ஹைபர்டென்சன் நிர்வகித்தலில் உடற்பயிற்சியின் பங்கு
உயர் ரத்த அழுத்த பாதிப்பே, ஹைபர்டென்சன் என்று வரையறுக்கப்படுகிறது. இந்தப் பாதிப்பு கொண்டவர்களின் உடலில் ரத்தமானது தமனிகள் வழியாக, இயல்பைவிட அதிக வேகத்தில் நகர்கிறது. மனித உடல் ஓய்வில் இருக்கும்போதும், இந்த விரைவான இயக்கம் தொடர்ந்து கொண்டே உள்ளது. இந்தப் பாதிப்பு, தமனிகள் முழுமையாகச் சேதத்திற்கு உள்ளாக்குகிறது. உயர் ரத்த அழுத்த பாதிப்பானது நீண்ட நாள்களுக்குத் தொடரும்பட்சத்தில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். இதில் இதயச் செயலிழப்பு, மாரடைப்பு போன்ற இதய நோய்கள், சிறுநீரகப் பாதிப்பு, கண் பார்வை இழப்பு, அறிவாற்றல் பிரச்சினைகள் அடங்கும்.
இந்தியாவில், உயர் ரத்த அழுத்த பாதிப்பானது உடல்நலப் பாதிப்புகளில் முதன்மையானதாக உள்ளது. இது நடுத்தர வயதினரிடையே அதிகளவிலான மரணத்தை ஏற்படுத்துகின்றன. உயர் ரத்த அழுத்த பாதிப்பின் தீவிரத்தைப் பல வழிகளில் கட்டுப்படுத்த முடியும். இதற்கு உடல் ஆரோக்கியத்தைச் சரியான அளவில் பின்பற்றுதல், சிறந்த சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்தல், மற்றும் தகுந்த இடைவெளிகளில் உடல்நலப் பரிசோதனைகளை மேற்கொள்ளுதல் ஆகியவை அவசியம்.
இரத்த அழுத்தம் என்பது தமனிகள் வழியாக, ரத்தம் விரைந்து செல்லும் அழுத்தம் என்று வரையறுக்கப்படுகிறது. உயர் ரத்த அழுத்தம் என்பது இந்த அழுத்தம் அதிகரித்துக் காணப்படும் நிகழ்வு ஆகும். இரத்த அழுத்தம், ஸ்பிக்மோமோனோமீட்டர் என்ற உபகரணத்தின் உதவி கொண்டு அளவிடப்படுகிறது. இரத்த அழுத்தம் சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் அழுத்தங்களைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. சிஸ்டாலிக் அழுத்தம் என்பது, இதயம் துடிக்கும் நிலையில் இருக்கும் அழுத்தம் ஆகும். டயஸ்டாலிக அழுத்தம் என்பது, இதயம் ஓய்வுநிலையில் இருக்கும்போது, அதாவது துடிப்புகளுக்கு இடையில் அளவிடப்படும் அழுத்தம் ஆகும்.
இயல்பான நிலையில் ரத்த அழுத்தமானது, 120/80 mmHg என்ற அளவிலும், உயர் ரத்த அழுத்த பாதிப்பு 140/90 mmHg என்ற அளவிலும், குறைந்த ரத்த அழுத்த மதிப்பு 90/60 mmHg என்று வரையறுக்கப்பட்டு உள்ளது.
உயர் ரத்த அழுத்தம்
உயர் ரத்த அழுத்த பாதிப்பை நிர்வகிக்க மருந்துமுறைகள் பயன் கொண்டது என்று நிரூபிக்கப்பட்ட போதிலும், உடற்பயிற்சி நடைமுறைகளும் சிறந்த நிவாரணத்தை அளிப்பதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
வழக்கமான உடற்பயிற்சி நடைமுறையானது, உயர் ரத்த அழுத்த பாதிப்பு நோயாளிகளுக்கு, பாதிப்பைக் குறைக்கவல்ல ஆபாந்பாந்தவனாக விளங்குகிறது. உடற்பயிற்சி நிகழ்வானது, ஹைபர்டென்சன் பாதிப்பைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாது, இதய நோய்ப்பாதிப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகளின் தீவிரத்தைக் குறைக்க உதவுகிறது. உயர் ரத்த அழுத்த பாதிப்பு கொண்டவர்கள், இதயத்துடிப்பை அதிகரிக்கும் வகையிலான பளு தூக்குதல், கள விளையாட்டுகள் உள்ளிட்டவைகளிலும், சில யோகாப் பயிற்சிகளையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
உடற்பயிற்சி எவ்வாறு உயர் ரத்த அழுத்த பாதிப்பினைக் கட்டுப்படுத்துகிறது?
இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது
சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் ரத்த அழுத்த மாறுபாட்டைக் கட்டுப்படுத்துவதில், உடற்பயிற்சியின் பங்கு அளப்பரியது ஆகும். வழக்கமான உடற்பயிற்சிகள், ரத்த அழுத்த விகிதத்தை 5 முதல் 7 mmHg வரைக் குறைக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
உடற்பயிற்சிகள், ரத்த அழுத்த பாதிப்பைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது. இது இதயத்தைப் பலப்படுத்துகிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சிப் பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்கிறது.
மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது
உடற்பயிற்சி நிகழ்வானது, கவலை உணர்வைத் தவிர்த்து, மன அழுத்தத்தைக் குறைக்கிறது. மன அழுத்த மேலாண்மை, முழுமையான உயர் ரத்த அழுத்த பராமரிப்புடன் ஒருங்கிணைந்தது ஆகும். வழக்கமான உடற்பயிற்சிகள் நடைமுறையானது, உயர் ரத்த அழுத்தம் – மன அழுத்த சமநிலையை எட்டுவதற்கான இயற்கையான அணுகலை வழங்குகிறது.
மேலும் வாசிக்க : இதய ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் ஆயுர்வேத மருத்துவம்
உடல் எடைக் குறைப்பை ஊக்குவிக்கிறது
உயர் ரத்த அழுத்த பாதிப்பிற்குக் காரணமான உடல் எடையைக் கணிசமான அளவிற்குக் குறைக்க, உடற்பயிற்சி பேருதவி புரிகிறது.
இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது
உடற்பயிற்சிகளைத் தினசரி மேற்கொள்வதன் மூலம், இன்சுலின் உணர்திறன் மேம்படுவதோடு, வளர்சிதை மாற்ற ஆரோக்கியமும் ஊக்குவிக்கப்படுகிறது. உடற்பயிற்சிகள், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைச் சிறந்த முறையில் நிர்வகித்து, இரண்டாம் வகை நீரிழிவு நோய்ப் பாதிப்பின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
எண்டோதீலியல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது
இரத்த நாளத்தின் உள்புறணிப்பகுதியான எண்டோதீலியத்தின் செயல்பாட்டை மேம்படுத்த உடற்பயிற்சி, சிறந்த ஊக்கியாகச் செயல்படுகிறது. இதன்மூலம், ரத்த ஓட்டம் மேம்படுவதுடன், இதய நோய்களின் அபாயம் கட்டுப்படுத்தப்படுகிறது.
உயர் ரத்த அழுத்த பாதிப்பு நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படும் உடற்பயிற்சிகள்
விறுவிறுப்பான நடைப்பயிற்சி
விறுவிறுப்பான நடைப்பயிற்சி, குறைந்த அளவிலான தாக்கம் கொண்ட மற்றும் மிகவும் பயனுள்ள உடற்பயிற்சியாகத் திகழ்கிறது. இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன், ரத்த அழுத்தத்தை நிர்வகித்து, இதய நோய்ப்பாதிப்புகளைக் கட்டுப்படுத்துகிறது. இந்தப் பயிற்சியானது, தனிநபர்களுக்கு எளிதில் அணுகக்கூடியது மற்றும் நிலையான விருப்பத் தேர்வாக உள்ளது.
சைக்கிள் ஓட்டுதல்
சிறந்த ஏரோபிக் வகை உடற்பயிற்சிகளில் முதன்மையானதாக, சைக்கிள் ஓட்டுதல் பயிற்சியானது விளங்குகிறது. சைக்கிள் ஓட்டுதல் பயிற்சி, இதயத்தை வலுப்படுத்துவது மட்டுமல்லாது, நுரையீரலின் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது. இரத்த அழுத்த மாறுபாட்டையும் சிறப்பாக நிர்வகிக்கிறது.
நீச்சல்
இதய ஆரோக்கியம், மன அழுத்தத்தைக் குறைத்தல், ரத்த அழுத்த கட்டுப்பாடு உள்ளிட்டவற்றை ஒருங்கே நிர்வகிக்க விரும்புபவர்களுக்கு, நீச்சல் பயிற்சியானது சிறந்த தேர்வாக விளங்குகிறது.
உடலின் வலிமையை அதிகரிக்கும் பயிற்சிகள்
உடலின் வலிமையை அதிகரிக்கும் பயிற்சிகள், தசை வளர்ச்சி நிகழ்வில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இது உடலில் தேவையற்ற கலோரிகளை எரித்து, ஆரோக்கியமான உடல் எடைப் பெற உதவுகிறது. இரத்த அழுத்த மாறுபாட்டைக் குறைப்பதோடு மட்டுமல்லாது, இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது.
யோகாப் பயிற்சி
யோகாப் பயிற்சி மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், இதய ஆரோக்கியத்திலும் முக்கியப்பங்கு வகிக்கிறது. யோகாப் பயிற்சி மேற்கொள்வதை, உங்கள் வாழ்க்கையின் தினசரி நடவடிக்கையாக மாற்றிக் கொள்வதன் மூலம் உடலின் நெகிழ்வுத்தன்மை, சமநிலை மற்றும் தசை வலிமை மேம்படுகிறது. வழக்கமான உடற்பயிற்சி நிகழ்வுடன், ஆரோக்கியமான வாழ்க்கைமுறையும் இணையும்பட்சத்தில், இதய நாளங்கள் தொடர்பான நோய்ப்பாதிப்புகளின் அபாயத்தைப் பெருமளவில் கட்டுப்படுத்த இயலும்.
மேற்குறிப்பிட்ட உடற்பயிற்சிகள் உடன் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைக் கையாண்டு, ஹைபர்டென்சன் எனப்படும் உயர் ரத்த அழுத்த பாதிப்பைச் சிறப்பாக நிர்வகித்து வளமான நல்வாழ்க்கை வாழ்வீராக..