கல்லீரல் செயல்பாட்டுச் சோதனைகளை அறிவோமா?
கல்லீரல் உடலில் உள்ள ஒரு முக்கிய உறுப்பு ஆகும். இது நாம் சாப்பிடும் உணவைப் பதப்படுத்துவதற்கும், உணவின் மூலமாகப் பெறப்படும் ஆற்றலைச் சேமிக்கவும், உடலில் உள்ள நச்சுக்களை அகற்றவும் உதவுகிறது. உடலில் ஏற்படும் சிறிய அளவிலான பாதிப்புகளுக்குச் சரியான நேரத்தில் உரிய சிகிச்சையை மேற்கொள்ளாவிடில், அது உறுப்பு செயலிழப்பு போன்ற கடுமையான பிரச்சினைகளாக மாறும் ஆபத்து அதிகம் உள்ளது.
கல்லீரல் சிறப்பான முறையில் இயங்குகிறதா என்பதைக் கண்டறிய, கல்லீரல் செயல்பாட்டுச் சோதனைகள் (LFTs) மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ரத்த பரிசோதனைகள், உடலின் உறுப்புகளில் உள்ள புரதங்கள் மற்றும் என்சைம்களை அளவிடுவதன் மூலம், கல்லீரலின் ஆரோக்கியத்தை மதிப்பிடுகின்றன.
கல்லீரல் செயல்பாட்டுச் சோதனையின் நோக்கம்
கல்லீரல் செயல்படும் விதத்தை மதிப்பிடுவதற்கும், அதில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் அதை அடையாளம் காண்பதற்கும், கல்லீரல் செயல்பாட்டுச் சோதனைகள் உதவுகின்றன. கல்லீரலில் ஏற்படும் ஹெபடைட்டிஸ் பாதிப்பு, வைரஸ் பாதிப்பு, மதுப்பழக்கத்தால் ஏற்படும் பாதிப்பு, கல்லீரல் சிரோசிஸ் அல்லது உட்கொள்ளும் மருந்துகளினால் ஏற்படும் பக்கவிளைவுகள் உள்ளிட்ட நிலைமைகளை ஸ்கீரினிங் செய்ய இத்தகைய சோதனைகள் அவசியமானதாக உள்ளன. இந்தச் சோதனைகளின் மூலம், குறிப்பிட்ட அளவிலான கல்லீரல் நிலைக்கான சிகிச்சையையும் கண்காணிக்க இயலும்.
கல்லீரல் செயல்பாட்டுச் சோதனையின் வகைகள்
கல்லீரல் செயல்பாட்டுச் சோதனையின் வெவ்வேறு வகைகள், கல்லீரல் செயல்பாட்டின் வெவ்வேறு அம்சங்களைக் கண்டறிய உதவுகின்றன. பிலிரூபின், அலனைன் டிரான்ஸ்மினேஸ் (ALT), அஸ்பார்டேட் டிரான்ஸ்மினேஸ் (AST), அல்கலைன் பாஸ்படேஸ் (ALP), அல்புமின் மற்றும் மொத்த புரதங்கள் L-lactate dehydrogenase (LD) மற்றும் காமா – குளுட்டமைல்ட்ரான்ஸ்ஃபெரேஸ் (GGT) போன்றவற்றின் அளவீடுகள் ஆகும்.
பிலிரூபின்
இரத்த சிவப்பு அணுக்கள் உடைபடும் நிலையில், பிலிரூபின் உற்பத்தியாகிறது. இது மலத்திலும் காணப்படுகிறது. பிலிரூபினின் அளவு அதிகரிக்கும் போது, அது மஞ்சள்காமாலைப் போன்ற நிலையை ஏற்படுத்துகிறது.
அலனைன் டிரான்ஸ்மினேஸ் (ALT)
இந்த என்சைம் (நொதி), நாம் சாப்பிடும் உணவில் உள்ள புரதத்தை, கல்லீரல் ஆற்றலாக உடைக்க உதவுகிறது. கல்லீரலில், அலனைன் டிரான்ஸ்மினேஸ் (ALT) நொதி அதிகரித்துக் காணப்படின், கல்லீரல் பாதிப்பிற்கு உள்ளாகி இருப்பதாக அர்த்தம்.
அஸ்பார்டேட் டிரான்ஸ்மினேஸ் (AST)
இந்த நொதியும், , அலனைன் டிரான்ஸ்மினேஸ் (ALT) யைப் போன்றதே ஆகும்.
இந்த நொதி, ரத்த ஓட்டத்தில் காணப்படுகிறது. இது அமினோ அமிலங்களை உடைக்க, கல்லீரலுக்கு உதவுகிறது.
அல்கலைன் பாஸ்படேஸ் (ALP)
இது கல்லீரலில் காணப்படும் மற்றொரு வகை நொதி ஆகும். இந்த என்சைம், புரதத்தை உடைக்க உதவுகிறது. இந்த நொதி, எலும்புகளிலும் காணப்படுகிறது.
ஆல்புமின் மற்றும் மொத்த புரதங்கள்
உடலைத் தொற்றுநோய்ப் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க, ஆல்புமின் இன்றியமையாததாக உள்ளது. இந்த முக்கியப் புரதம், கல்லீரலில் குறைந்த அளவினதாக இருக்கும்போது, கல்லீரல் பாதிப்பு இருப்பதைக் குறிக்கிறது.
லாக்டேட் டீஹைட்ரோஜினேஸ் (LD)
லாக்டேட் டீஹைட்ரோஜினேஸ் நொதியானது, கல்லீரலில் அதிகளவு காணப்படின், அது கல்லீரல் பாதிப்பிற்கு உள்ளானதாகக் குறிக்கப்படுகிறது. இருப்பினும் இது தெளிவான வழிகாட்டியாக, மருத்துவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
காமா-குளுட்டமைல்ட்ரான்ஸ்ஃபெரேஸ் (ஜிஜிடி)
இது ரத்தத்தில் காணப்படும் மற்றொரு வகை நொதி ஆகும். இதன் அளவு, கல்லீரலில் அதிகரித்துக் காணப்படும்போது, கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாக வரையறுக்கப்படுகிறது.
அபாயங்கள்
கல்லீரல் செயல்பாட்டுச் சோதனைகள், முக்கியமான கண்டறியும் கருவிகளாக விளங்குகின்றன. ஆனால் அவைச் சிறிய அளவிலான அபாயங்களைக் கொண்டு உள்ளன. நோயாளியிடமிருந்து ரத்த மாதிரி எடுக்கப்படும் போது இது பெரும்பாலும் நிகழும். சில சந்தர்ப்பங்களில், இது புண் அல்லது சிராய்ப்புக்கு வழிவகுக்கும். இது தவிர, LFT சோதனையில் வேறு எந்தப் பெரிய ஆபத்துகளும் இல்லை.
மேலும் வாசிக்க : இரத்த பரிசோதனைச் செய்ய உள்ளீர்களா – இதைப்படிங்க!
கல்லீரல் செயல்பாடு சோதனைக்கு எவ்வாறு தயாராவது?
உங்கள் மருத்துவர்க் கல்லீரல் செயல்பாடு சோதனையைப் (LFTs) பரிந்துரைத்தால், அதற்கு நாம் எவ்வாறு தயாராவது என்பதை அறிவது அவசியம் ஆகும்.
LFT ரத்த பரிசோதனைச் செய்வதற்கு முன்பு, சில நாட்களாக, மருத்துவர், திரவ உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள அறிவுறுத்துவார். இது உங்கள் ரத்த குழாய்களில் நீரேற்றமாக வைத்திருக்க உதவும். இதன்மூலம், குருதிச் சேகரிப்பாளர்கள் விரைந்து ரத்தம் சேகரிக்க இயலும். சோதனைக்குக் குறைந்தது 24 மணிநேரத்திற்கு முன்னதாக, மது குடிப்பதைத் தவிர்த்துவிட வேண்டும். மதுப்பழக்கமானது, கல்லீரல் செயல்பாட்டில் தலையிடும் வாய்ப்பு இருப்பதால், அது தவறான சோதனை முடிவுகளைத் தரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
சோதனைக்கு முந்தைய நாட்களில், ஆரோக்கியமான உணவுமுறையை மேற்கொள்வது அவசியம் ஆகும். ஆரோக்கியமான உணவுமுறையானது, கல்லீரலைச் சிறப்பாகச் செயல்பட வழிவகுக்கிறது.
நீங்கள் உடல்நலப் பாதிப்பிற்கு வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் விவரங்களை, மருத்துவரிடம் முன்கூட்டியே தெரிவித்துவிடுவது நல்லது. சில மருந்துகள், கல்லீரல் செயல்பாட்டுச் சோதனை முடிவுகளில் பாதிப்பை ஏற்படுத்த கூடும். இந்த விவகாரத்தில், மருத்துவர் நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் அளவுகளில் மாற்றம் செய்தோ அல்லது குறிப்பிட்ட மருந்துகள் உட்கொள்வதைத் தற்காலிகமாக நிறுத்தவோ அறிவுறுத்துவார்.
சோதனைக்கு முன்னதாக, குறைந்தது 8 முதல் 12 மணிநேரம் எதுவுமே சாப்பிடாமல் இருக்க மருத்துவர் அறிவுறுத்துவார். இதன் பொருள் என்னவெனில், இந்த நேரத்தில் தண்ணீரைத் தவிர, வேறு எதையும் குடிக்கவோ அல்லது சாப்பிடவோ கூடாது. சாப்பிடாமல், உண்ணாவிரதம் இருப்பதன் மூலம், துல்லியமான சோதனை முடிவுகளைப் பெற முடிகிறது.
சோதனையின் போதும், பிறகும் என்ன நடக்கிறது?
LFT சோதனையின் போது, உங்கள் கையில் உள்ள நரம்பில் இருந்து சிறிய அளவிலான ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, அது பகுப்பாய்விற்காக, ஆய்வகத்திற்கு அனுப்பப்படும். இந்த முழுச் செயல்முறையும், 30 நிமிடங்களுக்குள் நிறைவு பெற்றுவிடும்.
சோதனைக்குப் பிறகு, நீங்கள் வழக்கமாக மேற்கொள்ளும் நடவடிக்கைகள், உணவுமுறைகளைத் தொடங்கலாம். இரத்தம் சேகரிப்பதற்காக ஊசி குத்தப்பட்ட இடத்தில் சிராய்ப்புகள் போன்ற அசவுகரியங்களை அனுபவிக்கலாம், இதுவும் சில நாட்களில் மறைந்துவிடும்.
பகுப்பாய்வுச் சோதனைக்காக, ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட, ரத்த மாதிரியின் சோதனை முடிவுகளை ஓரிரு நாட்களில் பெற முடியும்.
சோதனை முடிவுகளில் குறிப்பிடப்படுவது என்ன?
கல்லீரல் செயல்பாடு சோதனைகளுக்கான முடிவுகள், மேற்கொள்ளப்படும் சோதனைகளைப் பொறுத்து மாறுபடும். LFT ரத்த பரிசோதனையை மேற்கொள்ளும் ஆய்வகம் நிர்ணயித்து உள்ள வரம்பிற்குள் முடிவுகள் வரும்பட்சத்தில், அது சாதாரண சோதனை முடிவுகளாகக் கருதப்படும்.
ஆண்களிடையே மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் சாதாரண நிலை மதிப்புகள் கீழே தொகுக்கப்பட்டு உள்ளன.
- ALT- ஒரு லிட்டருக்கு 7 முதல் 55 யூனிட் வரை
- AST- லிட்டருக்கு 8 முதல் 48 யூனிட் வரை
- ALP – ஒரு லிட்டருக்கு 40 முதல் 129 யூனிட்
- ஆல்புமின் – ஒரு டெசிலிட்டருக்கு 3.5 முதல் 5.0 கிராம்
- மொத்த புரதம்- ஒரு டெசிலிட்டருக்கு 6.3 முதல் 7.9 கிராம்
- பிலிரூபின் – ஒரு டெசிலிட்டருக்கு 0.1 முதல் 1.2 மில்லிகிராம் வரை
- GGT- ஒரு லிட்டருக்கு 8 முதல் 61 யூனிட் வரை
- LD – ஒரு லிட்டருக்கு 122 முதல் 222 யூனிட்
சோதனை முடிவுகள், சாதாரண வரம்பிற்குள் இருப்பதால் மட்டுமே, கல்லீரல் சிறந்த முறையில் செயல்படுகிறது என்பது அர்த்தமல்ல. இதேபோல், முடிவுகள் சாதாரண வரம்பிற்கு வெளியே இருக்கும்பட்சத்தில், அதுவும் கல்லீரலில் ஏதோ தவறு இருப்பதாக அர்த்தமல்ல. முழுமையான சோதனை முடிவுகளைப் பெறுவதற்கு அறிகுறிகள், மருத்துவ வரலாறு, உடல் பரிசோதனைக் கண்டுபிடிப்புகள் போன்ற பிற மருத்துவத் தகவல்களுடன், கல்லீரல் செயல்பாட்டுச் சோதனைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
கல்லீரல் ஆரோக்கியத்தைக் கண்டறிந்து கண்காணிப்பதில் கல்லீரல் செயல்பாட்டுச் சோதனைகள் ஒரு முக்கியமான கருவியாகத் திகழ்கின்றன. கல்லீரல் செயல்பாடு குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், அதை மருத்துவரிடம் கேட்டுத் தெளிவு ஏற்படுத்திக் கொள்வது நல்லது. மருத்துவர், உங்களுக்கு உரிய பரிசோதனையைத் தேர்ந்தெடுக்க உதவுவார். இதன்மூலம், துல்லியமான சோதனை முடிவுகள் பெறுவது சாத்தியமாகும்.
மேற்குறிப்பிட்ட வழிமுறைகளைக் கவனமாகக் கடைப்பிடித்து, உரிய சோதனைகளைச் சரியான முறையில் மேற்கொண்டு, கல்லீரல் உறுப்பின் செயல்பாட்டைச் சீர்படுத்தி வளமான மற்றும் ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக..