மேமோகிராம் சோதனையின் வகைகள் யாவை?
மார்பகப் புற்றுநோய், சர்வதேச அளவில் மிக அதிகமானோரிடம் காணப்படும் நோயாக மாறி உள்ளது. இது பலரது மரணத்திற்கும் காரணமாக அமைவதால், இதற்கு உரிய சிகிச்சை மேற்கொள்வது அவசியமாகிறது. அமெரிக்காவில் 8 பேரில் ஒருவருக்கு, இந்த மார்பகப் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேமோகிராம் சோதனை
மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து, அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்வதன் மூலம், இந்த அபாயத்தில் இருந்து மனிதகுலத்தைக் காப்பாற்ற முடியும். மார்பகப் புற்றுநோய் பாதிப்பை, முன்கூட்டியே கண்டறிய, மருத்துவர்கள், மேமோகிராம் சோதனையை, அதிக அளவில் பரிந்துரைக்கின்றனர். இந்தச் சோதனையின் மூலம் , மார்பகப் பகுதியில் உள்ள திசுக்களில் ஏற்பட்டுள்ள அசாதாரண மாற்றம், புற்றுநோயா, இல்லையா என்பதை உறுதி செய்ய உதவுகிறது. 40 முதல் 50 வயதிற்குள் உள்ள பெண்கள், ஆண்டிற்கு ஒருமுறை, மார்பகப் புற்றுநோய் பரிசோதனைச் செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
மேமோகிராபியின் வகைகள்
மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே எளிதாகக் கண்டறிய உதவும் மேமோகிராம் சோதனையின் பயன்பாட்டைப் பொறுத்து இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். அதுகுறித்து இங்கு விரிவாகப் பார்க்கலாம்.
டிஜிட்டல் மேமோகிராம் சோதனை
டிஜிட்டல் மேமோகிராம் சோதனையில் எடுக்கப்படும் படங்கள் எலெக்ட்ரானிக் முறையில் சேகரிக்கப்படுவதால், அதை எப்போது வேண்டுமானாலும் தேவைப்படும் போது ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்ளலாம். டிஜிட்டல் மேமோகிராம் சோதனையின் போது எடுக்கப்படும் படங்கள், டிஜிட்டல் முறையில் கணினியிலேயே சேகரிக்கப்படுவதால், மறு பகுப்பாய்வுக்கும், எளிதாகப் பயன்படுத்தவும் வழிவகை ஏற்பட்டு உள்ளது.
இந்த வகைச் சோதனையின் போது, சம்பந்தப்பட்ட நபரின் மார்பகப் பகுதியில், குறைந்த அளவிலான எக்ஸ்ரே கதிர்களைச் செலுத்தி, அப்பகுதி திசுக்களில் ஏற்பட்டு உள்ள அசாதாரண மாற்றம் அளவிடப்படுகிறது. இதன்மூலம் கிடைக்கும் டிஜிட்டல் படங்களைக் கொண்டு, புற்றுநோய் உள்ளதா அல்லது இல்லையா என்பதைக் கண்டறியலாம். குறைந்த அளவிலான எக்ஸ் கதிர்களே இங்குப் பயன்படுத்தப்படுவதால், இது மிகவும் பாதுகாப்பான சோதனையாகக் கருதப்படுகிறது.
3D மேமோகிராம் சோதனை
3D மேமோகிராம் சோதனை, மார்பக டோமோசின்தசிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தச் சோதனையில், எக்ஸ் கதிர்கள் மார்பகப் பகுதியை, பல்வேறு கோணங்களில் படம் எடுத்து, பின் அந்தப் படங்களை ஒருங்கிணைத்து மார்பகத் திசுக்களின் முப்பரிமாணப் படங்களாக நமக்கு வழங்குகின்றது. இந்தச் சோதனையில் வழிமுறை, சாதாரண மேமோகிராம் சோதனையின் வழிமுறை ஒத்து உள்ளது. இதன்மூலம் கிடைக்கும் படங்கள், மருத்துவரை, இதுகுறித்த தெளிவான முடிவிற்கு வரத் துணைபுரிகிறது.
சர்வதேச அளவில் 3D மற்றும் 2D மேமோகிராம் சோதனைகள் புழக்கத்தில் உள்ளன. இவ்விரு சோதனைகளும் ஒரே அளவிலான வழிமுறைகளையும், கால அளவையும் கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
3D சோதனையில் மார்பகப் பகுதியின் முப்பரிமாணப் படங்களும், 2D சோதனையில் இரண்டு பரிமாணப் படங்களும் நமக்குக் கிடைக்கின்றன.
2011ஆம் ஆண்டில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையால், 3D மேமோகிராம் சோதனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது பெரும்பாலானோரால் மேற்கொள்ளப்படும் சோதனை முறையாக இது விளங்கி வருகிறது.
2D சோதனை முறைகளைக் காட்டிலும் 3D சோதனை முறையில், தவறான முடிவு வரும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதால், பெரும்பாலான மருத்துவமனைகள் 3D சோதனை முறையையே பின்பற்றி வருகின்றன. அமெரிக்காவின் வாஷிங்டன் உள்ளிட்ட பல மாகாணங்களில், 2D சோதனைக்கு ஆகும் கட்டணமே, 3D சோதனைக்கு வசூலிக்க வேண்டும் என்ற சட்டம் நடைமுறையிலிருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க : மேமோகிராம் சோதனை என்றால் என்ன?
படச்சுருள் மேமோகிராம் சோதனை
படச்சுருள் மேமோகிராம் சோதனையில், கறுப்பு – வெள்ளை நிறங்களிலேயே படங்கள் கிடைக்கின்றன. இந்தச் சோதனை, மிகவும் மெதுவாக நடைபெறும் சோதனை ஆகும். சில ஆண்டுகளுக்கு முன்பே, இந்தச் சோதனை, புழக்கத்திலிருந்து விலகி விட்டதால், தற்போதைய நிலையில், டிஜிட்டல் மற்றும் 3D மேமோகிராம் சோதனை முறைகளே பெருமளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு இருப்பின், எந்த வகை மேமோகிராம் சோதனைப் பொருந்துகிறது என்பதை மருத்துவரிடம் கலந்தாலோசித்தால், அவர்ப் பொருத்தமான சோதனைமுறைகளைப் பரிந்துரைச் செய்வார்.
அனைவரும் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகள்……