கேட்ஜெட் அளவீடுகளைத் தீவிரமாக எடுத்துக் கொள்பவரா?
இன்றைய இளம்தலைமுறையினர், உடல் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் தர துவங்கி உள்ளனர். இதற்காக அவர்கள் ஃபிட்னெஸ் டிராக்கர்கள், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் கேட்ஜெட்களைப் பயன்படுத்துகின்றனர். இவற்றைக் கொண்டே தங்களது வாழ்க்கைமுறையை அமைத்து வருகின்றனர். இந்த எலெக்ட்ரானிக் கேட்ஜெட்களில், சென்சார், ஆல்டிமீட்டர், நோக்குநிலை உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. உறக்கச் சுழற்சி, நடக்கும் தொலைவு, ஓடுதல், உடலில் எரிக்கப்பட்ட கலோரிகளின் எண்ணிக்கை உள்ளிட்டவைகளை அளவீடு செய்யப் பயன்படுகிறது.
எலெக்ட்ரானிக் கேட்ஜெட்கள், எத்தகைய அளவீடுகளை உங்களுக்கு வழங்குகின்றன?
நாளுக்கு நாள் மாற்றங்களைப் பெற்று வரும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், ஆரோக்கியமான வாழ்க்கை என்பது இன்றைய இளைய தலைமுறையினரிடையே பேசுபொருளாக மட்டுமல்லாமல், பெரும்பாலானோருக்குச் சாத்தியமாகவும் ஆகியுள்ளது. இந்த எலெக்ட்ரானிக் கேட்ஜெட்கள், உங்கள் உடற்தகுதியைக் கண்காணிக்கும் பொருட்டு, அது எவ்வாறு இயங்குகிறது என்பதை முதலில் நீங்கள் அறிந்துகொள்வது அவசியம் ஆகும்.
எரிக்கப்பட்ட கலோரிகளின் அளவு
உடலில் நிகழும் அடிப்படை வளர்சிதை மாற்ற விகிதம், செயல்பாட்டு நிலை உள்ளிட்ட நிகழ்வுகளை எலெக்ட்ரானிக் கேட்ஜெட்கள் கண்காணிக்கின்றன. இவற்றின் அடிப்படையில் வளர்சிதை மாற்றத்தின் போது எரியூட்டப்பட்ட கலோரிகளின் மதிப்பைக் கணக்கிட உதவுகிறது. எரிக்கப்பட்ட கலோரிகளின் மதிப்பைக் கண்டறிய, உங்கள் உடல் செயல்பாடு குறித்த தனிப்பட்ட தகவல்கள் கேட்ஜெட்களுக்கு அவசியம். இந்தத் தனிப்பட்ட தகவல்களை உள்ளீடு செய்தபிறகு, அதில் உள்ள சென்சார்கள் உங்கள் உடல் செயல்பாட்டைக் கண்காணிக்கத் துவங்குகிறது. இது எரியூட்டப்பட்ட கலோரிகளைக் கணக்கிடுவதற்கான முதல் படிநிலை ஆகும். மற்ற தகவல்கள், நீங்கள் உட்கொண்ட உணவுகளின் மூலம் பெறப்பட்ட கலோரிகள் குறித்த தகவல்களாக வரையறுக்கப்படுகிறது. நீங்கள் பயன்படுத்தும் கேட்ஜெட் பல்துறைப் பயன்களைக் கொண்டதாக இருப்பின், அது இதயத்துடிப்பு விகிதம், சுவாசித்தலின் வீதம், வியர்வை வெளியேறிய அளவு உள்ளிட்ட அளவீடுகளையும் அளக்க உதவுகிறது.
இதயத்துடிப்பின் வீதம்
ஸ்மார்ட் வாட்ச், ஃபிட்னெஸ் டிராக்கர்கள் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் கேட்ஜெட்களின் அடிப்பகுதியில், பச்சை நிறத்தில் ஒளிரும் வகையிலான ஒரு சிறிய LED விளக்கு உள்ளது. இந்த விளக்கு, PPG அல்லது போட்டோபிளெதிஸ்மோகிராபி அடிப்படையில், இதயத்துடிப்பின் வீதத்தைக் கணக்கிடுகிறது.
இதைச் சுருக்கமாக விளக்குவதெனில், நம் உடலில் உள்ள ரத்தமானது, பச்சை நிற ஒளியை உறிஞ்சுகிறது. ஒவ்வொரு உறிஞ்சுதல் நிகழ்வும், இதயத்துடிப்பாகக் கணக்கிடப்படுகிறது.
நடக்கும் நடைகளின் எண்ணிக்கை
நீங்கள் தினசரி நடக்கும் தொலைவுகளின் எண்ணிக்கையை வைத்து, அன்றைய நாள் முழுவதும் எவ்வளவு சுறுசுறுப்பாக இருந்தீர்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும். எலெக்ட்ரானிக் கேட்ஜெட்கள், உங்களின் இயக்க மற்றும் செயல்பாட்டு நடவடிக்கைகளை அளவீடு செய்கிறது. சில நேரங்களில், இந்தக் கேட்ஜெட்கள், உடல் இயக்கம் மற்றும் செயல்பாடுகளை, தவறாகக் கணக்கிடும் வாய்ப்பு இருப்பதால், அதைச் சுயமாகச் சரிபார்ப்பது இன்றியமையாததாக உள்ளது.
உறங்கும் கால அளவு
உறக்க நிலைகளைக் கண்காணிக்கும் நிகழ்வு, ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஃபிட்னெஸ் டிராக்கர்களின் சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது. இந்த உறக்க நிலைகளின் அளவீடுகள் துல்லியமாக இருக்க, மூளை அலைகளின் கணக்கீடும் அவசியமானதாக உள்ளது.
எலெக்ட்ரானிக் கேட்ஜெட்கள் காட்டும் அளவீடுகளை, நீங்கள் தீவிரமாகப் பின்பற்றுபவர்கள் எனில், இதுபோன்ற வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், அதன் துல்லியத் தன்மையைப் பாதுகாக்க இயலும்.
சரியான பிராண்ட்களைத் தேர்ந்தெடுக்கவும்
உங்கள் தேவைகளுக்கு ஏற்ப, நீங்கள் என்ன பிராண்ட் கேட்ஜெட்களைப் பயன்படுத்த உள்ளீர்கள் என்பது இங்கு முக்கியமானது ஆகும்.
துல்லியமான முடிவுகள்
உங்களின் தனிப்பட்ட தகவல்கள் எவ்வளவு துல்லியமாக உள்ளனவோ, அதைப் பொறுத்தே, துல்லியமான முடிவுகளைப் பெற முடியும் என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள்.
பயனர்க் கையேட்டை முழுவதுமாகப் படிக்கவும்
உடல் ஆரோக்கியம் குறித்த துல்லிய முடிவுகளைப் பெற வேண்டுமா? எலெக்ட்ரானிக் கேட்ஜெட்களுடன் வழங்கப்படும் பயனர்க் கையேட்டை முழுமையாகப் படியுங்கள். கேட்ஜெட்களைப் பயன்படுத்தும்போது, ஏதாவது இடையூறுகள் ஏற்பட்டால், உடனே விரக்தி அடைந்து விடுகின்றனர். பயனர்க் கையேட்டை முழுவதுமாகப் படிக்காததன் காரணத்தினால், அதில் உள்ள அம்சங்களை நீங்கள் அறியாதநிலை ஏற்படலாம்.
தவறான வழிகளில் பயன்படுத்துதல்
எலெக்ட்ரானிக் கேட்ஜெட்களில் நீர்புகாத்தன்மை அல்லது நீர் எதிர்ப்பு அம்சம் உள்ளதெனக் கேள்விப்பட்டு இருப்போம். பெரும்பாலானோர், இது இரண்டும் ஒரேமாதிரியானவை என்று தவறாகப் புரிந்து கொண்டு உள்ளனர். ஆனால், உண்மை அதுவல்ல. நீர்ப்புகாத்தன்மை என்பது அதனை, நீங்கள் நீருக்கு அடியில் பயன்படுத்தினாலும், எவ்விதப்பாதிப்பும் ஏற்படாது என்பதே அதன் பொருள். நீர் எதிர்ப்பு தன்மை என்பது சில தருணங்களில் நீரை எதிர்த்து செயல்படும். இதை நீருக்குள் பயன்படுத்த முடியாது. இந்த வேறுபாடு அறிந்து பயன்படுத்துவது முக்கியம்.
மேலும் வாசிக்க : ஆண்களுக்கான தினசரி வைட்டமின், மினரல் தேவைகள்
பேட்டரி பராமரிப்பு
ஸ்மார்ட் வாட்ச்கள் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் கேட்ஜெட்கள், பேட்டரியின் மூலமாகவே இயங்குகின்றன. பேட்ட்ரியில் சார்ஜ் குறைவதை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். தேவையில்லாமல் அடிக்கடி சார்ஜ் செய்வதன் மூலம், பேட்டரியின் ஆயுட்காலம் குறைகிறது. எனவே, பேட்டரி விசயத்திலும் போதிய கவனம் செலுத்தப்படுவது அவசியமாகும்.
பாதுகாப்பான செயலிகள்
சரியான செயலிகளைப் பயன்படுத்தாதபோது, அது உங்கள் எலெக்ட்ரானிக் கேட்ஜெட்களின் செயல்பாட்டுத் திறனைப் பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம். மேலும், நீங்கள் தவறான செயலிகளைப் பயன்படுத்தும் போது, அதன்மூலம், உங்கள் தனிப்பட்ட தகவல்கள் கசிய அதிக வாய்ப்பு உள்ளது.
ஸ்மார்ட் போன் இணைப்பு
ஸ்மார்ட் வாட்ச்சை, ஸ்மார்ட் போனுடன் இணைக்கும்போது தான், அதனை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதற்கான சூழல் ஏற்படும். இதன்மூலம், நீங்கள் ஸ்மார்ட் போனுக்கு வரும் அழைப்புகள், சமூக வலைதள அறிவிப்புகள் உள்ளிட்டவற்றை எளிதாகப் பெற முடியும். மொபைல் போனுடன் இணைக்கப்படும்போது மட்டுமே, சரியான அப்டேட்களை உரிய நேரத்தில் பெற முடியும்.
ஸ்மார்ட் வாட்ச், ஃபிட்னெஸ் டிராக்கர்கள் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் கேட்ஜெட்களைச் சரியான பிராண்ட் தேர்வு செய்து, அதைச் சிறந்த முறையில் பயன்படுத்தி, உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.