MRI ஸ்கேன் சோதனை- பயன்களும் பக்கவிளைவுகளும்…
MRI என்று சுருக்கமாக அழைக்கப்படும் காந்த அதிர்வு இமேஜிங் சோதனையானது, காந்தப்புலம், ரேடியோ அலைகள் மற்றும் கணினியின் உதவியுடன், உடலின் உள் உறுப்புகளை, துல்லியமாகப் படம் பிடிக்க உதவும் சோதனை முறை ஆகும். MRI ஸ்கேனர்ப் பகுதியில் பெரிய அளவிலான வட்டவடிவ காந்தம் உள்ளது. ஸ்கேன் எடுக்க வேண்டிய நபர், காந்தம் பொருத்தப்பட்டு இருக்கும் பகுதியின் கீழ்ப்புறத்தில் படுக்க வைக்கப்படுவார். இந்தக் காந்தத்தின் மூலமாகத் தோற்றுவிக்கப்படும் காந்தப்புலம், நோயாளியின் உடலில் உள்ள ஹைட்ரஜன் அணுக்களில் உள்ள புரோட்டான்களை ஒரே திசையில் ஒருங்கமைக்கிறது. பின், ரேடியோ அலைகள் கற்றைகளாகச் செலுத்தப்படுகின்றன. புரோட்டான்கள், மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் போது வெளிப்படும் சிக்னல்களை, MRI ஸ்கேனரில் உள்ள ரிசீவர்ப் பெற்றுக் கொள்கிறது. ஸ்கேனர் உடன் இணைக்கப்பட்டு உள்ள கணினி, இந்தச் சிக்னல்களைத் துல்லியமான படங்களாக நமக்கு வழங்குகின்றது. MRI ஸ்கேன், உடலில் ஏற்படும் சிறிய அளவிலான பாதிப்பையும் துல்லியமாகப் படம்பிடிக்கும் திறன் கொண்டது என்று சொன்னால், அது மிகையல்ல.
MRI ஸ்கேன் சோதனையின் பயன்கள்
உடலில் ஏற்படும் எந்தவொரு பாதிப்பையும் துல்லியமாகக் கண்டறிய MRI ஸ்கேன் சோதனைகள் பயன்படுவது நாம் அனைவரும் அறிந்ததே. பல்வேறு சோதனைகள் மேற்கொண்ட போதிலும், விடைகாண முடியாத பாதிப்புகளையும், MRI ஸ்கேன் சோதனைகளின் மூலம் கண்டறிய முடிவது தான் அதன் தனிச்சிறப்பு.
தலைப்பகுதியில் மேற்கொள்ளப்படும் MRI ஸ்கேன் சோதனையின் மூலம், மூளைப்பகுதியில் தோன்றும் ரத்த கசிவு, வீக்கம் போன்ற பாதிப்புகளை எளிதில் கண்டறிய முடியும். இதுமட்டுமல்லாது, பக்கவாதம், மூளைக்கட்டிகள், முதுகெலும்புப் பகுதியில் ஏற்படும் அழற்சி, கட்டிகள் போன்ற அசாதாரண நிகழ்வுகளையும், இதன்மூலம் கண்டறிய இயலும்.
நரம்பியல் நிபுண்ர்கள், MRI ஸ்கேன் சோதனையை, மூளையின் உடற்கூறியல் ஆய்வை மேற்கொள்ளப் பயன்படுத்துவது மட்டுமல்லாது, அதிர்ச்சி சம்பவங்களுக்குப் பிறகு முதுகெலும்பின் ஒருங்கிணைவு நிகழ்வை மதிப்பிடவும் பயன்படுத்துகின்றனர். மேலும் முதுகெலும்பு நாண்களில் உள்ள வட்டுகள் தொடர்புடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவுகிறது.
இதயம் மற்றும் பெருந்தமனியின் கட்டமைப்பை மதிப்பிட பயன்படுகிறது.
வயிற்றுப்பகுதியில் உள்ள உறுப்புகள் மற்றும் சுரப்பிகள் குறித்த துல்லிய தகவல்களை வழங்குகின்றது.
எலும்புகள், மூட்டு இணைப்புகள் மற்றும் மென் திசுக்களின் கட்டமைப்பை எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலான படங்களை வழங்குகிறது.
மேலும் வாசிக்க : MRI ஸ்கேன்கள் – முழுமையான தகவல்கள்
பாதுகாப்பு அம்சங்கள்
நோய்களைக் கண்டறிய உதவும் மற்ற இமேஜிங் சோதனை முறைகளை ஒப்பிட்டும் போது, MRI ஸ்கேன் சோதனையில், கதிரியக்கம் பயன்படுத்தப்படாததால், இது மிகவும் பாதுகாப்பான சோதனை முறையாக உள்ளது. பேஸ்மேக்கர், மெட்டல் பிளேட் உள்ளிட்ட உலோகம் சார்ந்த பொருட்களை உடலில் பொருத்திக் கொண்டவர்கள், இந்தச் சோதனையைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இந்தச் சோதனையில் வலிமையான காந்தப்புலம் பயன்படுத்தப்படுவதால், விரும்பத்தகாத பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
பக்கவிளைவுகள்
MRI ஸ்கேன் சோதனையில், குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்குப் பக்கவிளைவுகள் எதுவும் இல்லை என்றபோதிலும், சோதனையின் போது ஏற்படும் சத்தம், சிலருக்குப் பய உணர்வை ஏறப்டுத்த கூடும் ஸ்கேன் படங்களின் துல்லியத்தன்மையை அதிகரிக்கப் பயன்படுத்தப்படும் கான்டிராஸ்ட் ஏஜெண்ட்டான கேடோலினியம் பயன்பாடு, பெரும்பாலானோருக்கு எவ்விதப் பாதிப்பை ஏற்படுத்தாத நிலையில், சிலருக்குப் படை நோய் மற்றும் சொறி, சிரங்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில், கேடோலினியம் அடிப்படையிலான மருந்து, குறிப்பாகக் குழந்தைகளிடையே, வாந்தி மற்றும் குமட்டல் உணர்வை ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்களுக்கு, நெஃப்ரோஜெனிக் சிஸ்டமிக் ஃபைப்ரோசிஸ் பாதிப்பு, மாரடைப்பு அபாயம், சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துவதாக உள்ளது.
கேடோலினியம் மருந்து, உடலின் முக்கிய மண்டலங்களான நரம்பு மண்டலம் மற்றும் சுவாச மண்டலத்தையும், இதயம்,தோல், மூளை உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகளைப் பாதிக்கும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
நரம்பு மண்டலம், சிறுநீரகப் பிரச்சினை, மாரடைப்பு அபாயம் உள்ளவர்களுக்கு என MRI ஸ்கேன் சோதனை ஆபாந்பாந்தவனாக விளங்கி வருகிறது என்று கூறினால், அது மிகையல்ல….