பச்சிளம் குழந்தைகளுக்குச் செய்யப்படும் NBS சோதனை
குடும்பத்தில் புதிய வரவான குழந்தைப் பிறப்பு நிகழ்வு என்பது, உலகமெங்கிலும் உள்ள மக்களிடையே ஒரு உற்சாகமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. பிறந்த குழந்தைக்குப் போதிய நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாததால், தொற்றுநோய்கள் எளிதில் தாக்கலாம். எனவே, மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு முன், அவர்களின் சுகாதார நிலையைச் சரிபார்ப்பது அவசியம். இதன் அவசியத்தை உணர்ந்த மருத்துவமனைகள், புதிதாகப் பிறந்த குழந்தையின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த முயற்சிக்கின்றன. மருத்துவமனைகள், இதற்காக, NBS எனப்படும் ஸ்கிரீனிங் சோதனைகளை மேற்கொள்கின்றன
NBS எனப்படும் ஸ்கிரீனிங் சோதனைகளின் முக்கியத்துவம், அதன் செயல்முறை மற்றும் சோதனை முடிவுகள் குறித்து விரிவாகக் காண்போம்.
NBS சோதனை என்றால் என்ன?
NBS சோதனை என்பது, புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்குச் செய்யப்படும் ரத்த பரிசோதனை ஆகும். இந்தச் சோதனை, குழந்தைப் பிறந்த முதல் சில நாள்களுக்குள் செய்யப்படுகிறது. இதன்மூலம், ஏதாவது பாதிப்பு இருப்பது துவக்கத்திலேயே கண்டறியப்பட்டு அதற்கு உரிய சிகிச்சை வழங்கப்படுகிறது.
இந்தச் சோதனையின் மூலம், ஃபீனைல்கீட்டோயூரியா (PKU), பிறக்கும்போதே ஹைப்போதைராய்டிசம், கடுமையான ஒருங்கிணைந்த நோயெதிர்ப்புக் குறைபாடி (SCID) , சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் போன்ற பாதிப்புகள் கண்டறியப்படுகின்றன.
பாதிப்பின் அறிகுறிகள் தோன்றும் முன்னரே, NBS சோதனையின் மூலம், உரிய பாதிப்புகளை அடையாளம் கண்டறிய இயலும். இதன்மூலம், சிகிச்சையை விரைந்து துவங்கி, பாதிப்பு அடுத்த கட்டத்தை அடைவதற்கு முன்னரே, அதனைக் கட்டுப்படுத்துவதே ஆகும்.
NBS சோதனையின் முக்கியத்துவம்
NBS ரத்த பரிசோதனையானது, சில மருத்துவ நிலைமைகளை அடையாளம் காண உதவுகிறது.
வளர்சிதை மாற்ற பிரச்சினைகள்
மரபியல், உணவுமுறை, வாழ்க்கைமுறைத் தேர்வுகள் போன்ற பல்வேறு காரணிகளால், வளர்சிதை மாற்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மரபியல் ரீதியிலான வளர்சிதை மாற்ற பிரச்சினைகளில் முக்கியப்பங்கு வகிப்பது என்சைம்கள் ஆகும். பிறந்த குழந்தைகளுக்கு, என்சைம்கள் எனும் நொதிகள் சரியாக இல்லாததன் காரணத்தினால், இத்தகைய வளர்சிதை மாற்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
ஹார்மோன் பிரச்சினைகள்
ஹார்மோன்கள் என்பவை, உடலின் பல்வேறு செயல்பாடுகளை நிர்வகிக்க, உடலிலேயே உற்பத்தியாகும் வேதிப்பொருட்கள் ஆகும். சிறுகுழந்தைகளிடையே, சில சுரப்பிகள் அசாதாரண அளவில் ஹார்மோன்களைச் சுரக்கும்போது, அது பிறவி தைராய்டு பிரச்சினைகள் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. தைராய்டு சுரப்பி வளர்சிதை மாற்ற ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. தைராய்டு ஹார்மோன், போதுமான அளவிற்கு உற்பத்தி செய்யாதபோது, அது ஹைப்போதைராய்டிசம் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையின் போது உடல் சோர்வு, உடல் எடை அதிகரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
தைராய்டு ஹார்மோன் அதிகப்படியாக உற்பத்தி செய்யப்பட்டால், அது ஹைப்பர்த் தைராய்டிசம் என்று அழைக்கப்படுகிறது. இது கவலை, உடல் எடை இழப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
ஹீமோகுளோபின் தொடர்பான பிரச்சினைகள்
இரத்த சிவப்பு அணுக்களில் உள்ள புரதமே, ஹீமோகுளோபின் என்று குறிப்பிடப்படுகிறது. இது உடல் செல்கள் அனைத்திற்கும், ஆக்சிஜனைக் கொண்டு செல்கிறது. உடல் செல்களில் ஹீமோகுளோபின் அளவு சரிவடையும்பட்சத்தில், ரத்தசோகை, சோர்வு போன்ற இன்னபிற சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.
சிக்கிள் செல் அனீமியா, தலசீமியா போன்ற பாதிப்புகள், ஹீமோகுளோபின் குறைபாட்டால் ஏற்படுகின்றன. இது மிக எளிதாகக் கண்டறியும் சோதனைகள் என்றபோதிலும், பிறந்த பச்சிளம் குழந்தைக்குக் கண்டறிவதற்கு, NBS சோதனை உதவுகிறது.
NBS சோதனையின் முடிவுகள் எதிர்மறையாக வரும்பட்சத்தில், அது பாதிப்பு இருப்பதாகப் பொருள் கொள்ளாமல், இன்னும் கூடுதலாகச் சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே இதன் அர்த்தம் ஆகும்.
பச்சிளம் குழந்தைகளுக்கு மேற்கொள்ள வேண்டிய NBS சோதனைகள்
புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தைக்குப் பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டாலும், கீழ்க்கண்ட சோதனைகள் முதன்மையானதாகக் கருதப்படுகின்றன.
அப்கர் அளவுகோலில் மதிப்பீடு
புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தைக்கு, இந்த முக்கியமான மற்றும் எளிமையான மதிப்பீட்டுச் சோதனை, நிபுணர்கள் பிறந்த முதல் 5 நிமிடங்களுக்குள் மேற்கொள்கின்றனர். இந்தச் சோதனையில், நாடித்துடிப்பு, தோற்றம், சுவாசம், தசைத் தொனி மற்றும் அனிச்சை ஆகிய ஐந்துப் பிரிவுகளில் ஸ்கிரினீங் சோதனை மதிப்பெண்கள் 0 முதல் 10 வரையிலான அளவில் மதிப்பீடு மேற்கொள்ளப்படுகின்றன.
வைட்டமின் K ஷாட் சோதனை
புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தைகளில், பெரும்பாலானோருக்கு வைட்டமின் K குறைபாடு இருப்பின், அவர்களுக்கு, பிறந்த 6 மணிநேரத்திற்குள், அவர்கள் உடலின் ரத்த உறைதல் திறனை மேம்படுத்தவும், பாதிப்பு அபாயங்களைத் தடுக்கவும் இந்த வைட்டமின் K ஷாட் சோதனைப் பரிந்துரைக்கப்படுகிறது.
மேலும் வாசிக்க : 40 வயதைக் கடந்தவரா – இந்தச் செய்தி உங்களுக்குத்தான்!
NBS சோதனையின் செயல்முறை
பிறந்த சில நாட்களே ஆன குழந்தைக்குச் செய்யப்படும் ஒரு மரபணு பரிசோதனையே, NBS சோதனை ஆகும். இதன் மூலம் பிறவிக் குறைபாடுகளைக் கண்டறியலாம். இந்தப் பரிசோதனை “heel prick test” அல்லது “Guthrie test” என்றும் அழைக்கப்படுகிறது. இது எளிதான மற்றும் விரைவான செயல்முறை ஆகும், இதில் குழந்தையின் கால் நகத்தின் கீழ் உள்ள இடத்திலிருந்து சிறிய ரத்த மாதிரி எடுக்கப்படுகிறது. இந்த ரத்த மாதிரியைப் பகுப்பாய்வு செய்து, மரபணுக் குறைபாடுகள் இருப்பின் கண்டறியப்படுகிறது.
கட்டண விவரங்கள்
NBS சோதனையின் கட்டண விவரங்கள், நாடுகள் வாரியாகவும், மருத்துவ நிறுவனங்கள் வாரியாகவும் வேறுபடுகின்றன. சில நாடுகளில், இந்தச் சோதனையின் கட்டணம் மிக அதிகமாகவும், சில நாடுகளில் குறைந்த அளவு கொண்டதாகவும் உள்ளன. மருத்துவக் காப்பீடு செய்து கொண்டு உள்ள குடும்பங்களுக்கு, இந்தப் பரிசோதனைக்கு, மிகவும் குறைந்த செலவே ஆகின்றது.
உடல் சோதனைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்
- புதிதாகப் பிறந்த குழந்தை மருத்துவமனையில் இருக்கும் போது, குழந்தையின் உடல் பாகங்களில் ஏதாவது அசாதாரணமாக உள்ளதா அல்லது, கை மற்றும் கால் விரல்களின் எண்ணிக்கையில் மாற்றங்கள் உள்ளனவா எனபதைச் சரிபார்க்க வேண்டும்.
- பச்சிளம் குழந்தையின் தலைச் சுற்றளவு மற்றும் நீளத்தை அளவிட வேண்டும்
- குழந்தையின் இடுப்புச் சுழற்சி, தொப்புள் பகுதி மற்றும் அனிச்சைச் செயல் உள்ளிட்டவைகளைச் சரிபார்க்க வேண்டும்.
- குழந்தையின் உள் உறுப்புகளான கல்லீரல், மண்ணீரல், சிறுநீர்கங்கள் உள்ளிட்ட உறுப்புகளை, வெளிப்புறத் தொடுதல் மூலமாக ஆய்வு செய்ய வேண்டும்.
- நோய்த்தொற்றுப் பாதிப்புகளைத் தடுக்க ஹெப்பாடைட்டிஸ் B தடுப்பூசி மற்றும் ஆன்டிபயாடிக் தடுப்பூசிகளைச் செலுத்த வேண்டும்
- குழந்தையின் மலம், சிறுநீர் உள்ளிட்டவற்றையும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
NBS சோதனை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது
- இரத்த பரிசோதனை: குழந்தையின் காலில் இருந்து ரத்த மாதிரி எடுத்து, பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது.
- CCHD ஸ்கிரீன்: குழந்தையின் பாதம் மற்றும் கையை ஒப்பிட்டு ஆக்சிஜன் நிலையைப் பரிசோதிக்க ஒரு உணர்திறன் உபகரணத்தைப் பயன்படுத்தப்படுகிறது.
- காது உணர்திறன் பரிசோதனை: குழந்தையின் காதில் சிறிய மைக்ரோபோன் பொருத்தப்பட்டு, குழந்தையின் கேட்கும் திறனைப் பரிசோதிக்கின்றனர்.
பரிசோதனை முடிவுகள்
NBS பரிசோதனையின் முடிவுகள், பொதுவாக இரண்டு வாரங்களில் கிடைக்கும். சோதனை முடிவு நேர்மறை எனில். , குழந்தைக்குச் சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் அல்லது சிக்கிள் செல் அனீமியா போன்ற பாதிப்புகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதென்று அர்த்தம். இதனை உறுதி செய்ய, மேலும், சில பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும்.
சோதனை முடிவு எதிர்மறை எனில், அதன் முடிவுகள், குழந்தைகளின் பெற்றோர்களுக்குப் பெரும்பாலும் தெரிவிக்கப்படுவது இல்லை.
மேற்குறிப்பிட்ட சோதனைகளைச் சரியாக மேற்கொண்டு, பச்சிளம் குழந்தைகளை, உடல்நலப் பாதிப்பில் இருந்து காத்து, அவர்களின் நலம் காப்போமாக…