A doctor pointing to an X-ray, explaining how body posture affects bone health, with a bone density scan beneficial for older adults.

வயதானவர்களுக்குத் தேவையான பரிசோதனைகள் இதுதான்

வீட்டில் உள்ள வயதானவர்களைப் பேணிக்காக்கும் பணி உங்களுடையதா? அவர்களை, எவ்வாறு சிறந்த முறையில் கவனித்துக்கொள்வது என்பதில் குழப்பமாக உள்ளதா? அவர்கள் எதுவும் கேட்காததால், அவர்களுக்கு எதுவும் தேவையில்லை என்று நினைக்கின்றீர்களா?

வயதானவர்களின் பூர்த்தி செய்யப்படாத தேவைகளை அடையாளம் காண விரும்பினாலோ அல்லது அவர்கள் மீதான முழுக்கவனிப்பிற்கு நீங்கள் அதிக அக்கறைச் செலுத்த விரும்பினாலோ, செயலூக்கமான அணுகுமுறையைக் கையாள வேண்டியது அவசியமாகும். இந்த அணுகுமுறையானது, வாழ்க்கையின் ஒவ்வொரு நிலைக்கும் ஏற்புடையதாக உள்ளது. இது அவர்களின் அன்றாட நடவடிக்கைகளாகக் கூட இருக்கலாம். அவர்களுக்கு ஏதாவது உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டால், அதுதொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ள உங்களை அணுக மாட்டார்கள் என்பதே இதில் நிதர்சனமான உண்மை ஆகும். வீட்டில் உள்ள வயதானவர்களின் உடல்நலம் மோசமாகப் பாதிக்கப்படுவதற்கு முன்பாக, அவர்களின் உடல்நலத் தேவைகளை அறிந்துகொள்ள வேண்டும். அந்த இக்கட்டிலிருந்து அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை நாம் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

உங்கள் வீட்டில் உள்ள வயதானவர்கள், நல்ல உடல்நல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியாகவும் இருப்பதைத் தானே எல்லாரும் விரும்புவார்கள். இதில் நாம் மட்டும் என்ன விதிவிலக்கா என்ன? வயதானவர்கள் உடல்நல ஆரோக்கியத்துடன் திகழத் தேவையான மருத்துவப் பரிசோதனைகள் உள்ளிட்ட சோதனைகள் குறித்து, இந்தக் கட்டுரையில் விரிவாகக் காண்போம்.

எலும்புகளின் அடர்த்தியை அளவிடும் சோதனை

வயதாக, வயதாக உடலின் எலும்புகளில் உள்ள கால்சியம், பாஸ்பேட் உள்ளிட்ட அத்தியாவசிய மினரல்கள் எனப்படும் தாது உப்புக்கள் குறையத் துவங்குகின்றன. இதன்காரணமாக, எலும்புகள், மூட்டுகள், தசைகள் உள்ளிட்டவைப் பலவீனம் அடைகின்றன. இது உங்கள் உடல் தோரணை, வலிமை, செயல்பாடுகள் உள்ளிட்டவற்றில் பெரும்பாதிப்பை ஏற்படுத்துகின்றன. வயதானவர்களுக்கு, எலும்பின் அடர்த்தியைக் கண்டறிய உதவும் ஸ்கேன் சோதனையை மேற்கொள்வது நல்லது. இந்த ஸ்கேன் சோதனையில் வைட்டமின் D குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டால், மருத்துவரின் பரிந்துரையின் பேரில் வைட்டமின் D மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மருந்துகள், உடலில் உள்ள எலும்புகள், கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இந்தக் கால்சியம் சத்தானது, உடலின் தசை இயக்கங்களை மேம்படுத்துகிறது.

நீரிழிவுப் பரிசோதனை

இளைய தலைமுறையினரோடு ஒப்பிடும்போது, வயதானவர்களுக்கு, நீரிழிவுப் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இரத்தத்தில், சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் நிகழ்வே, நீரிழிவுப் பாதிப்பு என்று வரையறுக்கப்படுகிறது. இந்தியாவில், 72 மில்லியன் மக்கள், நீரிழிவுப் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ள தகவல், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பாதிப்பு, இன்றைய நிலையில் இளைய தலைமுறையினரிடையேயும் பெருமளவில் பாதித்து வருகிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது இதயம், மூளை, சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. நீரிழிவு நோய்ப்பாதிப்பானது தீவிரம் அடையும்போது, அது உயிருக்கே பெரும் ஆபத்தாக முடிகிறது.

வீட்டில் உள்ள வயதானவர்களின் ரத்த சர்க்கரை அளவை, ஒவ்வொரு 3 முதல் 6 மாதங்களுக்கு ஒருமுறைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது. இந்தச் சோதனையில், நீரிழிவுப் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், நோய்ப்பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்கவல்ல மருந்துகளை எடுத்துக் கொள்வது அவசியம் ஆகும்.

HbA1c சோதனையின் மூலம், அவர்களின் உடல் ஆரோக்கியத்தைத் தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். இந்தச் சோதனையானது, 2 முதல் 3 மாத கால அளவிலான சராசரி ரத்த சர்க்கரை அளவைக் கணக்கிட உதவுகிறது. இதன்மூலம், மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள் மற்றும் வாழ்க்கைமுறையில் மாற்றங்களை அடையாளம் காண உதவுகிறது.

இரத்த அழுத்தத்தை அளவிடும் சோதனை

உங்கள் வீட்டில் உள்ள வயதானவர்களுக்கு ஹைபர்டென்சன் எனப்படும் உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருந்தாலும், அவர்கள் அதற்கான எவ்வித அறிகுறிகளும் இல்லாமலேயே காணப்படுவர். இதன்காரணமாகவே, மருத்துவ நிபுணர்கள், உயர் ரத்த அழுத்த பாதிப்பை ‘சைலன்ட் கில்லர்’ என்று குறிப்பிடுகின்றனர். உறக்கத்தில் இருந்து விழித்த உடனே தோன்றும் தலைவலியை, உதாசீனப்படுத்தாமல், ரத்த அழுத்தத்தைப் பரிசோதனைச் செய்துகொள்வது நல்லது. இரத்த அழுத்த மாறுபாட்டை, அதற்கான உபகரணத்தின் மூலம், நீங்களே வீட்டில் அளவிடலாம். உடல் பருமன் கொண்டவர்கள், நீரிழிவு நோய்ப்பாதிப்பு அல்லது இதயப் பாதிப்பு கொண்டவர்கள், ரத்த அழுத்த மாறுபாட்டைத் தொடர்ந்து கண்காணித்து வருவது நல்லது.

உடலின் கொலஸ்ட்ரால் அளவைக் கண்டறிய உதவும் சோதனை

கொல்ஸ்ட்ரால் என்பது உடலில் உள்ள கல்லீரல் உறுப்பால் இயற்கையாகவே உற்பத்தி செய்யப்படும் கொழுப்பு போன்ற பொருள் ஆகும். இது உடல் செல்கள் ஆரோக்கியத்தில் முக்கியப்பங்கு வகிக்கிறது. உடலில் சேகரமாகும் அதிகப்படியான கொழுப்பு, ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி, ரத்த ஓட்டத்தைத் தாமதப்படுத்தும். இதன்காரணமாக, மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. வயதானவர்களுக்கு மட்டுமல்லாது, அனைவரும், அவர்களின் உடலின் கொழுப்பின் அளவைத் தவறாது கண்காணித்து வருவது நல்லது.

Doctor holding a 'Prostate Cancer' sign to represent PSA testing in older men

வயதான ஆண்களுக்கான PSA (Prostate specific antigen) சோதனை

PSA சோதனை என்பது புரோஸ்டேட் புற்றுநோய்ப் பாதிப்பைக் கண்டறிய உதவும் ஸ்கிரீனிங் சோதனை ஆகும். புராஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு, வயதுக்காரணி சார்ந்தது ஆகும். 55 வயதிற்குப் பிறகு, ஆண்களுக்கு இந்தப் பாதிப்பின் தீவிரம் கணிசமாக அதிகரிக்கிறது. 70 முதல் 74 வயது கால அளவில் உச்சம் பெற்று, பின்னர்ப் பாதிப்பின் தீவிரம் குறையத் துவங்குகிறது.

மேலும் வாசிக்க : இரத்த பரிசோதனைச் செய்யத் திட்டமா – இதைப் படிங்க பிளீஸ்!

மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்ப் பாதிப்பைக் கண்டறிய உதவும் சோதனை

மார்பகப் புற்றுநோய் பாதிப்பானது, பெரும்பாலும் இள வயது பெண்களைப் பாதிக்கும் என்றபோதிலும், சமீபத்திய நிகழ்வுகளில், 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களிடையே அதிகம் காணப்படுகிறது. 70 வயதிற்கு மேற்பட்ட 5 பெண்களில் ஒருவருக்கு, இந்தப் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

மார்பகப் புற்றுநோயை, அதன் ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிய மேமோகிராம் சோதனை உதவுகிறது. இந்தச் சோதனையின் உதவிகொண்டு, சரியான நேரத்தில், சரியான சிகிச்சையைத் தேர்ந்தெடுக்க உதவுகிறது.

45 வயதிலான பெண்கள், மேமோகிராம் சோதனையை, ஆண்டிற்கு ஒருமுறையும், 55 வயதிலான பெண்கள், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையும் மேற்கொள்ளச் சர்வதேச அளவிலான புற்றுநோய் சொசைட்டி பரிந்துரைச் செய்கிறது.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்பது யோனி என்று மருத்துவ நிபுணர்களால் அழைக்கப்படும் கருப்பை வாயின் கீழ்ப்பகுதியில் ஏற்படும் ஒருவகைப் புற்றுநோய் ஆகும். Pap மற்றும் HPV சோதனைகள், கர்ப்பப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய உதவுகின்றன.

முதியவர்கள் உடல் ஆரோக்கியம் பெறுவதற்கான பாதையைத் தேர்ந்தெடுங்கள்

உங்கள் வீட்டில் உள்ள வயதானவர்களுக்கு, தேவைப்படும் மருத்துவப் பரிசோதனைகள், வழக்கமான சுகாதாரப் பரிசோதனைகள் உள்ளிட்டவற்றைச் சரியான நேரத்தில் மேற்கொள்ளத் திட்டமிடுவதோடு, அவர்கள் ஆரோக்கியமான உணவுமுறையைக் கடைப்பிடிக்கவும், புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருந்தால், அதனை உடனடியாக நிறுத்தவும் அறிவுறுத்த வேண்டும். இது உங்களை உடல்ரீதியாக, சுறுசுறுப்பாக இருக்க வைக்க ஊக்குவிக்கிறது. இதற்கும்மேலாக, தினசரி சிறிதுநேரம் அவர்களுடன் செலவிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

மேற்குறிப்பிட்ட மருத்துவப் பரிசோதனைகளை முறையாகப் பின்பற்றி, உங்கள் வீட்டில் உள்ள முதியவர்களின் உடல்நல ஆரோக்கியத்தைப் பேணிக்காத்து, அவர்கள் வளமான நல்வாழ்வு வாழ வழிவகைச் செய்வோமாக…

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.