டிமென்ஷியா தடுக்கவல்ல வாழ்க்கைமுறை மாற்றங்கள்
சர்வதேச அளவில் டிமென்சியா மற்றும் அல்சைமர் நோய்ப் பாதிப்பிற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கைக் கணிசமான அளவிற்கு அதிகரித்து வருகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவில், வயதானவர்களில் ஆறில் ஒருவருக்கு இந்த நோய்ப்பாதிப்பு உள்ளது. அமெரிக்காவில் நிகழும் மரணங்களில், இந்த நோய்ப்பாதிப்பு முக்கியக் காரணமாக உள்ளது.
டிமென்ஷியா மற்றும் அல்சைமர்ப் பாதிப்புகள் இரண்டும் ஒன்றுதான் என்று பலரும் நினைத்து உள்ளனர். ஆனால், இது முற்றிலும் தவறான கருத்து ஆகும்.
டிமென்ஷியா நோய்ப்பாதிப்பானது, வாஸ்குலார் டிமென்ஷியா மற்றும் அல்சைமர் டிமென்ஷியா என்ற இரு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன. டிமென்ஷியா பாதிப்பு ஏற்பட, பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பாக, ஹைப்போதைராய்டிச நிகழ்வானது, குறுகிய கால அளவிலான டிமென்ஷியா பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. உடலில் தைராய்டு ஹார்மோனின் அளவு, சரியான நிலையை அடையும் போது, இந்தப் பாதிப்பானது மறைகிறது.
டிமென்ஷியா பாதிப்பின் அறிகுறிகள்
அறிவாற்றல் உணர்வு அல்லது மூளையின் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையே, டிமென்ஷியா பாதிப்பு என்று வரையறுக்கப்படுகிறது. ஞாபக மறதி, சிந்தனைத்திறன் குறைதல், குழப்பமான மனநிலை, உரையாடல் உள்ளிட்ட தொடர்பு நடவடிக்கைகளில் சிக்கல்கள், அன்றாட நடவடிக்கைகளைத் திறம்பட மேற்கொள்ள இயலாத நிலை உள்ளிட்டவை இதில் அடங்கும்.
டிமென்ஷியா பாதிப்பிற்கு உள்ளானவர்கள், புதிய தகவல்களைப் பதிவு செய்வதில் மிகுந்த சிரமப்படுகின்றனர். அன்றாடம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஞாபக மறதி ஏற்படுகிறது. வழக்கமான இடங்களுக்கும், வாகனம் ஓட்டும்போதும் தொலைந்துபோகும் சூழல் உருவாகிறது. மகிழ்ச்சியாக இருந்தவர்கள் கூட, இந்தப் பாதிப்பிற்குப் பிறகு சோக உணர்வுடனேயே திகழ்கின்றனர். சமூகத் தடைகளைப் பற்றிய உணர்வு இல்லாமல் திகழ்கின்றனர். எதையும் யோசிக்காமல் பேசுதல் மற்றும் செய்கின்றனர். வழக்கமான விஷயங்களில் கூட, சரியாகத் தீர்மானிக்க இயலாத நிலையினதாக இருப்பர்.
டிமென்ஷியா நோய்பாதிப்பு குறித்த விழிப்புணர்வு, சர்வதேச அளவில் அதிகரித்து வரும் நிலையில் இப்பாதிப்பின் தீவிரத்தைத் தடுக்கவும், அல்சைமர்ப் பாதிப்பின் முன்னேற்றத்தை மட்டுப்படுத்தவும் பல்வேறு வழிமுறைகள் உள்ளன என்பது புலனாகி உள்ளது.
டிமென்ஷியா நோய்ப்பாதிப்பைத் தடுக்கவல்ல வழிமுறைகள்
வியர்வையை உடலில் தேங்கவிடக் கூடாது
தினமும் தவறாமல் உடற்பயிற்சிப் பழக்கத்தை மேற்கொள்வதன் மூலம் உங்களின் இதயத்துடிப்பு அதிகரிப்பது மட்டுமல்லாது, அனைத்து வகையான டிமென்ஷியாப் பாதிப்புகளையும் திறம்படத் தடுக்கிறது. உடற்பயிற்சி நிகழ்வானது, மூளையின் அனைத்துப் பகுதிகளுக்கும் ரத்த விநியோகத்தை உறுதி செய்கிறது. இது நரம்பியல் இணைப்புகளின் தொடர்புகளை மேம்படுத்துகிறது.
ஆரோக்கியமான உணவுமுறை
பதப்படுத்தப்பட்ட உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட உணவுகள், ஆரோக்கியமற்ற, அதேசமயம் உடலுக்குத் தீங்கை விளைவிக்கும் வகையிலான உணவு வகைகள், மூளையின் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை மட்டுமே விளைவிக்கின்றன. இந்த வகை உணவுகள், மூளையின் தமனிகளில், அடைப்புகள் உருவாக வழிவகுக்கிறது. இதனைத்தவிர்க்க, ஆரோக்கியமான உணவுமுறைக்கு மாறுங்கள்.
தினமும் உங்கள் உடலின் பெரும்பகுதியானது, சூரிய ஒளியில் படுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். வைட்டமின் D மற்றும் வைட்டமின் B12 சத்துகளின் குறைபாடு, டிமென்ஷியா நோய்ப்பாதிப்பைத் தூண்டும் வாய்ப்பு இருப்பதால், உடலில் போதிய அளவைப் பராமரிப்பது முக்கியம் ஆகும். வாய்வழியாக எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் மூலம், வைட்டமின் B12 குறைபாட்டைத் தவிர்க்க இயலும். வைட்டமின் D அளவைப் பராமரிக்க, சூரிய ஒளி மட்டுமே, சிறந்த தீர்வாக அமைகிறது.
சுறுசுறுப்பாக இருத்தல்
தனிமை உணர்வானது, மனச்சோர்வைத் தூண்டுவதோடு மட்டுமல்லாது, அறிவாற்றல் செயல்பாட்டையும் குறைக்கும் என்று அறியப்படுகிறது, இவ்விரண்டும், டிமென்ஷியா பாதிப்பை ஏற்படுத்தவல்ல முக்கியக் காரணிகளாக உள்ளன. எனவே, எப்போதும் தனிமை உணர்வைத் தவிர்ப்பதோடு மட்டுமல்லாது, சுறுசுறுப்பாக இருப்பதன் மூலம், டிமென்ஷியா பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
ஆல்கஹால் மற்றும் புகைப்பழக்கத்தைக் குறைக்க வேண்டும்
புகைப்பிடித்தல் பழக்கமானது, மூளைப்பகுதியில் வீக்கம், வாஸ்குலார்ச் சேதம் மற்றும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தைத் தூண்டுவதாக உள்ளது. இந்தக் காரணிகளினாலேயே, டிமென்சியா பாதிப்பு அதிகளவில் ஏற்படுகிறது. அதேபோல், ஆல்கஹால் உள்ளிட்ட மதுவகைகளும், மூளையில் பாதிப்பை ஏற்படுத்தவல்லதாக உள்ளன.
இதய நலன் மற்றும் ஆரோக்கியமான உடல் எடையை நிர்வகித்தல்
ஹைபர்டென்சன் எனப்படும் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் உள்ளிட்ட காரணிகள், டிமென்ஷியா, டைப் 2 நீரிழிவுப் பாதிப்பு, மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக அமைகின்றன. இதய ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவதுடன், ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பதன் மூலமாக, டிமென்ஷியா பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள இயலும்.
மனச்சோர்வை விட்டொழியுங்கள்
மனச்சோர்வு உணர்வானது, மூளையில் வாஸ்குலார்ச் சேதம் மற்றும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தைத் தூண்டுகிறது. இவ்விரு காரணிகளும், டிமென்ஷியா பாதிப்பை ஏற்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. நீங்கள் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டு இருப்பின், தக்க மருத்துவ நிபுணரைக் கலந்தாலோசித்து, உரிய சிகிச்சைமுறையை மேற்கொள்வது சாலச்சிறந்தது.
மன அழுத்தத்தை நிர்வகிக்கவும்
இன்றைய போட்டி உலகில், பெரும்பாலானோர் மன அழுத்தம் மற்றும் மன இறுக்கப் பாதிப்புகளுடன் உள்ளனர் என்பதை யாராலும் மறுக்க இயலாது. ஆனால் இத்தகைய பாதிப்புகளை, அவர் எங்ஙனம் நிர்வகிக்கிறார் என்பதைப் பொறுத்தே, அவர் டிமென்ஷியா பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறாரா, இல்லையா என்பதை அறிய இயலும்.
யோகா, தியானம், உடற்பயிற்சி உள்ளிட்ட நேர்மறையான பழக்கங்கள் அடங்கிய வாழ்க்கைமுறையானது, மன அழுத்தத்தைத் திறம்பட நிர்வகிக்கிறது.
மூளையைச் சவால்களுக்கு உட்படுத்துங்கள்
உடற்பயிற்சி, மனரீதியாகச் சுறுசுறுப்பாக இருப்பது மற்றும் அன்றாட நிகழ்வுகளின் அடிப்படையில், மூளைக்கு உகந்த சவாகளை விடுப்பதும், டிமென்ஷியா பாதிப்பைத் தடுக்கவல்ல முக்கிய நுட்பமாக விளங்குகிறது.
விளையாட்டுகள் மற்றும் புதிர்கள்
வினாடி வினாக்கள், குறுக்கெழுத்துகள், புதிர்கள், வீடியோ கேம்கள் உள்ளிட்ட நிகழ்வுகள், உங்களை விரைவாகச் சிந்திக்க மட்டுமல்லாது, சுறுசுறுப்பாக இயங்குவதற்கும் உதவுகின்றன. அதிகத் தகவல்களை நினைவில் வைத்துக் கொள்வதற்கும், விருப்பங்களுக்கு இடையில் தேர்வுகளை மேற்கொள்ளவும், தீர்க்கமான முடிவுகளை எடுக்கவும் உதவுகின்றன. இந்த நிகழ்வுகள், அறிவாற்றல் திறனை மேம்படுத்துகின்றன.
புதிய படிப்பைத் தொடங்கவும்
புதிய மொழி, இசைக்கருவியை மீட்ட கற்றுக் கொள்வது, புதிய ஆய்வினைத் துவங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளும் மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகின்றன. நரம்பியல் இணைப்புகளின் தொடர்புகள் வலுப்பெறுகின்றன. இது டிமென்ஷியா பாதிப்பை, அதன் துவக்கத்திலேயே கட்டுப்படுத்துகிறது.
தொடர்ந்து படித்து வரவும்
டிவி தொடர்ந்து பார்த்து வரும் நிகழ்வானது, உங்களை ஊமை ஆக்குவதாகக் கருதப்படுகிறது. அதேநேரத்தில், வாசிப்பு நிகழ்வானது, உங்கள் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துவதாகக் கண்டறியப்பட்டு உள்ளது. நேர்மறைச் சிந்தனையைத் தூண்டும் வகையிலான புத்தகங்கள், கட்டுரைகள், வலைப்பதிவுகள், தினசரிகள் உள்ளிட்டவைகளுடன் தினமும் குறைந்தது 2 முதல் 3 மணிநேரம் செலவிடுவது நல்லது.
மேலும் வாசிக்க : அல்சைமர்ப் பாதிப்பின் ஆரம்ப அறிகுறிகளை அறிவோமா?
பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்
தபால்தலைச் சேகரிப்பு போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் உங்களுக்கு ஆர்வம் இருப்பின், அதற்கென உள்ள குழுவில் சேர்ந்து, இன்னும் தீவிரமாக ஈடுபடுங்கள். முன்பைவிட அதிக நேரம் அதற்குச் செலவழிக்கவும்.
குறிப்பிட்ட செயலிகளைப் பயன்படுத்தவும்
அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தவல்ல விளையாட்டுகள் கொண்ட செயலிகளைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்த வேண்டும்.
பாடல் மற்றும் இசையை ரசித்தல்
மெல்லிய இசை, மனச்சோர்வு உணர்வை மாற்றி அமைக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே உங்களுக்குப் பிடித்த இசையை, நேரம் கிடைக்கும்போதெல்லாம் கேட்க வேண்டும். பாட்டு பாடுவதில் ஆர்வம் இருப்பின், பாடவும் முயற்சி செய்வது நல்லது.
சமையலிலும் புதுமையை முயற்சிக்கவும்
எப்போதாவது ஒருமுறைச் சமைப்பது என்பது, சிகிச்சை மேற்கொள்வதற்கு ஒப்பானது ஆகும். எனவே, உங்களுக்குப் பிடித்த சிற்றுண்டியை, வீட்டில் இருக்கும் பதார்த்தங்களோடு நின்றுவிடாமல், புதுவிதமாகச் சமைத்து, அதைக் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்குங்கள்.
கைவினைக் கலைகளில் ஈடுபடுங்கள்
கைகள், கண்கள் மற்றும் மூளைக்கு இடையே நெருக்கமான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் கலைகள், கைவினைகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகள், அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன.
டைரி எழுதும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்
உங்கள் வாழ்க்கையின் அன்றைய நாளில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளைக் குறிப்பெடுத்துக் கொண்டு, அதைத் தினமும் டைரியில் எழுதும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். பிற்காலத்தில், இதைப் படித்துப் பார்க்கும்போது, மனதில் இனம்புரியாத சந்தோஷம் ஏற்படுவது உறுதி. இதனால் மன ஆரோக்கியமும் மேம்படும்.
மேற்குறிப்பிட்ட வழிமுறைகளைக் கவனமாகப் பின்பற்றி, டிமென்சியா பாதிப்பில் இருந்து முழுமையான நிவாரணம் பெற்று ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்ந்திடுவோமாக…