காணித்து வரவும்.
மன அழுத்த பாதிப்பு குறித்து மருத்துவரிடம் தெரிவிக்கவும்
நீரிழிவு நோயாளியின் வாழ்க்கையில் நேர்மறை மற்றும் எதிர்மறையான மன அழுத்த பாதிப்புகள் ஏற்படுகின்றன. மன அழுத்த பாதிப்பு விவரங்களை, மருத்துவரிடம் முழுமையாகத் தெரிவிக்க வேண்டியது அவசியமாகும். இதன்மூலம், மருத்துவர் நோயாளிக்கு அளிக்கும் மருந்துமுறையில் மாற்றங்களை மேற்கொள்வார். நீரிழிவு மற்றும் மன அழுத்த வேறுபாடுகள் கண்கூடாகத் தெரியும் என்பதால், நீங்கள் தகுந்த சிகிச்சை முறையைத் தேர்ந்தெடுக்க முடியும்.
நீண்டகால அழுத்தங்களைக் கட்டுப்படுத்தவும்
திருமண சிக்கல்கள், வேலைப் பார்க்கும் பணியிடத்தில் நற்பெயர் இன்மை, சமூக உறவுகளில் சங்கடங்கள் உள்ளிட்ட காரணிகளால், நாம் அனைவரும் ஏதாவது ஒருவகையில் பாதிக்கப்பட்டு இருப்போம். இந்தப் பாதிப்புகள், நீண்ட காலத்திற்குத் தொடரும்பட்சத்தில், சுகாதாரப் பாதிப்பை ஏற்படுத்திவிடும் ஆபத்து உள்ளது. இந்தப் பாதிப்புகளின் இருந்து ஆரம்பத்திலேயே விடுபட்டு விடுவதுதான் நல்லது. இதிலிருந்து விடுபடுவது முதலில் கடினமானதாகத் தோன்றினாலும், இதைச் செய்தால் மட்டுமே, நீங்கள் அதைத் திறம்படக் கையாள முடியும்
குறுகிய கால அழுத்தங்களையும் குறைப்பது அவசியம் ஆகும்
குறுகிய கால அளவிலான அழுத்தங்களை உரியமுறையில் நிர்வகிக்காவிட்டால், அது நீண்டகால அழுத்தங்களாக மாறக்கூடும். உங்கள் மனநிலையை வெகுவாகப் பாதிக்கும் வகையிலான இந்த அழுத்தங்களை, அதன் துவக்கக் காலத்திலேயே வேரறுத்துவிட்டால், ஆரோக்கியப் பாதிப்பு ஏற்படும் ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம்.
ஆக்கப்பூர்வமான தீர்வைக் காணுங்கள்
நீங்கள் மன அழுத்தத்தில் இருப்பதாக உணர்ந்தால் மனதிற்குப் பிடித்தமான இசையைக் கேட்கலாம், ஆழ்ந்த சுவாசப் பயிற்சியைச் செய்யலாம், மசாஜ் செய்துகொள்ளலாம், சிறுதொலைவிற்கு நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். இதன்மூலம், நீங்கள் மன அழுத்த பாதிப்பில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். இவற்றில் எது உகந்தது என்பதைக் கண்டுபிடிப்பது தான், மிகவும் சவாலான விஷயம் ஆகும்.
அதைவிடுத்து, மன அழுத்தம் ஏற்படும் நேரங்களில் அதிலிருந்து விடுபட அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுதல், உடலுக்குத் தீங்கு விளைவிக்கவல்ல நொறுக்குத்தீனிகளைச் சாப்பிடுதல், அதீதக் குடிப்பழக்கம், தேவையில்லாமல் ஷாப்பிங் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டால், இந்தப் பழக்கங்கள் காலப்போக்கில், அதிக மன அழுத்தத்தைத் தான் உருவாக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
மனதைச் சாந்தப்படுத்த முயற்சி செய்யுங்கள்
மனதை ஒருநிலைப்படுத்த உதவும் யோகா, ஆழ்ந்த சுவாசம், மனந்தெளிநிலை, தியானம் உள்ளிட்ட பயிற்சிகள் மன அழுத்தத்தைத் திறம்பட நிர்வகிப்பதிலும் முக்கியப்பங்கு வகிப்பதாக, ஆய்வுமுடிவுகள் தெரிவித்து உள்ளன. இந்தப் பயிற்சிகள் குறைந்த செலவீனத்தைக் கொண்டது மற்றும் எளிமையானது என்பதால், அனைவருக்கும் உகந்தது ஆகும்.
உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்
இரண்டாம் வகை நீரிழிவுப் பாதிப்பு நோயாளிகளுக்கு, உடற்பயிற்சிப் பழக்கம் உற்ற துணைவனாக விளங்குகிறது. உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் இன்சுலின் எதிர்ப்பு நிலைக் கட்டுப்படுத்தப்படுவதோடு மட்டுமல்லாது, இன்சுலின் சென்சிட்டிவிட்டியையும் அதிகரிக்கிறது. இதன்காரணமாக, ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.
வாரத்திற்கு 4 முதல் 5 மணிநேரம் ஓட்டப்பயிற்சி, ஜாகிங், நீச்சல், சைக்கிளிங், எடைகளைத் தூக்கும் வகையிலான வலிமைப் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம், நல்ல பலனை, நீரிழிவு நோயாளிகள் பெற முடியும். உடற்பயிற்சி நடவடிக்கைகள், மன அழுத்த சூழ்நிலைகளையும் சிறப்பாக நிர்வகிக்க உதவுகின்றன.
மன அழுத்தத்தைக் குறைக்கும் நடைமுறைகளில் ஈடுபட வேண்டும்
சரியான நேரத்திற்குச் சாப்பிடுதல், ஆரோக்கியமான உணவுமுறையை மேற்கொள்ளுதல், மருந்துகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ளுதல், ரத்த சர்க்கரை அளவை அடிக்கடி கண்காணித்தல் உள்ளிட்ட நடைமுறைகளை, நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம், மன அழுத்த பாதிப்பும் கட்டுக்குள் வருகிறது.
இரவில் சரியான அளவில் உறங்க வேண்டும்
மக்கள் குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் தினசரி 7 முதல் 8 மணிநேரம் தொடர்ச்சியான உறக்கம் மேற்கொள்வது அவசியமாகும். இதன்மூலம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருப்பது மட்டுமல்லாது, மன அழுத்த அளவுகளும் கட்டுப்படுத்தப்படுகின்றன. மன அழுத்த பாதிப்பு அல்லது நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு, சீரான உறக்கம் ஆபாந்பாந்தவனாக விளங்குகிறது என்று சொன்னால் அது மிகையல்ல.
நீரிழிவு பாதிப்பு நோயாளிகள், மன அழுத்தம் சார்ந்த நிகழ்வுகளில் கூடுதல் கவனம் செலுத்தும்போது, நீரிழிவு பாதிப்பின் தீவிரத்தையும் கட்டுப்படுத்த முடியும். மேற்குறிப்பிட்ட வழிமுறைகளைப் பின்பற்றி, மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, நீரிழிவுப் பாதிப்பிலிருந்து விரைவில் பூரண நலம் பெறுவீர்களாக…