கீல்வாதம் – கட்டுக்கதைகளும், அதன் உண்மைகளும்!
ஆர்த்ரைடிஸ் எனப்படும் கீல்வாத பாதிப்பு என்பது, மூட்டுகளில் வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் நிலை ஆகும். கீல்வாத பாதிப்பானது, ஆஸ்டியோஆர்த்ரைடிஸ் அல்லது கீல்வாதம் மற்றும் ருமாட்டாய்டு ஆர்தரைடிஸ் அல்லது முடக்கு கீல்வாதம் எனும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். கீல்வாதம் என்பது பொதுவான நிலை என்றபோதிலும், அதன் தன்மை, முன்னேற்றம் சிகிச்சை விருப்பங்கள் தொடர்பாக, நிறைய கட்டுக்கதைகள் தொடர்ந்து உலவி வருகின்றன. இதன் உண்மைத்தன்மையை அறிவது மிக முக்கியமானது ஆகும்.
மூட்டு எலும்புகளுக்கிடையே உள்ள குருத்தெலும்பு தேய்மானம் அடையும்போது, மூட்டு அழற்சி பாதிப்பு ஏற்படுகிறது. முன்காலத்தில் வயதானவர்களுக்கு ஏற்பட்டு வந்த இந்தப் பாதிப்பானது, தற்போது இளைய தலைமுறையினரிடையேயும் அதிகம் ஏற்பட்டு வருகிறது.
உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், ஆரோக்கியமான உடல் திசுக்களைத் தவறுதலாகத் தாக்குகிறது. இதனால் முடக்குவாத பாதிப்பு ஏற்படுகிறது. இது மூட்டுகளுக்குச் சேதத்தை ஏற்படுத்துகிறது. மேலும் தசைகள், இணைப்புத் திசுக்கள், தசைநாண்கள், தசைநார்கள் ஆகியவைப் பாதிக்கப்படுகின்றன. 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு, இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது. இது அன்றாட நடவடிக்கைகளைக் கடுமையாகப் பாதிக்கிறது.
கீல்வாதம் மற்றும் முடக்குவாத பாதிப்புகளைத் தவிர்த்து
- சிறார்க் கீல்வாதம்
- சோரியாடிக் கீல்வாதம்
- ஸ்பாண்டிலோஆர்த்ரோபதி
- சிஸ்டமிக் லூபஸ் எரித்மாடோசஸ்
- தொற்று மற்றும் எதிர்வினைக் கீல்வாதம் உள்ளிட்ட கீல்வாத பாதிப்புகள் பரவலாக உள்ளன.
கீல்வாத பாதிப்பு தொடர்பான கட்டுக்கதைகளும், அதன் உண்மைகளும்..
வயதானவர்களுக்கு மட்டுமே கீல்வாத பாதிப்பு ஏற்படும்
கீல்வாத பாதிப்பு, வயதானவர்களுக்கு ஏற்படுவது பொதுவான நிகழ்வே ஆகும். ஆனால் தற்போதைய சூழலில் கீல்வாத பாதிப்பானது அனைத்து வயதினருக்கும் ஏற்படுகிறது. முடக்குவாத பாதிப்பானது, குறிப்பாக 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களிடம் அதிகம் காணப்படுகிறது.
மூட்டுகள் வலித்தால், அது கீல்வாத பாதிப்பு ஆகும்
இது தவறான கருத்து ஆகும். எல்லா மூட்டு வலிகளும், கீல்வாத பாதிப்பிற்குக் காரணமாக அமைவதில்லை. டெண்டினிடிஸ், புர்சிடிஸ், காயங்கள் உள்ளிட்டவை மூட்டுகளிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வலி ஏற்படுவதற்குக் காரணமாக அமைகின்றன.
கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், உடற்பயிற்சி செய்யக் கூடாது
உடற்பயிற்சி என்பது வாழ்க்கையில் நாம் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை ஆகும். இதை ஒருபோதும் நாம் தவிர்க்கக் கூடாது. கீல்வாத பாதிப்பிற்கு உள்ளானவர்கள், உடற்பயிற்சியை மேற்கொள்வதற்கு முன்பாக, மருத்துவரிடம் தக்க ஆலோசனைப் பெற்று செயல்படுவது நல்லது. உடற்பயிற்சிகள் மூட்டுகளின் இயக்கத்தை மேம்படுத்துகின்றன. மேலும் மூட்டுகளின் வலிமையையும் பராமரிக்க உதவுகின்றன.
கீல்வாத பாதிப்பிற்கு உள்ளானவர்கள் தினசரி உடற்பயிற்சி செய்வது நல்லது. இதனால் வலி உணர்வு குறைகிறது. உடலின் ஆற்றல் அளவு அதிகரிக்கிறது. உறக்கமும் செயல்பாடுகளும் சிறப்பாக இருக்கும். இடுப்பு மற்றும் முழங்கால் எலும்பு மூட்டு வீக்கத்திற்கான சிகிச்சையின் முக்கிய பகுதியாக, உடற்பயிற்சி இடம்பெற வேண்டியது அவசியமாகும்.
மூட்டுப் புண்களுக்கு, குளிர்ச் சிகிச்சையைவிட வெப்பச் சிகிச்சையே உகந்தது
- இது முற்றிலும் தவறான கருத்து ஆகும். மூட்டுப் புண்களுக்கு, குளிர் மற்றும் வெப்பச் சிகிச்சைகள் உரிய பலனை அளிக்கின்றன.
- மூட்டுகள் மற்றும் தசைகளில் ஏற்படும் வலி மற்றும் விறைப்பைக் குறைக்க வெப்பச் சிகிச்சையானது உதவுகிறது.
- மூட்டுக்களில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க, குளிர்ச் சிகிச்சையானது உதவுகிறது.
- உடற்பயிற்சிக்கு முன்னர், மூட்டு கடினமாக இருக்கும்போது வலி ஏற்படின், வெப்பச் சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும். உடற்பயிற்சிக்குப் பிறகு, மூட்டுப்பகுதிகளில் வீக்கம் இருப்பின், குளிர்ச் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
கீல்வாத பாதிப்பைத் தடுக்க இயலாது
வயது மூப்பு உள்ளிட்ட காரணிகளைப் புறக்கணிக்க முடியாது என்பதால், கீல்வாத பாதிப்பின் ஒவ்வொரு நிகழ்வையும் குறிப்பிட்டுத் தடுக்க இயலாது என்பது வாஸ்தவம் தான். கீல்வாத பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்கச் சில ஆபத்துக் காரணிகளை நாம் தவிர்க்க வேண்டியது அவசியம் ஆகும்.
- உடல் பருமன் கொண்டவர்களுக்கு, முழங்கால் எலும்பு மூட்டு வலி உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் எடையைச் சரியான அளவில் பேணிக்காப்பதன் மூலம், கீல்வாத பாதிப்பின் அபாயத்தைக் குறைக்கும்.
- புகையிலைப் பழக்கமானது, முடக்குவாத பாதிப்பை ஊக்குவிப்பதாக உள்ளது.
- விளையாடுதல், உடற்பயிற்சி போன்ற இயக்க நிகழ்வுகளின் போது, மூட்டுக் கவசம், கையுறைப் போன்ற தக்கப் பாதுகாப்பு அம்சங்களைப் பயன்படுத்துவதன் மூலம், மூட்டுக்களைப் பாதுகாத்து, எதிர்காலத்தில் கீல்வாத பாதிப்பு ஏற்படுதலைத் தவிர்க்கலாம்.
மேலும் வாசிக்க : கீல்வாதத்தை உடற்பயிற்சி மூலம் குணப்படுத்த இயலுமா?
நோயறிதலில் கீல்வாதம் இருப்பது உறுதியானால், அதற்குப்பிறகு எதுவும் செய்ய முடியாது
கீல்வாத பாதிப்பிற்கு என்று குறிப்பிட்ட எவ்விதச் சிகிச்சையும் இல்லை என்றபோதிலும், அதன் வகையைப் பொறுத்து, அதன் போக்கு மாறுபடுகின்றன. கீல்வாதத்தின் சில அறிகுறிகளைக் குறைக்கவும், நோய்ப்பாதிப்பின் தீவிரத்தைத் தாமதப்படுத்தவும் மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. ஆரோக்கியமான உடல் எடைப் பராமரிப்பு, புகைப்பழக்கத்தைக் கைவிடுதல், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுமுறை, போதிய அளவிலான உறக்கம் உள்ளிட்ட வாழ்க்கைமுறை நடவடிக்கைகள், கீல்வாத பாதிப்பின் தீவிரத்தைத் திறன்பட கட்டுப்படுத்துகின்றன.
பருவநிலையில் ஏற்படும் மாற்றங்கள் கீல்வாத பாதிப்பை மேலும் மோசமாக்கும்
மழை மற்றும் அதிக ஈரப்பதம் கொண்ட பருவநிலை, கீல்வாத பாதிப்பின் அறிகுறிகளை மேலும் மோசமாக்குகிறது என்ற கருத்து முழுவதும் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.
மருத்துவத் துறையில் பெருமளவில் முன்னேற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையிலும், கீல்வாத பாதிப்பு குறித்து நாம் இன்னமும் அதிகம் தெரிந்துகொள்ள வேண்டியது உள்ளது. உடற்பயிற்சி, சீரான மற்றும் சத்தான உணவுமுறை, போதிய அளவிலான உறக்கம் உள்ளிட்ட வாழ்க்கைமுறையைத் தவறாமல் கடைபிடிப்பதன் மூலம், சில வகையான கீல்வாத பாதிப்பின் அபாயங்களில் இருந்து நாம் நம்மைத் தற்காத்துக் கொள்ள இயலும்.
கீல்வாத பாதிப்பு தொடர்பான கட்டுக்கதைகளைப் புறந்தள்ளி, உண்மைத்தன்மையை அறிந்து, அப்பாதிப்பில் இருந்து முழுமையான நலம் பெற்று, ஆரோக்கியமான மற்றும் வளமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…