வாழ்க்கைமுறை நோய்களைத் தடுப்பது எப்படி?
வாழ்க்கைமுறை நோய்கள் என்பது ஏதோ ஒரு சிலருக்கு மட்டுமே வரும் என்ற காலம் மாறி, தற்போது அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கும் நோயாக மாறிவிட்டது என்பதே கசப்பான உண்மை.
வாழ்க்கைமுறைத் தொடர்பான நோய்கள் அல்லது பரவும் தன்மையற்ற நோய்கள், நம் அன்றாடப் பழக்கவழக்கங்களின் காரணமாக வருவதே ஆகும்.
உடற்பருமன், உறக்கமின்மை, இதய நோய்கள், புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள், வாழ்க்கைமுறை நோய்களாக வரையறுக்கப்பட்டு உள்ளன. வாழ்க்கைமுறை நோய்கள் உடல்நலம் மற்றும் பொருளாதாரத்தை பாதிக்கின்றன. ஆனால், அன்றாட பழக்கங்களில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் இவற்றைத் தவிர்க்க முடியும்.
வாழ்க்கைமுறை நோய்களுக்கு வழிவகுக்கும் காரணிகள்
வாழ்க்கைமுறை நோய்களுக்கு வழிவகுக்கும், நம் அன்றாடப் பழக்கவழக்கங்களையும், கட்டுப்பாட்டு முறைகள் சிலவற்றை இங்கு விரிவாகக் காண்போம்.
அதிகச் சர்க்கரை
நாம் அதிகம் சர்க்கரை உள்ள உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிட்டு வரும்பட்சத்தில், நம் உடலின் சர்க்கரையின் அளவு அதிகரித்து உடல்பருமன் மற்றும் இரண்டாம் வகை நீரிழிவுப் பாதிப்பிற்கு வழிவகுத்துவிடும்.
உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது இன்றியமையாததாகும்.
உப்பின் மறைமுகத் தாக்கம்
உப்பு இல்லா பண்டம் குப்பையிலே’ என்று சொன்ன நம் முன்னோர்கள், அதிக
உப்பு கொண்ட பண்டம் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைச் சொல்லத் தவறிவிட்டார்கள். நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சாதாரண உப்பில், சோடியம் என்ற வேதிப்பொருள் உள்ளது. உடலின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு, சோடியம் முக்கியப் பங்காற்றி வரும்போதிலும், உடலின் சோடியத்தின் அளவு அதிகரிக்கும்பட்சத்தில் உயர்ரத்த அழுத்த பாதிப்புகளை ஏற்படுகின்றன. இந்த உயர்ரத்த அழுத்தமானது இதய நோய்கள், பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக் காரணமாக அமைகின்றன. உடலில் உப்பின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியமானதாகும்.
இயற்கையின் கொடையான நார்ச்சத்து
அதிக நார்ச்சத்துக் கொண்ட பழ வகைகள், காய்கறிகள், முழுத்தானியங்கள் உள்ளிட்டவைகள், உடலில் நிகழும் செரிமான நிகழ்வைச் சீராக்கி, உடல் எடையைப் பராமரிக்க உதவுகிறது.
இதய நலம்
செறிவூட்டப்பட்ட மற்றும் டிரான்ஸ் கொழுப்பு வகைகள், இதயம் சீராக இயங்குவதற்குத் தடைக்கற்களாக விளங்கி வருகின்றன. இதய நலனைப் பாதுகாக்க விரும்புபவர்கள், உடலுக்கு நன்மைபயக்கவல்ல ஆரோக்கியமான நல்ல கொழுப்பு கொண்ட உணவு வகைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
வாழ்க்கைமுறை மாற்றங்கள்
வாழ்க்கைமுறை நோய்களை, உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் மேற்கொள்வது மட்டுமல்லாது, நமது அன்றாடப் பழக்கங்களிலும் சில மாற்றங்களை மேற்கொள்வதன் மூலமும் தடுக்க முடியும்.
தொடர்ந்து இயங்குதல்
ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து கொண்டு இருப்பவர்களுக்கு, உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் உள்ளது. எனவே, இருக்கையில் நீண்ட நேரம் அமர்ந்து வேலைப் பார்ப்பவர்கள், அவ்வப்போது சிறிது நேரம் காலார நடந்து செல்ல வேண்டும். இதன்மூலம், உடல் உழைப்பு மேம்படும். இது உடலுக்குத் தேவையான வலிமையை வழங்கும்.
உடற்பயிற்சிகள்
தினமும் உடற்பயிற்சி மற்றும் உடல் உழைப்புக்கு என நேரம் ஒதுக்கும்பட்சத்தில், இதயம் மற்றும் நரம்பு மண்டலத்தின் நலம் பேணப்பட்டு, உடல் ஆரோக்கியம் மேம்படும்.
புகையிலைப் பொருட்களின் பயன்பாடு
புகைப்பிடிக்கும் பழக்கம் மற்றும் புகையிலைப் பொருட்களின் பயன்பாடு, நம் உடலுக்கு அதிகத் தீங்கை விளைவிப்பதாக உள்ளது. இந்தப் பழக்கங்களிலிருந்து விடுபடுவதன் மூலம், நுரையீரல் தொடர்பான நோய்கள், புற்றுநோய், இதய நோய்கள் உள்ளிட்ட பாதிப்புகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
உறக்கம்
இரவுநேரத்தில் போதுமான அளவிலான அமைதியான உறக்கம், உடல் எடைப் பராமரிப்பில் மட்டுமல்லாது, நீரிழிவுப் பாதிப்பில் இருந்து காத்துக்கொள்ளவும், இதயம் சீராக இயங்கவும் உதவுகிறது.
போதிய உறக்கமின்மை நிகழ்வானது, இதய நோய்கள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு வித்திடுகின்றன.
வாழ்க்கைமுறை நோய்களின் தாக்கங்கள்
வாழ்க்கைமுறை நோய்களின் பாதிப்பு, சர்வதேச அளவில் வியாபித்து உள்ளது என்றே கூற வேண்டும். அந்தளவிற்கு, இந்த நோய்களின் பாதிப்பு, பல்லாயிரக்கணக்கானோரை, பெரும்பாதிப்பிற்கு உள்ளாக்கி உள்ளது.
வாழ்க்கைமுறை நோய்கள் உடல் மற்றும் பொருளாதார ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. தினசரி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதால், வாழ்நாள் முழுவதும் சிகிச்சை தேவைப்படுகிறது.
வாழ்க்கைமுறை நோய்கள், அவர்கள் மேற்கொண்டு வரும் தொழில் அல்லது பணி நடவடிக்கைகளைப் பாதிக்கின்றது. உடல் செயலிழந்ததால், பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகின்றோம். இதன்காரணமாக, வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
தடுப்பு உத்திகள்
சரிவிகித உணவு
வாழ்க்கைமுறை நோய்களைத் தடுக்க உதவும் உத்திகளில், சரிவிகித உணவுமுறை, முன்னணியில் உள்ளது. உங்களது உணவுப்பழக்கவழக்கத்தில், சர்க்கரை மற்றும் உப்பின் அளவைக் கணிசமாகக் குறைத்து, அதற்குப்பதிலாகப் பழ வகைகள், காய்கறிகள் மற்றும் முழுத்தானியங்களைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலுக்குத் தேவையான எல்லாச் சத்துக்களும் தங்குதடையின்றிக் கிடைக்கும் சூழல் உருவாகும்.
வழக்கமான உடற்பயிற்சிகள்
வாழ்க்கைமுறை நோய்கள் மட்டுமல்லாது, அனைத்து வகையான உடல் பாதிப்புகளையும் கட்டுப்படுத்தும் விதமாக, உடற்பயிற்சிகள் விளங்கி வருகின்றன. ஜிம் பயிற்சிகள் மற்றும் நடைப்பயிற்சி போன்ற எளிய உடற்பயிற்சிகள் உடல் எடை மற்றும் இதய நலனில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
புகையிலை மற்றும் மதுப் பழக்கம்
ஆல்கஹால் உள்ளிட்ட மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பொருட்களின் பயன்பாடு உள்ளிட்டவைகள் சுவாசம் தொடர்பான பாதிப்புகளுக்கும், கல்லீரல் பாதிப்பிற்கும் முக்கியக் காரணமாக அமைகின்றன.
மேலும் வாசிக்க : நடத்தைப் பொறியியலைப் புரிந்து கொள்வோமா?
மன அழுத்த மேலாண்மை
வாழ்க்கைமுறை நோய்கள் ஏற்பட நாள்பட்ட மன அழுத்தமானது முக்கியக் காரணமாக அமைகின்றது. தியானம், யோகா உள்ளிட்ட பயிற்சிகளின் மூலம், உடலின் மன அழுத்த அளவைக் குறைத்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இயலும். இந்தப் பயிற்சிகளை அவ்வப்போது மட்டும் மேற்கொள்ளாமல், வாழ்க்கை முறையின் ஒரு அங்கமாகவே செயல்படுத்தி வந்தால், அளப்பரிய நன்மைகள் பல உண்டு.
வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள்
வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளைத் தவறாது மேற்கொண்டு வருவதன் மூலம், உடலில் ஏற்படும் பாதிப்புகளை, முன்கூட்டியேக் கண்டறிந்து, அதனைத் துவக்கநிலையிலேயெ கட்டுப்படுத்தி விடலாம்.
வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை மேற்கொண்டு அதைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது என்பது துவக்கக் காலத்தில் கடினமான சவாலாகவே இருக்கும். இதை நாம் பழக்கப்படுத்திக் கொண்டால், உடல் ஆரோக்கியம் நம்வசப்படும்.