அதிகக் கொழுப்புப் பாதிப்பின் அறிகுறிகளை அறிவோமா?
சர்வதேச அளவில் எல்லாத்தரப்பு வயதினரையும் அதிகளவில் பாதிக்கும் குறைபாடாக அதிகக் கொழுப்பு திகழ்ந்து வருகிறது. நாம் வாழும் வாழ்க்கைமுறையும் பரபரப்பான வேலை அட்டவணையும் இந்தப் பாதிப்பு இருப்பவர்களின் எண்ணிக்கையைக் கணிசமாக அதிகரிக்கச் செய்துள்ளது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் வாழும் மக்கள், கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிப்பால் மற்றும் நல்ல கொழுப்பின் அளவு கணிசமாகக் குறைவதால் ஏற்படும் உயர்க் கொழுப்புப் பாதிப்பால் அதிகம் அவதிப்பட்டு வருகின்றனர். தவறான உணவுமுறைகள், நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருக்கும் வகையிலான வாழ்க்கைமுறை, மரபணு முன்கணிப்பு உள்ளிட்ட காரணிகளின் மூலமாக, இந்தப் பாதிப்பானது ஏற்படுகிறது.
உலகச் சுகாதார அமைப்பு (WHO) தனது அறிக்கையில் கூறுகிறது: சர்வதேச அளவில் அதிகமானோரின் மரணத்திற்கு இதய நோய்களே முக்கிய காரணமாக உள்ளன. இதய நோய்கள், உடலின் கொழுப்பின் அளவு அதிகரித்தலுடன் நேரடி தொடர்புடையது ஆகும். மருத்துவத் தலையீடுகள், வாழ்க்கைமுறையில் மாற்றங்கள் உள்ளிட்டவைகளின் மூலம், இதயம் மற்றும் ரத்த நாளம் தொடர்பான நோய்களின் பாதிப்புகளைக் குறைக்கவும், கொழுப்பு சம்பந்தப்பட்ட அபாயங்களைக் குறைக்கவும் உதவுகின்றன.
அதிகக் கொழுப்பு பாதிப்பு
கெட்ட கொழுப்பு என்று அழைக்கப்படும் குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரதங்கள் (LDL), ரத்தத்தில் அதிகரித்துக் காணப்படும் நிலையையே, அதிகக் கொழுப்பு நிலை என்று வரையறுக்கிறோம். இந்தக் கெட்ட கொழுப்பானது ,தமனிகளில் அதிகளவில் படிந்து பிளேக் உருவாகக் காரணமாக அமைகிறது. இந்தப் பிளேக்குகள், ரத்த ஓட்டத்தைத் தடைப்படுத்தி மாரடைப்பு மற்றும் பக்கவாத பாதிப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைகின்றன.
அதே நேரத்தில் நல்ல கொழுப்பு என்றழைக்கப்படும் உயர் அடர்த்தி கொண்ட லிப்போ புரதங்கள் (HDL), இதய நோய்ப்பாதிப்புகளுக்கான வாய்ப்பைக் குறைக்கின்றன. சரிவிகித மற்றும் ஆரோக்கியமான உணவுமுறை, உடற்பயிற்சிகள், மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் உள்ளிட்டவற்றால், உடலின் கொழுப்பை நிர்வகிப்பது மட்டுமல்லாது, ஆரோக்கியமான வாழ்க்கையையும் வாழலாம்.
அறிகுறிகள்
அதிகக் கொழுப்பு பாதிப்பானது, பொதுவாக எவ்விதமான அறிகுறிகளையும் வெளிப்படுத்துவதில்லை. இந்தப் பாதிப்பு “சைலன்ட் கில்லராக” விளங்குகிறது. வழக்கமான ரத்த பரிசோதனையின் மூலம் உடலின் கொழுப்பு நிலையையும் கண்டறிய இயலும். இரத்த நாளங்களில் கொழுப்புப் படிவதை அல்லது ரத்த குழாய்கள் குறுகலை ஏற்படுத்தி, இதய நோய்ப் பாதிப்பை உண்டாக்குகிறது. மார்பு வலி, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்போது மட்டுமே, அறிகுறிகள் ஏற்படுகின்றன.
உடல்நலப் பாதிப்புகளின் அபாயத்தைக் குறைக்க, வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள், உடற்பயிற்சி, கொழுப்பின் அளவை மதிப்பிடுவதற்கான சீரான உணவு ஆகியவற்றுடன் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுவது மற்றும் பராமரிப்பது மிகவும் அவசியமாகும். துல்லியமான நோயறிதல் மற்றும் சிகிச்சை முறையைக் கண்டறிய சுகாதார நிபுணரைக் கலந்தாலோசிப்பது முக்கியம் ஆகும்.
அதிகக் கொழுப்பு பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்
சீரற்ற உணவுமுறை, அசாதாரண வாழ்க்கைமுறை, மரபணுக்காரணிகள் உள்ளிட்டவை முக்கியப்பங்கு வகிக்கின்றன.
சீரற்ற உணவுமுறை
எண்ணெயில் வறுத்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்பு கொண்ட உணவு வகைகளில், உடலுக்கு ஊறு விளைவிக்கும் வகையிலான கெட்ட கொழுப்பு அதிகளவில் உள்ளது. இது அதிகக் கொழுப்பு பாதிப்பில் முக்கியப்பங்கு வகிக்கிறது.
போதிய உடற்பயிற்சி இல்லாத நிலை
நீண்டநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்கும் வாழ்க்கைமுறையானது, உயர் அடர்த்தி கொண்ட லிப்போபுரதம் (HDL) எனப்படும் நல்ல கொழுப்பை அதிகரித்து, உடல் எடை அதிகரிப்பை ஊக்குவிக்கிறது.
புகைப்பிடித்தல்
புகையிலைப் பொருட்களில் காணப்படும் வேதிப்பொருள், உடலின் ரத்த நாளங்களைச் சேதப்படுத்துகிறது. இது HDL எனப்படும் நல்ல கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.
மரபியல் காரணிகள்
அதிகக் கொழுப்பு பாதிப்பு கொண்டவர்களுக்கு ஹைபர்கொலஸ்ரோலீமியா
அல்லது பிற மரபணுக் காரணிகள் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
அதிகக் கொழுப்பு பாதிப்பு எவ்வாறு கண்டறியப்படுகிறது?
இரத்த பரிசோதனைகள்
இரத்த பரிசோதனையில் HDL எனப்படும் நல்ல கொழுப்பு மற்றும் LDL எனப்படும் கெட்ட கொழுப்பு மற்றும் டிரைகிளிசரைடுகளின் அளவைக் கண்டறிய லிப்பிட் குழு மதிப்பீட்டானது அவசியமாகிறது. இந்தச் சோதனையில் துல்லியமான முடிவுகளைப் பெற, ரத்த பரிசோதனைக்கு முன் 9 முதல் 12 மணிநேரத்திற்கு, எதையும் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைச் செய்கின்றனர்.
அபாய மதிப்பீடு
சம்பந்தப்பட்ட நபரின் வாழ்க்கைமுறை, குடும்ப வரலாறு, வயது, மரபணு விவரங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம், இதய நோய் சார்ந்த அபாயத்தை, நாம் முன்கூட்டியே கணிக்கலாம்.
உடல் பரிசோதனைகள்
வாழ்க்கைமுறை, பழக்கவழக்கங்கள், உடல் எடை, பொது ஆரோக்கியம் உள்ளிட்டவற்றை மதிப்பிடுவதன் மூலம், அதிகக் கொழுப்பு பாதிப்பு குறித்த கூடுதல் புரிதலைப் பெற இயலும்.
கூடுதல் சோதனைகள்
இதயப் பாதிப்பு அபாயத்தை அடையாளம் கண்டறிய கரோனரி கால்சியம் ஸ்கோரிங் அல்லது CRP எனப்படும் சி- ரியாக்டிவ் புரதம் உள்ளிட்ட கூடுதல் சோதனைகள் மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மேலும் வாசிக்க : கொலஸ்ட்ராலைக் குறைக்கும் உணவுமுறையை அறிவோமா?
அதிகக் கொழுப்புப் பாதிப்பிற்கான சிகிச்சைத் தேர்வுகள்
அதிகக் கொழுப்பு பாதிப்பை நிர்வகிப்பதற்கு வாழ்க்கைமுறையில் மாற்றங்கள் மேற்கொள்வது மட்டுமல்லாது, மருத்துவத் தலையீடுகளும் இன்றியமையாததாகின்றன. பின்வரும் வழிமுறைகளைக் கவனமாகக் கையாள்வதன் மூலம், அதிகக் கொழுப்புப் பாதிப்பில் இருந்து நிவாரணம் பெறலாம்.
வாழ்க்கைமுறை மாற்றங்கள்
நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் கொண்ட உணவு வகைகளைக் குறைவாகவும், பழ வகைகள், காய்கறிகள், முழுத் தானியங்கள் கொண்ட உணவுமுறையைக் கடைப்பிடித்து வந்தால், இதய ஆரோக்கியத்தைப் பேணிக் காக்கலாம்.
உடற்பயிற்சி பழக்கவழக்கம்
விறுவிறுப்பான நடைப்பயிற்சி, ஏரோபிக் பயிற்சிகள் உள்ளிட்ட உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதை வழக்கமாக்கிக் கொண்டால், இதய ஆரோக்கியம் மேம்படும்.
உடல் எடை மேலாண்மை
சரிவிகித உணவுமுறை, உடற்பயிற்சிப் பழக்கம் உள்ளிட்டவை, ஆரோக்கியமான உடல் எடையை நிர்வகிப்பதற்கான சிறந்த செயல்முறை ஆகும்.
மருந்து முறைகள்
கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த, மருத்துவர்கள் ஸ்டாடின்கள், பித்த சிகிச்சை மருந்துகள் உள்ளிட்ட மருந்துகளைப் பரிந்துரைக்கின்றனர்.
புகைப்பழக்கத்தைக் கைவிடுங்கள்
புகைப்பிடிக்கும் பழக்கம், கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்துவிடுகிறது. இந்தப் பழக்கத்தைக் கைவிடும்போது, உடலில் நேர்மறையான விளைவுகள் ஏற்படுவது மட்டுமல்லாது, இதய நலனும் காக்கப்படுகிறது.
வழக்கமான உடல் பரிசோதனைகள்
மேற்கொள்ளும் சிகிச்சை முறைகளில் நிகழும் விளைவுகளுக்கு ஏற்ப, சிகிச்சை முறைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளக் கண்காணிப்பு நிகழ்வானது அவசியமாகிறது. வழக்கமான கொழுப்பு பரிசோதனைகள் மற்றும் இதயநாள ஆரோக்கியம் சார்ந்த மதிப்பீடுகள் வழக்கமான உடல் பரிசோதனைகளில் அடங்கும்.
தடுப்பு முறைகள்
- புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபடுதல்
- மதுப்பழக்கத்தில் இருந்து விலகி இருத்தல்
- தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல்
- ஆரோக்கியமான உடல் எடையை எப்போதும் பராமரித்தல்
- உணவுமுறையில் அதிகக் காய்கறிகள் மற்றும் பழ வகைகளைச் சேர்த்துக் கொள்ளுதல்
இத்தகையத் தடுப்பு முறைகளைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதன் மூலம், அதிகக் கொழுப்புப் பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்க முடியும்
மேற்குறிப்பிட்ட வழிமுறைகளைக் கவனமாகப் பின்பற்றி, அதிகக் கொழுப்புப் பாதிப்பில் இருந்து விடுபட்டு, ஆரோக்கியமான மற்றும் வளமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…