உடல் ஆரோக்கியத்திற்கான செயலியின் தனியுரிமை
உடல் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் செயலியில் நீங்கள் பூர்த்தி செய்துள்ள உங்களது மருத்துவத் தகவல்கள், பாதுகாப்பாக உள்ளனவா என்ற அச்சம், இன்று பல்வேறுத் தரப்பினரிடையே எழுந்துள்ளது. இன்றைய நவீன யுகத்தில், செயலிகள் பற்றிப் பேசும் நாம், அதில இடம்பெற்றுள்ளத் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கின்றனவா என்பதைத் தெரிந்து கொள்வதும் அவசியமானதாகி உள்ளது.
உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு உதவும் செயலிகளை நம்பியே, இன்றைய இளம்தலைமுறையினர் உள்ளனர். தங்களது உடல்நலம் சார்ந்த தகவல்கள் அனைத்தையும், அவர்கள் முழு நம்பிக்கை வைத்து, இந்தச் செயலிகளில் பதிந்து வருகின்றனர்.
செயலிகளின் பங்கு
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, உடல்நலத்தைக் கண்காணிக்கும் வகையிலான செயலிகள் முக்கியப் பங்காற்றுகின்றன. இந்தச் செயலிகளானது, நாம் அளிக்கும் மருத்துவத் தகவல்களுக்கு ஏற்ற ஆலோசனைகளை வழங்குகின்றன. உங்களுக்கு ஏற்ற மிகச்சிறந்த தேர்வுமுறைகளை வழங்குகின்றன.இச்செயலிகளில் நீங்கள் அளிக்கும் தகவல்கள் யாருடனாவது பகிரப்படுகின்றனவா என உறுதிசெய்வது அவசியம்.
உடல்நல ஆரோக்கியத்தில் அக்கறைக் கொண்டுள்ள நீங்கள், செயலிகளில் நீங்கள் அளித்துள்ள தகவல்கள் தொடர்பான தனிப்பட்ட விசயங்களிலும், அதிக அக்கறைக் காட்ட வேண்டும். இதன்மூலம், உங்களது மருத்துவத் தகவல்கள் பொதுவெளியில், பிறரிடம் பகிரப்படுவது தடுக்கப்படும். நீங்கள் அளித்த தரவுகளின் தனியுரிமைப் பாதுகாக்கப்பட வேண்டியது முக்கியம் ஆகும்.
உடல்நல ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் செயலிகளை உருவாக்கும் மருத்துவ நிறுவனங்கள், பயனர்களின் பாதுகாப்பிற்காக மறைகுறியாக்கப்பட்ட உரையாடல்கள் (Encrypted chats) மற்றும் பாதுகாப்பான செய்தி வழங்குதலை உறுதிப்படுத்த வேண்டும்.நோயாளியின் மருத்துவத் தகவல்களை, கணினி அல்லது ஸ்மார்ட் போன் வாயிலாக அனுப்பும் போது, அது தனிப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட தகவல்களாக இருக்க வேண்டியது அவசியமாகும். இந்தத் தகவல்களை, ஒரு குறிப்பிட்ட நபர், அதாவது மருத்துவர் மட்டுமே அணுகும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
என்கிரிப்சன் என்றால் என்ன?
நீங்கள் அளிக்கும் தகவல்களை, சம்பந்தப்பட்ட நபர்த் தவிர, வேறு யாரும் அறியாத வண்ணம் ரகசிய குறியீடாக மாற்றும் நிகழ்வையே, என்கிரிப்சன் என்கிறோம். இந்தமுறையின் மூலம், நோயாளியின் மருத்துவத் தகவல்கள் மின்னணு முறையில் கணினி அல்லது ஸ்மார்ட்போன் மூலம் அனுப்பப்படுகின்றன. இந்த வழிமுறையே, உடல்நலத்தைக் கண்காணிக்கும் செயலிகளில் பயன்படுத்தப்படுகின்றது. இதனால், இத்தகையச் செயலிகளில் நீங்கள் அளிக்கும் தகவல்கள், பாதுகாப்பானதாக இருக்கும் என்ற நம்பிக்கையை விதைக்கின்றது.
செயலிகளில் Encrypted chats பயன்படுத்தலின் நன்மைகள்
செயலிகளில் நீங்கள் பதிவு செய்யும் தகவல்கள், உங்களுக்கும், குறிப்பிட்ட மருத்துவருக்கு மட்டுமே தெரியும்படி உள்ளன.
உங்களது தனிப்பட்ட தகவல்கள் என்கிரிப்டட் செய்யப்பட்டு உள்ளதால், அவற்றை ஹேக்கர்களால் ஹேக் செய்ய முடிவதில்லை.
உங்களது தகவல்கள், ரகசிய எழுத்துக்களாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதால், அந்தக் குறிப்பிட்ட செயலியின் மூலமாக மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.
உங்களது மருத்துவத் தகவல்கள் மற்றும் அறிக்கைகளை, எளிதாக மற்ற செயலிகளுடன் பரிமாறிக்கொள்ள இயலும்.
அவசர நிலைகளின் போது, உங்களது மருத்துவத் தகவல்கள், மருத்துவ நிபுணருக்கு அனுப்பப்பட்டு அவரின் ஒப்புதல் பெறுவதற்கான வழிவகை உள்ளது.
தரவுகளின் தனியுரிமைப் பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துரைக்கின்றது.
Encrypted chats வழிமுறை, நாம் நினைப்பது போன்று சாதாரணமான வழிமுறை அல்ல. இதற்கான நிரல்களை உருவாக்கும் டெவலப்பர்கள், நாம் அளிக்கும் தகவல்களை எவ்வாறு நிர்வகிக்க வேண்டும் என்பதைத் தீர ஆராய்ந்து, எளிதாகப் பயன்படுத்தும் வழிமுறைகளையும் உறுதி செய்ய வேண்டும். எளிமையான அனுபவத்துடன் உயர் பாதுகாப்பு வழங்குவது மிகுந்த சவாலாகும்.
பயனர்களுக்கான குறிப்புகள்
பயனர்கள், உடல்நலத் தகவல்களைப் பாதுகாக்கும் மற்றும் தனியுரிமைக்கு முன்னுரிமை அளிக்கும் செயலிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தனியுரிமைப் பாதுகாப்பு முக்கியம்
உங்களது உடல் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் செயலியில், தனியுரிமைப் பாதுகாப்பை மதிப்பாய்வு செய்ய, நேரம் ஒதுக்கீடு செய்யுங்கள். இது தரவுப் பகிர்வு போன்ற அம்சங்களில் உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவும்.
செயலியை அவ்வப்போது அப்டேட் செய்யுங்கள்
செயலியை தொடர்ந்து புதுப்பிப்பது புதிய அம்சங்களையும் மேம்பட்ட பாதுகாப்பையும் வழங்கும்.செயலியின் அப்டேட்கள் வெளியாகும்பட்சத்தில், தன்னிச்சையாகவே, அது அப்டேட் ஆகும்படி செட்டிங்சை மாற்றி அமைத்துக் கொள்ளலாம் அல்லது அவ்வப்போது அப்டேட் செட்டிங்சைப் பார்வையிடவும்.
கடினமான கடவுச்சொற்களை அமைத்தல்
செயலிகளின் பயன்பாட்டிற்கெனக் கடினமான மற்றும் தனித்துவமான கடவுச்சொற்களை அமைக்க வேண்டும். இதுபோன்ற கடவுச்சொற்களை உருவாக்குவதற்கும், அதைச் சேகரம் செய்வதற்கும், பாஸ்வேர்ட் மானேஜர்கள் உதவுகின்றன.
இரண்டு காரணிகளுடான அங்கீகாரம் (Two-Factor Authentication (2FA))
கூடுதல் பாதுகாப்பு வேண்டுமென நினைப்பவர்கள், இரண்டு காரணிகளுடான அங்கீகாரம் (Two-Factor Authentication (2FA)) இயக்கிக் கொள்ளவும். இதன்மூலம், உங்களது கடவுச்சொல்லை, வேறு நபர்கள் அறிந்தபோதிலும், உங்களது சரிபார்ப்பு இல்லாமல், அதை அவர்களால் அணுக இயலாது.
தகவல்களைத் திருடுபவர்களிடம் எச்சரிக்கை
தேவையில்லாமல் வரும் இணைப்புகளைத் தொடுவதன் மூலமோ அல்லது செயலியில் பகிரப்படும் தகவல்களுக்குப் பதிலளிப்பதன் மூலமாகவோ, உங்களது பிரத்யேகத் தகவல்கள் திருடப்பட வாய்ப்பு உள்ளது. எந்தத் தகவலை யார் அனுப்பி இருக்கின்றனர், எதற்காக, அவர்களுக்கு இந்தத் தகவல் தேவைப்படுகிறது, என்பதை ஒருமுறைக்கு இருமுறை ஆராய்வது அவசியம் ஆகும்.
பகிரப்பட்ட நெட்வொர்க்களிலும் ஆபத்து
நீங்கள் உங்களது உடல்நல ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் செயலிகளை, பகிரப்பட்ட நெட்வொர்க்களில் பயன்படுத்தி வந்தால், அதன் செயல்பாடு நிறைவுற்ற உடனே, லாக் அவுட் செய்து விடவும். இல்லையெனில், உங்களது தகவல்கள் திருடப்பட வாய்ப்பு உள்ளது.
இணைக்கப்பட்ட டிவைஸ்களை அவ்வப்போது சரிபார்க்கவும்
உங்களது செயலியை, மற்ற ஏதாவது உடல்நலம் சார்ந்த கேட்ஜெட்களிலோ அல்லது அணியக்கூடிய சாதனங்களிலோ இணைத்திருந்தால், அவ்வப்போது அதைச் சரிபார்க்கவும். அதிகம் பயன்படுத்தாத அல்லது புதியதாக வேறு ஏதாவது அறிமுகமில்லாத சாதனங்கள் காட்டப்பட்டால் அதனை உடனடியாக நீக்கி விடவும்.
தரவுகளைப் பிரதி எடுத்துக் கொள்ளுதல் (Data backup)
உங்களது செயலியில் உள்ள தரவுகளை, அவ்வப்போது பிரதி எடுத்துக் கொள்ளுதல் நன்மைபயக்கும். செயலியில் ஏற்படும் பிரச்சினைகளினாலோ அல்லது, செயலி தொலைந்து போனாலோ, இது உதவும்.
செயலி விதிமுறைகள்
செயலியை நிறுவுவதற்கு முன்னர், அதில் குறிப்பிடப்பட்டு உள்ள அனுமதிகள் மற்றும் விதிமுறைகளை நன்கு படித்து பார்த்துக் கொள்வது நல்லது. இந்த நிகழ்வு, அந்தச் செயலியின் உண்மைத்தன்மையை உங்களுக்கு உணர வைக்கும்.
பயோமெட்ரிக் பாதுகாப்பைப் பயன்படுத்தவும்
உங்கள் செயலியில், பயோமெட்ரிக் பாதுகாப்பு அம்சம் இருப்பின், அதை உடனடியாகச் செயல்படுத்தவும். இது உங்கள் செயலியின் பாதுகாப்பை மேலும் வலுவானதாக்கும்.
சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள்
உங்களது செயலியில், ஏதாவது சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் தென்பட்டால், உடனடியாக, அதுகுறித்துச் செயலியின் வாடிக்கையாளர்ச் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கவும்.
கூடுதல் பாதுகாப்பிற்காக…
பாதுகாப்பு தணிக்கைகள்
செயலியில் காட்டும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அவ்வப்போது சரிபார்த்து, ஏதாவது அச்சுறுத்தல்கள் இருந்தால், அதை உடனடியாகச் சரிசெய்யவும்.
வெளிப்படைத் தன்மை
சில செயலிகள், தகவல்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவான அறிக்கைகளை வழங்குகின்றன.
மேலும் வாசிக்க : வயதானவர்களுக்கான உடற்பயிற்சித் திட்டங்கள்
தரவுகளின் வலுவான என்கிரிப்ஷன்
செயலிகளில் மேற்கொள்ளப்படும் கருத்துப் பரிமாற்றங்கள் மட்டுமல்லாது, தரவுகளும் என்கிரிப்ஷன் செய்யப்படுவதால், கூடுதல் பாதுகாப்பு கிடைக்கின்றது.
பயனர் வழிமுறைகள்
செயலி மற்றும் அதில் உள்ள தகவல்களை எவ்வாறு பாதுகாப்பாகப் பயன்படுத்துவது, அதற்கான வழிமுறைகள் உள்ளிட்டவை, செயலியின் பயனர் வழிமுறையிலேயே வழங்கப்பட வேண்டும்.
அப்டேட்கள் அவசியம்
செயலியின் பாதுகாப்பு கருதி, நிறுவனம் வெளியிடும் அப்டேட்களைத் தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம், செயலி பாதுகாப்பாக இயங்குவதை உறுதி செய்து கொள்ளலாம்.
உடல்நல செயலிகளில் தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.செயலியில் மேற்கொள்ளப்படும் கருத்துப் பரிமாற்றங்களை என்கிரிப்ட் செய்வதன் மூலம், கூடுதல் பாதுகாப்பு கிடைப்பதோடு மட்டுமல்லாது, உங்களது தனிப்பட்ட தகவல்களும் பாதுகாக்கப்படுகின்றன. தகவல்கள் பாதுகாப்பாக இருந்தால், செயலி பயனர்களின் வரவேற்பைப் பெறும்.