நரம்பியல் மருத்துவரைப் பார்க்க இதுவே சரியான நேரம்
நரம்பு மண்டலம் நம் உடலின் முக்கியமான பகுதி. இது உடலின் முதன்மையான அமைப்பாகும். இது உடலின் அனைத்து வகையான செயல்பாடுகளை ஒருங்கிணைத்துக் கட்டுப்படுத்த உதவுகிறது. நரம்பு மண்டலம் சீராகச் செயல்படாதபட்சத்தில், உங்களால் ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு நகரவோ, இயல்பு நிலையில் இருக்கவோ அல்லது சிந்திப்பதற்கோ இயலாத நிலை ஏற்படும். நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளைப் பாதிக்கும் வகையில், சில குறைபாடுகள் உள்ளன.
நரம்பியல் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிவதற்கு, அதன் அறிகுறிகளை அடையாளங்கண்டு, அதற்குரிய நிபுணரிடம் தெரிவிப்பது மிகவும் அவசியம் ஆகும். பெரும்பாலான சூழல்களில், நரம்பு மண்டலங்கள், மிகவும் நுட்பத்திறன்களுடன் திகழ்கின்றன. இதன்காரணமாக, பாதிப்பின் அறிகுறிகளைக் கண்டறிவது என்பது சவால்மிகுந்த நிகழ்வாக மாறிவிடுகின்றன. இது உரிய சிகிச்சைகள் பெறுவதைத் தாமதமாக்குகின்றன. நீங்கள் அடையாளம் கண்ட அறிகுறிகளை மருத்துவரிடம் தெரிவிக்கத் தவறினால், பாதிப்பின் தீவிரம் அதிகரிக்கும். இதனால் உங்கள் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
நீங்கள் நரம்பியல் நிபுணரைப் பார்க்க வேண்டும் என்பதைக் குறிக்கும் வகையிலான பொதுவான அறிகுறிகள்
கண் பார்வையில் ஏற்படும் மாற்றங்கள்
உங்கள் கண் பார்வையில் இரட்டைப் பார்வை, கவனம் செலுத்துவதில் சிக்கல், மங்கலான பார்வை உள்ளிட்ட திடீர் அல்லது அசாதாரண மாற்றங்களைக் காணும்பட்சத்தில், இந்த அறிகுறிகளை நீங்கள் ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாது. இந்த அறிகுறிகள், உங்கள் பார்வை நரம்புகள் அல்லது மூளையின் காட்சி செயலாக்க மையத்தின் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும்.
வலிப்புத் தாக்கங்கள்
நரம்பியல் பாதிப்பைக் குறிக்கும் பொதுவான அறிகுறிகளில் முதன்மையானதாக, வலிப்புத்தாக்கங்கள் உள்ளது. இது மூளையில் இருந்து வெளியாகும் திடீர் மின் வெளியேற்றங்கள் காரணமாக, நீங்கள் வலிப்புத்தாக்கத்தை உணர அதிக வாய்ப்பு உள்ளது. இது மயக்கம், நடுக்கம், விசித்திரமான உணர்வுகளுக்கு வழிவகுப்பதாக உள்ளது. கை,கால் வலிப்பு என்பது வலிப்புத்தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான பாதிப்பு ஆகும். இது மூளை அதிர்ச்சி அல்லது பிற கடுமையான நரம்பியல் பிரச்சினைகளின் அறிகுறியாகக் கூட இருக்க வாய்ப்பு உண்டு.
தொடர்ச்சியான தலைவலி (Persistent Headaches)
நீங்கள் தொடர்ச்சியான தலைவலியால் அவதிப்படும்பட்சத்தில், நரம்பியல் நிபுணரை உடனடியாகச் சந்தித்து ஆலோசனைப் பெற்றுக்கொள்வது நல்லது. தலைவலியை அனுபவிப்பது என்பது மிகவும் இயல்பான நிகழ்வுதான் என்றாலும், அதீதத் தலைவலி அல்லது அதன் தீவிரத்தன்மை அதிகரிக்கும்போது, பல்வேறு நரம்பியல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒற்றைத் தலைவலி, பதற்றத்துடன் கூடிய தலைவலி உள்ளிட்டவை, நரம்பியல் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
தசைப் பலவீனம்
தசைப் பலவீனம் என்பது கடுமையான நரம்பியல் பாதிப்புகளின் முக்கிய அறிகுறிகளாகத் திகழ்கிறது. தசைப் பலவீனம் ஏற்படும்போது உடல் செயல்பாடுகளின் ஒருங்கிணைப்பு பாதிக்கப்படும். இது உடலின் பல மூட்டுக்களையும் பாதிக்கும். இந்த நிலையானது தசைநார் டிஸ்டிராபி, பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தசைகளில் பலவீன உணர்வை உணரும்பட்சத்தில், உடனடியாக மருத்துவரைச் சந்தித்து ஆலோசனைப் பெறுவது நல்லது.
தன்னிச்சையான இயக்கங்கள்
தன்னிச்சையான அல்லது கட்டுப்பாடற்ற இயக்கங்கள் என்பது நரம்பியல் பாதிப்பின் அறிகுறியாக உள்ளது. இது திடீர் நடுக்கம், பல்வேறு இயக்கப் பாதிப்புகள் காரணமாக ஏற்படுகிறது. மத்திய நரம்பு மண்டலம், எலும்பு தசைகள் சேதமடையும் போது, இயக்கங்களில் மாறுபாடுகள் நிலவுகின்றன. பார்கின்சன் நோய் மற்றும் நடுக்கம் உள்ளிட்டவை, நரம்பு பாதிப்பின் முக்கிய அறிகுறிகளாக விளங்குகின்றன.
அறிவாற்றல் குறைபாடு
அறிவாற்றல் திறன்களில் ஏற்படும் மாற்றங்களே, அறிவாற்றல் குறைபாடு என்று வரையறுக்கப்படுகிறது. இந்த அறிவாற்றல் குறைபாடு, நரம்பியல் பாதிப்புகளின் முதன்மையான அறிகுறியாக விளங்குகிறது. மொழிச் சார்ந்த பிரச்சினைகள், ஞாபகமறதி, கவனம் செலுத்துவதில் சிரமம், எதிலும் ஈடுபாடு இல்லாத நிலை உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும்பட்சத்தில், அது டிமென்ஷியா நோய்ப்பாதிப்பு ஏற்பட வழிவகுத்துவிடுகிறது. இது கடுமையான அறிவாற்றல் வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது. இதன்காரணமாக, ஒரே நேரத்தில் அன்றாடப் பணிகளை மேற்கொள்வதிலேயே பெரும்சிரமத்தை ஏற்படுத்தி விடுகின்றன.
கூச்ச உணர்வு
உடலின் எந்தப் பகுதியிலும் அதிகளவிலான கூச்ச உணர்வு அல்லது உணர்வு இல்லாத நிலை ஏற்பட்டால், அது நரம்பியல் பாதிப்பின் அறிகுறியாகக் கருதப்படுகிறது. பரேஸ்டீசியா எனப்படும் இந்த நிலை, கடுமையான நரம்பு சேதம் காரணமாக ஏற்படுகிறது. இந்த நிலை, நீண்ட நாள்களாகத் தொடரும்பட்சத்தில், மருத்துவ கண்காணிப்பு என்பது அவசியமாகிறது.
மேலும் வாசிக்க : குழந்தைகளிடையே காணப்படும் நரம்பியல் பாதிப்புகள்
சமநிலையில் ஏற்படும் சிக்கல்கள்
நரம்பியல் பாதிப்புகள் பொதுவாக, தலைச்சுற்றலை ஏற்படுத்துகின்றன. இந்த அறிகுறியானது உடலின் சமநிலையைப் பேணிக்காப்பதிலும் சிக்கல்களை ஏற்படுத்திவிடுகின்றன. இதன்காரணமாக, கீழே விழுதல், அதிர்ச்சி உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு ஆட்படலாம்.
அதீத வலி உணர்வு (Severe Pain)
நரம்பியல் பாதிப்புகள், கடுமையான மற்றும் நாள்பட்ட வலி உணர்வுகளுக்கு முக்கியக் காரணமாக அமைகின்றன. வலியின் தீவிரத்தைக் குறைக்க, மருத்துவர் வழக்கமான வலி நிவாரணிகளைப் பரிந்துரைச் செய்வார். வலி குறையாதபட்சத்தில், வலி உணர்வின் மூலக் காரணத்தைக் கண்டறிய நரம்பியல் பரிசோதனையைச் செய்ய அறிவுறுத்துவார்.
பேசுவதில் ஏற்படும் சிரமங்கள்
நரம்பியல் பாதிப்பானது உடலின் இயக்கம், பார்வைத்திறனில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாது, பேசுவதிலும் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நரம்பு மண்டலத்தில் ஏற்படும் அசாதாரண மாற்றங்கள் காரணமாக மொழி அல்லது பேசுவதில் சிரமங்கள் ஏற்படும்பட்சத்தில் உடனடியாக நரம்பியல் நிபுணரைக் கலந்தாலோசிப்பது நல்லது.
மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் உங்களுக்கு இருக்கும்பட்சத்தில் உடனடியாக நரம்பியல் நிபுணரைக் கலந்தாலோசித்துச் சரியான சிகிச்சையை உரிய முறையில் மேற்கொண்டு ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…