நீரிழிவு பாதிப்பு குழந்தையை வளர்ப்பதற்கான குறிப்புகள்
நீரிழிவு நோய்ப்பாதிப்பு கொண்ட குழந்தையை வளர்ப்பது என்பது சவால்கள் நிறைந்ததாக உள்ளதால், இது கடினமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. உங்கள் குழந்தைக்கு முதல் அல்லது இரண்டாம் வகை என எந்த வகை நீரிழிவுப் பாதிப்பு இருந்தாலும், அவர்களை நிர்வகிக்க அர்ப்பணிப்பு, புரிதல் உள்ளிட்டவை அவசியமானதாக உள்ளது. இந்தக் கட்டுரையில், நீரிழிவு பாதிப்பு குழந்தையை வளர்ப்பதற்கான உதவிக்குறிப்புகள் மற்றும் பெற்றோரின் அனுபவங்கள் தொகுக்கப்பட்டு உள்ளன.
நீரிழிவு தொடர்பான கல்வி முக்கியம்
நீரிழிவு நோய்ப்பாதிப்பு குறித்த புரிதல் உணர்வு குழந்தைக்கு மட்டுமல்லாது பெற்றோருக்கும் அவசியம் ஆகும். நீரிழிவுப் பாதிப்பு உடலைப் பாதிக்கும் விதத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கண்காணிப்பது, உணவுமுறை மற்றும் உடற்பயிற்சியின் பங்கு முக்கியமாகும். இதுபோன்ற கற்றல் செயல்பாடுகளில், உங்கள் குழந்தையை ஈடுபடுத்துங்கள். நீரிழிவு ஆரோக்கியம் குறித்து குழந்தைகளுக்குக் கற்பிப்பதன் மூலம், நோய் நிர்வாகத்தில், குழந்தைகளும் பங்கெடுப்பதற்கான உரிமையை வழங்குகிறது.
வழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்
கட்டமைக்கப்பட்ட முறையிலான தினசரி வழக்கத்தை உருவாக்குவதன் மூலம், உங்கள் குழந்தையின் நீரிழிவு நோயை, கணிசமாக நிர்வகிக்க முடியும். ஒரே நேரத்திற்குச் சாப்பிடுதல், ரத்த சர்க்கரை அளவைக் கண்காணித்தல், சரியான நேரத்திற்கு இன்சுலின் ஊசிகளைச் செலுத்திக் கொள்ளுதல் உள்ளிட்ட காரணிகள், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தலில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இந்தப் பழக்கங்களை, அவர்கள் தொடர்ந்து மேற்கொள்ளப் பழக்க வேண்டும். அவர்கள் சரியாக மேற்கொள்கிறார்களா என்பதையும் கண்காணிக்க வேண்டும். குழந்தையின் நோய்ப்பாதிப்பில் அல்லது நடவடிக்கைகளில் சிறிய மாற்றம் தெரிந்தால் மருத்துவ வல்லுநரைத் தொடர்பு கொள்ளுங்கள்.
ஆரோக்கியமான உணவுமுறையை ஊக்குவிக்கவும்
நீரிழிவு நோய்ப்பாதிப்பை நிர்வகிப்பதில், சீரான உணவுமுறைக்கு முக்கிய இடமுண்டு. குழந்தைகளிடையே ஆரோக்கியமான உணவுமுறையை ஊக்குவிக்க உணவுத் திட்டமிடல் மற்றும் தயாரிப்பு நிகழ்வை, சுவாரஸ்யமானதாக மாற்றி அமைப்பது முக்கியம் ஆகும். உணவில் அடங்கி உள்ள பகுதிப்பொருட்களின் விவரங்களை உள்ளடக்கிய லேபிள்களைப் படிக்கவும், அந்த உணவு வகைகளில் கார்போஹைட்ரேட் எவ்வளவு உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் உணவில் சர்க்கரைத் தின்பண்டங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை நீக்கி, அதற்குப்பதிலாகக் காய்கறிகள், பழ வகைகள், முழுத் தானியங்கள் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும்.
தொடர்பு வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்
நீரிழிவு நோய்ப்பாதிப்பு தொடர்பாகக் குழந்தைகள் புரிந்துக்கொண்டதை, அவர்கள் விவாதிக்க வசதியான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும். நோய்ப்பாதிப்பு தொடர்பாக, அவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள், அச்சங்கள், விரக்திகள் இருப்பின் அதனை அவர்கள் வெளிப்படுத்த ஊக்குவிக்கவும். அவர்களுக்குத் தேவையான தகவல்தொடர்பு மற்றும் ஆதரவுடன் கூடிய புரிதலை வழங்கவும். இது அவர்களின் உணர்ச்சி நல்வாழ்வுக்கு அத்தியாவசியமானது ஆகும்.
மேலும் வாசிக்க : நீரிழிவு நிர்வாகத்தில் மன அழுத்த பாதிப்பின் தாக்கம்
தனிப்பட்ட பராமரிப்பாளர்கள் இருப்பது அவசியம்
உங்கள் குழந்தைப் பள்ளியிலோ அல்லது வெளியிடங்களில் இருக்கும்போது, அவர்களின் நீரிழிவு மேலாண்மைத் திட்டத்தைப் புரிந்துகொண்ட பராமரிப்பாளர்கள், குழந்தையுடன் எப்போதும் இருப்பது அவசியம் ஆகும். இரத்தத்தில் சர்க்கரை அளவு கண்காணிப்பு, இன்சுலின் நிர்வாகம், இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென்று குறைந்தால் என்ன செய்ய வேண்டும் உள்ளிட்ட புரிதல்கள், பராமரிப்பாளர்கள் அறிந்திருக்க வேண்டும். பள்ளி ஊழியர்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பதன் மூலம், உங்கள் குழந்தைக்கு ஆதரவான சூழலை, நீங்கள் உருவாக்க முடியும்.
உடற்பயிற்சி பழக்கத்தை ஊக்குவிக்கவும்
உடல் ஆரோக்கியம் மற்றும் ரத்த சர்க்கரை நிர்வாகத்திற்கு, உடற்பயிற்சி பழக்கவழக்கங்கள் இன்றியமையாததாக உள்ளன. விளையாட்டு, நடனம் எனக் குழந்தைகளுக்குப் பிடித்த நிகழ்வுகளில் அவர்கள் பங்கேற்பதை ஊக்குவிக்க வேண்டும்.
சமூகச் சூழல்களுக்குக் குழந்தைகளைத் தயார்படுத்துங்கள்
நீரிழிவு நோய்ப்பாதிப்பு கொண்ட குழந்தைகள் பிறந்தநாள் விழாக்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களின் சந்திப்புக் கூட்டங்களில் கலந்துகொள்வது என்பது சவாலானவைகள் ஆகும். இத்தகைய தருணங்களில், குழந்தைகள் பங்கேற்பதற்கு முன்பாகவே, நீரிழிவு நோய்ப்பாதிப்பை நிர்வகிப்பதற்கான நம்பிக்கையை, அவர்களின் மனதில் துளிர்விடச் செய்யுங்கள். குழந்தைகள், அவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்ளும் பொருட்டு, நண்பர்கள், குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும். இன்சுலின் ஊசிகள் உள்ளிட்டவற்றை, எப்போதும் அவர்களுக்கு அருகில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
பெற்றோர்த் தான் குழந்தைகளின் ரோல்மாடல்
குழந்தைகள் ஒவ்வொரு நடவடிக்கையும், தங்களின் பெற்றோர் மூலமாகவே கற்றுக் கொள்கின்றனர். குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை உருவாக்க, பெற்றோர்கள் உடற்பயிற்சி பழக்கம், சீரான உணவுமுறை உள்ளிட்ட ஆரோக்கியமான நடத்தைகளைப் பின்பற்றுவது அவசியம் ஆகும். உடல் ஆரோக்கிய மேம்பாட்டில்,உங்கள் அனுபவங்களைக் குழந்தைகளுக்குத் தெரிவிக்க வேண்டும். சுயக் கவனிப்பு இன்றியமையாதது என்பதைக் குழந்தைகளின் மனதில் ஆழமாகப் பதியச் செய்யுங்கள்.
குழந்தைகளின் சாதனைகளைக் கொண்டாடுங்கள்
நீரிழிவு நோய் நிர்வாகத்தில், குழந்தைகளின் முயற்சிகள் சிறிய அளவினதாக இருந்தாலும், அதை அங்கீகரித்துக் கொண்டாட வேண்டும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவைத் திறம்படக் கண்காணித்தாலும், ஆரோக்கியமான உணவுமுறையைத் தேர்வுசெய்யும் போது, அதனை அங்கீகரித்துக் கொண்டாடும்பட்சத்தில், அவர்களின் நம்பிக்கையும், உந்துதல் சக்தியும் பன்மடங்கு அதிகரிக்கிறது.
மேலே குறிப்பிட்ட வழிமுறைகளைப் பின்பற்றி, நீரிழிவுப் பாதிப்பிற்கு உள்ளான குழந்தைகளுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையைச் வாழ வழிவகைச் செய்வோமாக…