அல்சைமர்ப் பாதிப்பைக் குறைக்கும் வாழ்க்கைமுறைகள்
அல்சைமர் நோய்ப்பாதிப்பிற்கான தடுப்பு மருந்துகளை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மற்றும் வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தங்களது புதிய ஆய்வில், தனிப்பயனாக்கப்பட்ட உடல்நலம் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாற்றல் இழப்பைத் தாமதப்படுத்தலாம் அல்லது தடுக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர்.
இரண்டு ஆண்டுகள் கால அளவிலான இந்த ஆராய்ச்சியில், 172 பேரிடம் சிந்தனைத் திறன்கள், ஆபத்துக் காரணிகள் மற்றும் வாழ்க்கைத்தரம் உள்ளிட்ட கேள்விகள் வினவப்பட்டன. அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அல்சைமர் நோய்ப்பாதிப்பின் ஆபத்து அதிகரிக்கும் என்ற எச்சரிக்கை உணர்வால், உடல்நலம் மற்றும் வாழ்க்கைமுறையை மேம்படுத்தும் வகையிலான தனிப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாதவர்களைவிட, இவர்களுக்குச் சிந்தனைத்திறன் சோதனையில் 74 சதவீத அளவிற்கு அதிகரிப்பு கண்டறியப்பட்டு இருந்தது.
இரு பிரிவு பங்கேற்பாளர்களிடையேயான வாழ்க்கைத்தரம் மற்றும் ஆபத்துக் காரணிகளின் அளவீடுகளின் முன்னேற்றங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இது 8 சதவீதம் மற்றும் 145 சதவீதமாக அளவிடப்பட்டு இருந்ததாக, 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட ஆய்வுமுடிவுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
முறையான மல்டி-டொமைன் அல்சைமர் ஆபத்து குறைப்பு சோதனை, SMARRT ஆய்வு என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இந்த ஆய்வானது உடல்நலம் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களின் விளைவுகள் குறித்த பிற ஆராய்ச்சியாளர்களின் முந்தைய நடவடிக்கைகளை இது பின்பற்றுவதாக உள்ளது. ஆனால், இந்த ஆய்வில் ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் தனிப்பயனாக்கப்பட்ட தனிப்பட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இது முதல்முதலாக மேற்கொள்ளப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட ஆய்வு ஆகும். இது சிந்தனைத்திறனின் பல்வேறு பகுதிகளில் தனது ஆதிக்கத்தைச் செலுத்துகிறது. ஆய்வில் பங்கேற்றவர்களின் ஆபத்துக் காரணிகளின் இலக்கானது சுய விவரங்கள், விருப்பத் தேர்வுகள், அவர்களின் முன்னுரிமைகள் உள்ளிட்டவைகளை அடிப்படையாகக் கொண்டது. ஆபத்துக் காரணிகளில் குறிப்பிடத்தக்க அளவிலான குறைப்பைக் கண்டறிந்தது மட்டுமல்லாமல் சிந்தனைத்திறனில் நன்மையை எடுத்துக்கூறும் சோதனைகளில் ஒன்றாக அமைந்து உள்ளது.
முந்தைய ஆய்வுகளில், பெரும்பாலானவர்கள் அல்சைமர் நோய் மற்றும் அதனுடன் தொடர்புடைய டிமென்ஷியா குறித்து கவலைப்படுவது கண்டறியப்பட்டது. அவர்களின் தனிப்பட்ட ஆபத்துக் காரணிகள் அறிந்துகொள்ள ஆர்வம் காட்டினர். டிமென்ஷியா அபாயத்தைக் குறைக்க அவர்கள் வாழ்க்கைமுறைகளில் மாற்றங்களை மேற்கொள்ள உந்துசக்தியாக உள்ளனர்.
அல்சைமர் நோய்ப்பாதிப்பிற்கான வாழ்க்கைமுறை ஆபத்துக் காரணிகள் குறித்து மருத்துவர்கள் அறிந்துள்ள போதிலும், அதைக் குறைப்பதன் மூலம், சிந்தனைத்திறன் மேம்படுமா என்பது தெளிவாகப் புலப்படவில்லை. அல்சைமர்ப் பாதிப்பு தொடர்பான தனிப்பயனாக்கப்பட்ட அணுகுமுறையின் மூலமாக, தனிப்பட்ட ஆபத்துக் காரணிகள் மதிப்பிடப்படுகின்றன. போதிய அளவிலான உறக்கம், உடலின் செயல்பாடுகள், சமூக ஈடுபாடு உள்ளிட்டவைகளின் மூலம், ஆபத்துக் காரணிகளின் தீவிரத்தைக் குறைக்க இயலும். இதன்மூலம், சிந்தனைத்திறனும் மேம்படுகின்றது.
ஒவ்வொரு நபரும் அவர்களது தனித்துவ அடிப்படையில் வேறுபட்டு இருப்பதால், தனிப்பயனாக்கப்பட்ட அணுகுமுறையானது, மருத்துவ நிபுணர்கள், தங்களது பரிந்துரைகளை எல்லோருக்கும் அல்லாது, ஒரு நபருக்கு ஏற்ப வடிவமைக்க உதவுகிறது. தனிப்பயனாக்கப்பட்ட ஊட்டச்சத்து ஆலோசனைகளைப் பெற்றவர்கள், மற்றவர்களைவிட, தங்களது உணவு உட்கொள்ளலை மேம்படுத்தியது மட்டுமல்லாது, மேம்பட்ட வாழ்க்கைமுறைப் பழக்கவழக்கங்களையும் கடைப்பிடித்து வருவது தெரியவந்து உள்ளது.
வாழ்க்கைமுறை ஆபத்துக் காரணிகள்
70 முதல் 89 வயதுக்குட்பட்ட 172 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், டிமென்ஷியா பாதிப்பிற்கான எட்டு ஆபத்துக் காரணிகளில் 2 காரணிகள் அவர்களுக்கு இருந்தது கண்டறியப்பட்டது.
- குறைந்த அளவிலான உடல் செயல்பாடுகள் அல்லது உடல் செயலின்மை
- இரத்த அழுத்தத்தில் ஒழுங்கற்ற நிலை
- கட்டுப்பாடு அற்ற நீரிழிவுப்பாதிப்பு நிலை
- போதிய அளவிலான உறக்கம் இல்லாத நிலை
- மருந்துகளின் பயன்பாட்டினால், சிந்தனைத்திறனில் வீழ்ச்சி ஏற்படும் அபாயம்
- விரைவில் மனச்சோர்வு ஏற்படுதல்
- வாட்டும் தனிமை உணர்வு
- புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர்
ஆய்வில் பங்கேற்றவர்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள், செவிலியர் மற்றும் மருத்துவ பயிற்சியாளர்களிடமிருந்து தனிப்ப்யனாக்கப்பட்ட பயிற்சியைப் பெற்றிருந்தனர். அவர்கள் குறிப்பிட்ட ஆபத்துக்காரணிகளைத் தேர்ந்தெடுத்து, அதற்கான உதவியைப் பெறவும் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் வாசிக்க : நோயறிதல் நிகழ்வில் செயற்கை நுண்ணறிவின் பங்கு
பங்கேற்பாளர்கள் தங்கள் இலக்குகளை மதிப்பிட சில மாதங்களுக்கு ஒருமுறைப் பயிற்சி அமர்வுகளில் பங்கேற்றனர்.கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இந்த அமர்வுகள், தொலைபேசி வாயிலாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சி பெற்றவர்கள், 2 ஆண்டுகளுக்குப் பின் நடத்தப்பட்ட சிந்தனைத்திறன் சோதனையில், பயிற்சி பெறாதவர்களைவிட 74% மேம்பாடு அடைந்திருந்தனர்.தனிப்பயனாக்கப்பட்ட அணுகுமுறை உடன், ஆபத்துக் காரணிகளைக் குறைக்க முற்பட்டால், அதன்மூலம், சிந்தனைத்திறனை மேம்படுத்த இயலும், மேலும் அல்சைமர் நோய்ப்பாதிப்பின் தீவிரத்தையும் தடுக்க முடியும் என்பது ஊர்ஜிதமாகி உள்ளது.
வாழ்க்கைமுறையில் மாற்றங்கள் மற்றும் ஆபத்துக்காரணிகளை அடையாளம் கண்டு குறைத்துக் கொண்டு, அல்சைமர்ப் பாதிப்பில் இருந்து விடுபட்டு, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…