நரம்பியல் பாதிப்புகள் வாழ்க்கையை எங்ஙனம் பாதிக்கிறது?
நரம்பியல் பாதிப்பு என்பது மூளை, முதுகெலும்பு மற்றும் புற நரம்பு வரையிலான பகுதிகளைப் பாதிக்கும் நிகழ்வாகும். நரம்பியல் பாதிப்பிற்கு உள்ளானவர்கள் நினைவாற்றல் இழப்பு, உணர்ச்சி சவால்கள் உள்ளிட்ட இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர்.
சமீபத்திய அறிக்கைகளின்படி, சர்வதேச அளவில் நிகழும் மரணங்களில், 6.8 மில்லியன் அளவிலான மரணங்கள், நரம்பியல் பாதிப்புகளின் மூலமாகவே ஏற்படுகின்றன. இந்த நரம்பியல் பாதிப்புகள், அன்றாட வாழ்க்கையைக் கணிசமான அளவிற்குப் பாதிக்கின்றன. நரம்பியல் பாதிப்புகள் மற்றும் அவற்றைச் சமாளிப்பதற்கான உத்திகள் குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாகக் காண்போம்.
பொதுவான நரம்பியல் பாதிப்புகள்
மக்களைப் பாதிக்கும் வகையிலான பொதுவான நரம்பியல் பாதிப்புகள் கீழே பட்டியலிடப்பட்டு உள்ளன.
- பாராலைசிஸ்
- அல்சைமர் நோய்
- வலிப்பு நோய்
- பக்கவாதம்
- ஒற்றைத் தலைவலி
- பார்கின்சன் நோய்ப்பாதிப்பு
- மூளையில் கட்டி உள்ளிட்டவை ஆகும்.
ஒவ்வொரு வகை நரம்பியல் பாதிப்பும், அதற்கே உரித்தான அறிகுறிகள் மற்றும் சவால்களைத் தன்னகத்தே கொண்டு உள்ளன. ஒவ்வொரு பாதிப்பிற்கும் எனச் சிறப்புச் சிகிச்சை உத்திகள் அவசியமாக உள்ளன.
நரம்பியல் பாதிப்புகளும், தினசரி வாழ்க்கையில் அவைகள் ஏற்படுத்தும் விளைவுகளும்…
நரம்பியல் பாதிப்புகள், அன்றாட வாழ்க்கையைக் கணிசமான அளவில் சீர்குலைப்பதோடு மட்டுமல்லாது, தொழில்சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் தனிப்பட்ட உறவுகள் விவகாரத்திலும் பெரும்பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. நரம்பியல் பாதிப்பிற்கு உள்ளான நபர்கள் நாள்பட்ட வலி உணர்வு, வலிப்புத் தாக்கங்கள், உடல் செயல்பாடுகளில் சுணக்கம் உள்ளிட்ட பாதிப்புகளுடனேயே தங்கள் வாழ்நாளைக் கழித்து வருகின்றனர். இந்தப் பாதிப்புகள், தினசரி வாழ்க்கையையே, போராட்ட களமாக மாற்றி விடுகின்றன. நரம்பியல் பாதிப்பு கொண்டவர்கள், உடல் அறிகுறிகள் மட்டுமல்லாது, மனச்சோர்வு, பதட்டம், தனிமை உணர்வு உள்ளிட்ட உணர்ச்சி சார்ந்த இன்னல்களுக்கும் உட்படுகின்றனர். நினைவாற்றல் இழப்பு, சிந்திப்பதில் பிரச்சினை, முடிவெடுப்பதில் சிரமங்கள் உள்ளிட்ட இடர்பாடுகளையும் அவர்கள் சந்திக்கின்றனர். நினைவாற்றல் இழப்பு நிகழ்வானது, அவர்களின் சமூகம் சார்ந்த தொடர்புகளை வெகுவாகப் பாதிக்கின்றன. இது அவர்களை அவர்கள் சார்ந்த சமூகத்தில் இருந்து அந்நியப்படுத்தலுக்கு வழிவகுக்கின்றன. இது அவர்களின் உணர்ச்சித் துயரத்தை மேலும் அதிகரிப்பனவாக உள்ளது.
இந்தியாவில் பெரும்பாலான மக்களிடையே காணப்படும் பொதுவான நரம்பியல் பாதிப்புகள் கீழே வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
பெருமூளை வாதம்
குறிப்பிட்ட நபரின் நடை மற்றும் தோரணை நிகழ்வுகளில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தவல்லதாக, பெருமூளை வாத பாதிப்பு விளங்குகிறது. இது நபரின் உடல் சமநிலை, நடத்தல் உள்ளிட்ட நிகழ்வுகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பேசுதல், சாப்பிடுதல், உறங்குதல், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்தல், மற்றவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளுதல் உள்ளிட்ட அன்றாட நிகழ்வுகளையும் சவால் மிகுந்ததாக மாற்றுகிறது.
வலிப்பு நோய்
மூளையின் ஒழுங்கற்ற மின் செயல்பாட்டால், வலிப்பு நோய்ப் பாதிப்பானது ஏற்படுகிறது. இதன்விளைவாக, வலிப்புத்தாக்கங்கள் ஏற்படுகின்றன. எதிர்பாராத நேரத்தில் திடீரென்று நிகழும் வலிப்புத் தாக்கங்களால், அன்றாடப் பணிகளான வாகன ஓட்டுதல், கற்றல் மற்றும் கற்பித்தல், பணிபுரிதல் உள்ளிட்ட நிகழ்வுகளில் பெரும்பாதிப்பு ஏற்படுகின்றன. சமூகத் தொடர்புகளிலும் பிணக்குகளை ஏற்படுத்துகின்றன. வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர் எனும் பெயர், மருந்துகள் ஏற்படுத்தும் பக்கவிளைவுகள் உள்ளிட்டவை, அக்குறிப்பிட்ட நபரின் வாழ்க்கைத்தரத்தையே மிக மோசமாகப் பாதிக்கின்றன.
அல்சைமர் நோய்ப் பாதிப்பு
மூளைப்பகுதியில் உள்ள நாம்பு செல்கள் படிப்படியாகச் சிதைவடைவதன் மூலம், சிந்தனை மற்றும் நினைவாற்றலில் பாதிப்பு ஏற்படுத்தவல்ல நிலையே, அல்சைமர் நோய்ப்பாதிப்பு என்று குறிப்பிடுகிறோம். அல்சைமர் நோய்ப்பாதிப்பை, சுருக்கமாக மறதி நோய் என்றும் அழைக்கிறோம். அவர்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ள முடியாமல் தவிக்கும் நிலை, சொல்லும் விஷயங்களைப் புரிந்துகொள்ள இயலாத நிலை, பேசுவதில் சிரமம், முடிவுகளை எடுப்பதில் தடுமாற்றம் போன்ற நிகழ்வுகளால், மிகவும் அவதிப்படுவர். நீங்கள் தன்னிச்சையாக மேற்கொள்ளும் சில நடவடிக்கைகளுக்குக் கூட, பிறரின் உதவி அவசியமாகும்.
பக்கவாதம்
மூளைக்கு, ரத்த ஓட்டம் திடீரெனத் தடைபடுவதன் மூலமாக, பக்கவாத பாதிப்பு ஏற்படுகிறது. பேசுவதில் சிரமங்கள், உடல் செயல்பாடுகளில் சுணக்கம், உடல் பலவீனம், உடலின் ஏதாவது ஒருபகுதியில் பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. பக்கவாத பாதிப்பிற்கு உள்ளான நபர்கள், பொருட்களை அடையாளம் கண்டுகொள்வதற்கும், தெளிவாகப் பேசுவதற்கும் மிகுந்த சிரமப்படுவர். இந்தப் பாதிப்புகள், அவர்களின் சமூகத் தொடர்புகள் உள்ளிட்டவற்றிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளன.
பார்கின்சன் நோய்ப்பாதிப்பு
பார்கின்சன் நோய்ப்பாதிப்பானது, உங்கள் நகர்தல் தன்மையைப் பாதிக்கிறது, கைகளில் நடுக்க உணர்வை ஏற்படுத்துகின்றன. உடல் தசைகள் கடினத்தன்மையை அடைவதால், உடலின் செயல்பாடுகள் மெதுவாக நடைபெறுகின்றன. பாதிப்பு தீவிரமடையும் போது, உடலின் சமநிலையைப் பேணிக்காப்பதிலும், சீராக நடப்பதிலும் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. இது நினைவாற்றல், மனநிலை, உறக்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் பாதிப்பை உண்டாக்குகின்றன. ஆடை அணிதல், சாப்பிடுதல் உள்ளிட்ட அன்றாட நிகழ்வுகள் கூட, அவர்களுக்குச் சவால்மிகுந்ததாக மாறுகின்றன. தனிமை உணர்வு மற்றும் மற்றவர்களைச் சார்ந்து இருக்கும் தன்மையானது, அவர்களுக்கு மேலும் சுமைகளை அதிகரிப்பனவாக உள்ளது.
நரம்பியல் பாதிப்புகளின் சிக்கலான மற்றும் மாறுபட்ட தன்மையானது, பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கான கவனிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பனவாக உள்ளது. மருத்துவ தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் மூலம் செயல்பாட்டுக் காந்த அதிர்வு இமேஜிங் (FMRI), பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி (PED), மேக்னடோஎன்செபலோகிராபி (MEG) உள்ளிட்ட மேம்பட்ட இமேஜிங் நுட்பங்களின் மூலம், நோயறிதல் நிகழ்வுகள் எளிமையாக்கப்பட்டு உள்ளன. இந்த மேம்பட்ட மருத்துவ வசதிகள், சிகிச்சைகளின் தரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாது, நோயாளிகளின் தற்போதைய உடல்நிலைக்கு ஏற்ப, புதுமையான தலையீடுகளை அளிக்கத் தேவையான அதிகாரங்களை, மருத்துவ நிபுணர்களுக்கு வழங்குகின்றன.
மேலும் வாசிக்க : நரம்பியல் பாதிப்புக்கு உள்ளானோரின் நலன் காப்போமா?
நரம்பியல் பாதிப்புகளைச் சமாளித்து, அன்றாட நடவடிக்கைகளை நிர்வகித்தல்
சுறுசுறுப்பாக இருத்தல்
உடலை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் நிகழ்வானது, நரம்பியல் நோய்ப்பாதிப்பிற்கான சிகிச்சையின் முக்கிய படிநிலை ஆகும். மூளையின் ஆரோக்கியம் மற்றும் செயல்பாட்டை மேம்படுத்துவதில், உடற்பயிற்சிகளின் பங்கு அளப்பரியதாக உள்ளது.
மன அழுத்த மேலாண்மை
யோகா, தியானம் உள்ளிட்ட பயிற்சிகள், நரம்பியல் பாதிப்புகள் தொடர்பான மன அழுத்தத்தை நிர்வகிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
உளவியல் சிகிச்சை
உளவியல் சிகிச்சையின் அமர்வுகள், தகவல்தொடர்புகளை மேம்படுத்துதல், பணிகளைத் திறம்பட நிர்வகித்தல், தன்னம்பிக்கையை அதிகரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்துகின்றன. தேவைப்படின், அவர்களின் கடந்தகால நிகழ்வுகளும் ஆராயப்படுகின்றன.
சுற்றுச்சூழல் சார்ந்த ஆபத்துக் காரணிகள்
சரியான அளவு கொண்ட காலணிகள், வீட்டின் அறைகளில் போதுமான வெளிச்சம் படுதல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் சார்ந்த காரணிகள், நரம்பியல் பாதிப்பு நோயாளிகள், கீழே விழும் ஆபத்தைக் குறைக்கின்றன. அல்சைமர் (மறதி) மற்றும் பார்கின்சன் நோயாளிகளுக்கும், இந்தக் காரணிகள் பயனளிப்பவைகளாக உள்ளன.
உணர்ச்சி சார்ந்த ஆதரவு
உங்கள் அன்புக்குரியவர்கள் மற்றும் ஆதரவுக்குழுக்கள் காட்டும் கரிசனம், உங்களுக்குத் தக்கச் சமயத்தில் ஆறுதல் உணர்வையும், தனிமையில் இருப்பதற்கான வாய்ப்பையும் குறைக்கின்றன. இதன்மூலம், உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.
மேற்குறிப்பிட்ட வழிமுறைகளைக் கவனமாகப் பின்பற்றி, நரம்பியல் பாதிப்புகளில் இருந்து பூரண நலம் பெற்று, வளமான மற்றும் ஆரோக்கியமான நல்வாழ்வு வாழ வழிவகைச் செய்வோமாக…