அல்சைமர்ப் பாதிப்பின் ஆரம்ப அறிகுறிகளை அறிவோமா?
அல்சைமர் நோய்ப்பாதிப்பு என்பது சர்வதேச அளவில் மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களைப் பெரும்பாதிப்பிற்கு உள்ளாக்கி உள்ள முதன்மையான நரம்பியல் பாதிப்பு ஆகும். உலகச் சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, சர்வதேச அளவில் அல்சைமர் நோய்ப்பாதிப்பிற்கு உள்ளானவர்களில் 60 முதல் 70 சதவீதத்தினர் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பாதிப்பை, முன்கூட்டியே கண்டறிவது மிகவும் இன்றியமையாதது ஆகும். ஏனெனில், முன்கூட்டியே கண்டறிதல் நிகழ்வானது, சிறந்த மேலாண்மை மற்றும் திட்டமிடலை அனுமதிக்கிறது.
ஆரம்பக் கால அறிகுறிகளை அடையாளம் காண்பதால், நோயாளிகள் உரிய நேரத்தில் மருத்துவ ஆலோசனைப் பெறவும், நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தவும் முடியும். இந்தக் கட்டுரையில், அல்சைமர் நோய்ப்பாதிப்பின் ஆரம்ப கால அறிகுறிகள் குறித்து விரிவாகக் காண்போம்.
அல்சைமர் நோய்ப்பாதிப்பு
அல்சைமர் நோய்ப்பாதிப்பு என்பது மூளையில் ஏற்படும் குறைபாடு ஆகும். இது ஞாபகச்சக்தி, பகுத்தறிவு, மொழிச் செயல்பாடுகள் போன்ற அறிவாற்றல் சார்ந்த நிகழ்வுகளில் படிப்படியான பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. வயதானவர்கள் பெரும்பாலும், இந்தப் பாதிப்பிற்கு ஆட்படும் நிலையில், தற்போதைய நிலையில், இளம் வயதினருக்கும், இந்தப் பாதிப்பு காணப்படுகிறது.
அல்சைமர் நோய்ப்பாதிப்பிற்கான சரியான காரணம், இன்னமும் முழுமையாகக் கண்டறியப்படவில்லை. மரபணு மாற்றங்கள், சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கைமுறைக் காரணிகளின் விளைவாகவே, இந்நோய்ப் பாதிப்பு ஏற்படுவதாகக் கருதப்படுகிறது. அல்சைமர் நோய்ப்பாதிப்பின் போது, அமிலாய்டு பிளேக்குகள் எனப்படும் அசாதாரண புரதக் கூறுகள், மூளைப்பகுதியில் சேகரமாகி, நரம்பியல் மூலமான தகவல்தொடர்புகளில் பாதிப்பினை ஏற்படுத்தி, மூளைச்செல்களின் இறப்பிற்குக் காரணமாக அமைகிறது.
அல்சைமர் நோய்ப்பாதிப்பின் ஆரம்பக்கால அறிகுறிகள்
நினைவுத்திறன் இழப்பு காரணமாக, அன்றாட நடவடிக்கைகளில் பாதிப்பு
தேசிய வயதுமூப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் கூற்றுப்படி, நினைவுத்திறன் இழப்பு அல்லது பாதிப்பு என்பது, அல்சைமர் நோய்ப்பாதிப்பின் துவக்கக் கால அறிகுறிகளில் முதன்மையானதாக உள்ளது. அன்றாடம் மேற்கொள்ளும் நிகழ்வுகளை மறந்துவிடுதல், தனிநபர்கள் முக்கியமான தேதிகள் அல்லது நிகழ்வுகளை அடிக்கடி மறந்துவிடுதல், கேட்ட கேள்விகளை மீண்டும் மீண்டும் கேட்டல், நினைவூட்டல்கள் அல்லது குறிப்பெடுத்துக் கொள்ள எலெக்ட்ரானிக் உபகரணங்களை நாடும் நிலை ஏற்படலாம். இதன்காரணமாக, அன்றாட நடவடிக்கைகள் மற்றும் பொறுப்புகளில் கடுமையான பாதிப்பு ஏற்படும்.
திட்டமிடல் மற்றும் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அதீதச் சவால்கள்
அல்சைமர்ப் பாதிப்பு நோயாளிகள், புதிய திட்டத்தைத் தீட்டுவதிலும், அதைச் செயல்படுத்துவதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். அன்றாடம் மேற்கொள்ளும் சமையல் நிகழ்வுகளிலும், மாதாந்திரப் பயன்பாட்டுக் கட்டணங்களைக் கண்காணிப்பதிலும் அவர்கள் மிகுந்த இடையூறுகளைச் சந்திக்கின்றனர். இவர்கள் சிக்கலான பணிகளை மேற்கொள்ளும்போது, அவர்களின் திறனில் அதீத அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
வழக்கமான பணிகளை நிறைவேற்றுவதில் சுணக்கங்கள்
அல்சைமர்ப் பாதிப்பிற்கு உள்ளான ஒருவர், பல ஆண்டுகளாகச் செய்துவந்த வழக்கமான பணிகளையும், அவர்களால் திறம்பட நிறைவேற்ற இயலாது. எப்போதும் செல்லும் இடங்களுக்குக் கூட வாகனங்களை ஓட்டிச் செல்வதில் சிரமங்கள் ஏற்படுதல், எப்போதுமே விளையாடி மகிழும் விளையாட்டின் விதிகள் கூட மறந்துபோதல், அன்றாடப் பணிகளில் இடையூறுகளைச் சந்திக்கின்றனர்.
இடம் சார்ந்த உறவுகள் மற்றும் காட்சிப் படங்களைப் புரிந்துகொள்வதில் சிரமங்கள்
கண் பார்வையில் பாதிப்பு ஏற்படுவதும், அல்சைமர் நோய்ப்பாதிப்பின் அறிகுறியாகும் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர். கற்றலில் சிரமங்கள், தொலைவைத் தீர்மானித்தல், நிற மாறுபாட்டை அறிதலிலும் சிக்கல் உள்ளிட்ட சிரமங்களை, அல்சைமர்ப் பாதிப்பு நோயாளிகள் அனுபவிக்கின்றனர். இவர்கள் ஏதாவது ஒரு கண்ணாடியைக் கடந்து செல்லும் போது, அடுத்த அறையில் இன்னொரு நபர் இருப்பதாக உணர்வார்கள். தொலைவைத் துல்லியமாகத் தீர்மானிக்க இயலாததால், அவர்கள் பொருட்களின் மீது மோதி தடுமாறக்கூடிய சூழலை உருவாக்கும்.
நேரம் அல்லது இடம் பற்றிய குழப்பங்கள்
அல்சைமர் நோய்ப்பாதிப்பின் பொதுவான அறிகுறிகளாவனத் தேதிகள், நாட்கள், பருவங்கள், நேரங்கள் குறித்த உணர்வை இழத்தல், தனிநபர்கள், நாம் தற்போது எங்கே இருக்கிறோம், எப்படி இந்த இடத்திற்கு வந்தோம் என்பதை மறந்துவிடுதல் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு உள்ளாகி விடுகின்றனர்.
பேசுதல் மற்றும் எழுதுவதிலும் சிரமங்களை உணர்தல்
அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களால், ஒரு உரையாடலை முழுமையாக முடிக்க இயலாத நிலை ஏற்படும். உரையாடலை அவர்கள் மிகுந்த உத்வேகத்துடன் துவங்கினாலும், எதிர்பாராதவிதமாக, இடையே நிறுத்தி, பின் எப்படித் தொடர்வது என்பதை அறியாமல் முழித்துக் கொண்டு இருப்பர். ஏற்கனவே சொன்னதையே, திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டு இருப்பர். தினமும் பார்க்கும் பழக்கமான பொருட்களின் பெயரைக் கூட சில சமயங்களில் மறந்துவிடுவர் அல்லது அதற்குத் தவறான பெயர்ச் சொல்லி அழைப்பர்.
மேலும் வாசிக்க : வலிப்புப் பாதிப்பின் சிகிச்சை முறைகளை அறிவோமா?
பொருட்களை எடுத்த இடத்தில் வைக்க இயலாத சூழல்
பொருட்களைத் தவறான இடத்தில் வைத்தல், பொருட்களை, எடுத்த இடத்தில் வைக்க முடியாத சூழல், அல்சமைர் நோய்ப்பாதிப்பின் அறிகுறிகள் ஆகும்.
முடிவெடுப்பதில் சிரமங்களை உணர்தல்
வழக்கமான செயல்பாடுகளில் முடிவெடுத்தல், சரியான தீர்ப்பு வழங்குவதில் சிரமங்கள் உள்ளிட்டவை, அல்சைமர் நோய்ப்பாதிப்பின் பொதுவான அறிகுறிகள் ஆகும். உதாரணமாக, டெலிமார்க்கெட்டிங் நபர்களிடம் அதிகத் தொகைக் கொடுத்து ஏமாறுதல், தேவையற்ற பொருட்களை அதிகளவில் வாங்கிக் குவித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள், மோசமான நிதிநிலைமையை ஏற்படுத்த கூடும். தங்களைச் சீர்படுத்திக் கொள்வதிலும், சுத்தத்தைப் பேணுவதிலும், இவர்கள் போதிய கவனம் செலுத்தாதவர்களாகவே இருப்பர்.
மனநிலை மற்றும் ஆளுமைத் திறனில் மாற்றங்கள்
அல்சைமர் நோய்ப்பாதிப்பிற்கு உள்ளானவர்கள், மனநிலை மற்றும் ஆளுமைத்திறனில் மாற்றங்களை அனுபவிப்பவர்களாக இருப்பர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ஸ்கூல் ஆஃப் மெடிசின் நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது. குழப்பம், மனச்சோர்வு, சந்தேகம், பயம் மற்றும் கவலை உணர்வுகளாலும் சூழப்பட்டு இருப்பர். இவர்கள் இருக்கும் இடத்தில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் எனப் புடைசூழ இருந்தாலும், அவர்கள் எப்போதும் தனிமையில் இருப்பதாக நினைத்து வருத்தம் தோய்ந்த முகத்துடனேயே இருப்பர்.
வேலை அல்லது சமூக நடவடிக்கைகளிலிருந்து விலகுதல்
அல்சைமர்ப் பாதிப்பு நோயாளிகள், பொழுதுபோக்குகள், சமூக நடவடிக்கைகள் அல்லது பிற நிகழ்வுகளில் இருந்து விலகத் தொடங்குவர். துவங்கிய திட்டத்தை எவ்வாறு முடிப்பது, பிடித்த விளையாட்டுக் குழுவை எவ்வாறு உருவாக்குவது என்பதை நினைவில் கொள்வதில், அதிகளவிலான சிக்கல்களை உணர்வர். மேற்கொண்டு இருக்கும் நடவடிக்கைகளைத் திரும்பப் பெறுதல் நிகழ்வானது, அவர்கள் அடிக்கடி அனுபவிக்கும் விதத்தில் இருக்கும்.
மேற்குறிப்பிட்ட அல்சைமர் நோய்ப் பாதிப்பின் ஆரம்ப அறிகுறிகளை அங்கீகரித்து, சரியான நேரத்தில் உரிய சிகிச்சைகளைப் பெற்று அப்பாதிப்பில் இருந்து விடுபட்டு, வளமான மற்றும் ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக..