பெண்கள் மேற்கொள்ள வேண்டிய மருத்துவச் சோதனைகள்
பெண் என்பவர், சமுதாயத்தைக் கட்டமைக்க உதவும் முக்கிய நபர் ஆவார். இந்தச் சமுதாயத்தில், அவருக்கென்று பல்வேறு பாத்திரங்கள் உள்ளன. குடும்பம், தொழில், வீட்டுப் பொறுப்புகள் எனப் பல்வேறு பாத்திரங்களைப் பெண்கள் திறம்பட வகித்து வருகின்றனர். ஆனால், தங்கள் உடல்நல ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கப் பெரும்பாலான பெண்கள் மறந்துவிடுகின்றனர். மற்ற பொறுப்புகளைப் போன்று, உடல்நல ஆரோக்கியத்தையும் அவர்கள் பேணிக்காக்க வேண்டும்.
வழக்கமான உடற்பயிற்சிகள், மன அழுத்த மேலாண்மை, ஆரோக்கியமான உணவுமுறை உள்ளிட்டவை, அவர்களின் முதன்மையான தேவைகளாக உள்ளன. உடல் பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதால், அவைத் தீவிரமடைவதைத் தவிர்க்க முடிகிறது. உடல்நலப் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிய, வழக்கமான உடல்நல ஆரோக்கியத்திற்கு உகந்த மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வது இன்றியமையாததாகும்.
பெண்களுக்கான மருத்துவப் பரிசோதனைகள்
பெண்களுக்கு, உடல்நலப் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிய உதவும் ஸ்கிரீனிங் சோதனைகள் மிகவும் இன்றியமையாததாக உள்ளன. பெண்களின் உடற்கூறியல் அமைப்பானது, பாதிப்பிற்கு உள்ளாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. பெண்களின் வயதுக்கு ஏற்ப, அவர்களின் ஹார்மோன் மற்றும் சமூகவியல் கூறுகளும் வேறுபடுகின்றன. இந்த மாறுபாடானது, பல்வேறு நோய்ப்பாதிப்புகள் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கச் செய்வதாக உள்ளது.
பெண்களுக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகள் பின்வருமாறு தொகுக்கப்பட்டு உள்ளன.
மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய உதவும் ஸ்கிரீனிங் சோதனைகள்
மார்பகப் புற்றுநோய்ப்பாதிப்பை முன்கூட்டியே கண்டறிய மேமோகிராம் சோதனை, மருத்துவ நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. 18 வயது முதல் 39 வயதிற்கு இடைப்பட்ட பெண்களுக்கு, மருத்துவர்கள் பொதுவாக மார்பகப் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்துவர்.
40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள், ஆண்டுக்கு ஒருமுறை மேமோகிராம் சோதனையையும், 55 வயதிற்கு மேற்பட்ட பெண்கள், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, மேமோகிராம் சோதனையை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். அனைத்து வயதுப் பெண்களும், தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது, மேமோகிராம் சோதனையை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்கள் ஏற்கனவே மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தால், உங்களுக்கும் அந்தப் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. BRCA1 அல்லது BRCA2 போன்ற சோதனைகள், மரபணுக்களுடன் தொடர்புடைய மார்பகப் புற்றுநோய் பாதிப்பு அபாயத்தில் நீங்கள் இருப்பதை உணர்த்துகின்றன.
மரபணுக்கள் தொடர்பான மார்பகப் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால், மருத்துவ வல்லுநர்கள் மரபணு பரிசோதனை அல்லது BRCA சோதனைக்குப் பரிந்துரைச் செய்வர்.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்ப் பாதிப்பைக் கண்டறிய உதவும் சோதனை
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்ப் பாதிப்பை, அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறிய Pap smear மற்றும் HPV எனப்படும் மனிதர்களைத் தாக்கும் பாபிலோமா வைரஸ் சோதனைகளை, மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
புற்றுநோய்ப் பாதிப்பின் அபாயத்தைப் புரிந்துகொள்ள, மருத்துவர்க் கருப்பை வாய்ப்பகுதியில் உள்ள செல்களை ஆய்வுக்கு உட்படுத்த, Pap smear சோதனையை மேற்கொள்வார். இது நோய்ப்பாதிப்பை, அதன் துவக்க நிலையிலேயே கண்டறிந்துவிடும் என்பதால், மிகவும் பயனுள்ளதாக விளங்குகின்றன.
21 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பெண்களும், வழக்கமாக மேற்கொள்ளும் இடுப்புப் பரிசோதனைகளுடன், Pap smear சோதனையை, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
யோனி, கருப்பைகள், பெஃலோபியன் குழாய்கள், கருப்பை வாய், கர்ப்பப்பை உள்ளிட்ட பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் ஆரோக்கியக் குறைவைக் கண்காணிக்க, கீழ் இடுப்புப் பரிசோதனை உதவுகிறது. யோனிப்பகுதியில் ரத்தப்போக்கு, நீர்க்கட்டிகள் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பவர்கள், பால்வினை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள், குடும்ப உறுப்பினர்களில் யாருக்காவது புற்றுநோய்ப் பாதிப்பு இருப்பவர்கள் உள்ளிட்டவர்களுக்கு, இந்தச் சோதனையை அடிக்கடி மேற்கொள்ள மருத்துவர் அறிவுறுத்துவார்.
தைராய்டு செயல்பாடு சோதனைகள்
உடலில் உள்ள தைராய்டு சுரப்பியானது தைராக்ஸின் (T4) மற்றும் டிரியோடோதைரோனைன் (T3) எனும் இரண்டு முக்கிய ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன. இந்த ஹார்மோன்கள், உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தைச் சீராக்குகின்றன.
பெரியவர்களில் T4 ஹார்மோன், சாதாரண நிலையில் 5.0 முதல் 12.0 μg / dL
பெரியவர்களில் T3 ஹார்மோன், சாதாரண நிலையில் 80 முதல் 220 μg / dL வரை இருக்க வேண்டும்.
ஆண்களைவிட, பெண்களே அதிகளவில் தைராய்டு குறைபாடுகளால் பாதிக்கப்படுகின்றனர்.
தைராய்டு ஹார்மோன்கள் குறைந்த அளவில் உற்பத்தியாகும் நிலை ஹைப்போதைராய்டிசம் எனப்படும். இது உடலின் வளர்சிதை மாற்றத்தைப் பாதிக்கிறது. மேலும் உடல் சோர்வு, வறண்ட சருமம், எடை அதிகரிப்பு, சீரற்ற மாதவிடாய் சுழற்சி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
தைராய்டு ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும் நிலை ஹைப்பர்தைராய்டிசம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் இதயத்துடிப்பு அதிகரிக்கிறது, பதட்ட உணர்வு, உடல் எடைத் திடீரென்று குறைதல், போதிய உறக்கம் இல்லாமை உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
மேற்குறிப்பிட்ட அறிகுறிகளை நீங்கள் உணரும்பட்சத்தில், நீங்கள் மருத்துவரை அணுகும்போது, அவர் உங்களுக்குத் தைராய்டு பரிசோதனையை மேற்கொள்ள அறிவுறுத்துவார். தைராய்டு சுரப்பி சுரக்கும் ஹார்மோன்களின் அளவு இயல்பான நிலைக்குக் கொண்டுவரும் வகையில், மருந்துகளை அவர்ப் பரிந்துரைச் செய்வார்.
வைட்டமின் குறைபாட்டைக் கண்டறிய உதவும் சோதனை
இந்தியப் பெண்களில் பெரும்பாலானோருக்கு, வைட்டமின் D மற்றும் வைட்டமின் B12 குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. உடல்நல ஆரோக்கியத்திற்கு, வைட்டமின்களின் பங்கு அளப்பரியது ஆகும்.
கர்ப்பிணிகள், வைட்டமின் B12 குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருந்தால், அது பல மோசமான விளைவுகளை உருவாக்குகிறது என்பதற்கான சான்றுகள் உள்ளன.
எலும்பு ஆரோக்கியத்திற்கும், உடல் போதிய அளவில் கால்சியம் உறிஞ்சுவதற்கும், வைட்டமின் Dயின் பங்கு அளப்பரியது ஆகும். வைட்டமின் D குறைபாடு உள்ள பெண்களுக்கு, உடலின் வைட்டமின் D குறைபாட்டைச் சரிசெய்யும் வகையிலான மருந்துகளை, மருத்துவர் உங்களுக்குப் பரிந்துரைப்பார்.
மேலும் வாசிக்க : வயதானவர்களுக்குத் தேவையான பரிசோதனைகள் இதுதான்
இரத்த அழுத்த மாறுபாட்டைக் கண்டறிய உதவும் சோதனைகள்
மாதவிடாய் சுழற்சி நின்றுபோனப் பெண்கள், மன அழுத்த பாதிப்பிற்கு உள்ளான பெண்கள், பிரசவத்தில் சிக்கல்களை எதிர்கொண்ட பெண்கள் உள்ளிட்டோருக்கு ஹார்மோன் பிரச்சினைகள் இருக்கக்கூடும். இந்தப் பாதிப்புகள், அவர்களின் ரத்த அழுத்த மாறுபாட்டிலும் எதிரொலிக்கின்றன. இந்தக் காரணிகள், இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கின்றன.
20 வயதான பெண்களுக்கு, ரத்த அழுத்த பரிசோதனையை, ஆண்டுக்கு இரண்டு முறை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். உங்கள் சிஸ்டாலிக் ரத்த அழுத்தம் 120 முதல் 139 mm/hg வரையும், டயஸ்டாலிக் ரத்த அழுத்தம் 80 முதல் 89 mm/hg வரை இருப்பின், நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் ரத்த அழுத்த பரிசோதனையை மேற்கொள்வது கட்டாயமாக உள்ளது.
இரத்த அழுத்த மாறுபாடானது, அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பின், மருத்துவரின் ஆலோசனை மிகவும் இன்றியமையாதது ஆகும். நீரிழிவு, இதய நோய்ப்பாதிப்பு, சிறுநீரகப் பிரச்சினைகள் பாதிக்கப்பட்டு இருப்பின், மேலும் பரிசோதனைகள் தேவைப்படலாம்.
நீரிழிவு நோய்ப்பாதிப்பைக் கண்டறிய உதவும் சோதனைகள்
45 வயதிலான பெண்கள், நீரிழிவு மற்றும் அதற்கு முந்தைய நிலையைக் கண்டறிய மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, ரத்தத்தில் சர்க்கரையின் அளவிற்கான பரிசோதனையை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
கர்ப்பிணிகள், உடல் பருமன் மற்றும் ஹைபர்டென்சன் உள்ளிட்ட ஆபத்துக் காரணிகள் இருப்பின், நீரிழிவுச் சோதனை மிகவும் முக்கியமானது ஆகும்.
இரத்தத்தில் சர்க்கரை அளவு 100 mg/dl க்கு அதிகமாகக் காணப்படின் அது நீரிழிவு பாதிப்பிற்கு முந்தைய நிலையாக வரையறுக்கப்படுகிறது.
லிப்பிட் பேனல் சோதனை
உடலின் கொழுப்பு மற்றும் டிரைகிளிசரைடு அளவைச் சரிபார்க்க உதவுவதால், லிப்பிட் பேனல் சோதனை மிகவும் முக்கியமானது ஆகும். இந்தச் சோதனையானது, இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைத் தீர்மானிக்கும் கருவியாகச் செயல்படுகிறது.
குடும்ப உறுப்பினர்களில் யாருக்காவது இதய நோய்ப்பாதிப்பு இருப்பது, உடல் பருமன் அல்லது நீரிழிவு பாதிப்பு அபாயம் கொண்டிருப்பவர்கள், இந்த லிப்பிட் சோதனையைத் தொடர்ந்து செய்துவருவது நல்லது.
பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு
பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பானது, இன்றைய தலைமுறைப் பெண்களிடம் பரவலாகக் காணப்படுவதை, நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். இந்தப் பாதிப்பை, அதன் துவக்க நிலையிலேயே கண்டறிய, கொலோனோஸ்கோபி சோதனைப் பேருதவி புரிகிறது. இந்தச் சோதனையின் மூலம், பெருங்குடலில் அசாதாரணமாகக் காணப்படும் புற்றுநோய்க்கட்டிகளின் வளர்ச்சியைத் துல்லியமாகக் கண்டறிய இயலும். பாலிப்ஸ் என்றழைக்கப்படும் இந்தக் கட்டிகள், புற்றுநோய்க் கட்டிகளாக மாற்றம் பெறுவதற்கு முன்னரே இதனை அகற்றிவிடலாம்.
கொலோனோஸ்கோபி சோதனை மூலம் குடல் அழற்சி, பாலிபஸ் போன்ற பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடிகிறது. இந்தப் பாதிப்புகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், பாதிப்பின் தீவிரம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்பதை மறந்துவிட வேண்டாம்.
மேற்குறிப்பிட்ட மருத்துவப் பரிசோதனைகளை, சரியான முறையில் மேற்கொண்டு, சமுதாயத்தின் அங்கமாக விளங்கும் பெண்கள் பல்வேறு உடல்நலப் பாதிப்புகளில் இருந்து பூரண நலம் பெற்று ஆரோக்கியமான மற்றும் வளமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…