Pet-CT ஸ்கேனின் வகைகள் – அதன் பயன்கள்
புற்றுநோய் பாதிப்புகள், இதயம் மற்றும் அது சார்ந்த நோய்கள், மூளையில் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்டவற்றை, அதன் துவக்க நிலையிலேயே கண்டறிய, மருத்துவ வல்லுநர்கள், Pet-CT ஸ்கேன் முறையையே அதிகம் பரிந்துரைச் செய்கின்றனர்.
ஒவ்வொரு புற்றுநோய் பாதிப்புகளையும், அதன் துவக்க நிலையிலிருந்து கண்டறிய Pet-CT ஸ்கேன் முறையில், ஐசோடோப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் பயன்படுத்தப்படும் ஐசோடோப்புகளைப் பொறுத்து, Pet-CT ஸ்கேன் முறையை, 4 வகையாகப் பிரிக்கின்றோம்.
Pet-CT ஸ்கேன் முறையில், ஐசோடோப்புகள், திரவ நிலையில் இருக்கும். ஸ்கேன் எடுப்பதற்கு முன்னதாக, இந்தத் திரவ நிலையிலான ஐசோடோப்புகள், ஊசி மூலம் உட்செலுத்தப்படுகிறது. இந்தத் திரவ ஐசோடோப்புகளில் உள்ள டிரேசர், உடலினுள் நுழைந்து, குறிப்பிட்ட புற்றுநோய் செல்கள் உடன் இணைந்து, அந்த இடத்தை ஒளிரச் செய்கிறது. இதன்மூலம், பாதிப்படைந்த இடத்தை, Pet-CT ஸ்கேனின் உதவியுடன் மருத்துவர்கள் கண்டறிகின்றனர்.
Pet-CT ஸ்கேனின் வகைகள்
F18 FDG, F18 PSMA , செரியணா (18F-FES) மற்றும் நெட்ஸ்பாட் (கேலியம் Ga 68 டொடாடேட்) உள்ளிட்ட ஐசோடோப்புகள் தற்போது பெருமளவில் புற்றுநோய் பாதிப்பைக் கண்டறியப் பயன்படுகின்றன.
F18 FDG
புற்றுநோய் செல்கள், உடலின் மற்ற செல்களைவிட, அதிகச் செயல்திறன்க் கொண்டதாக இருக்கும் தன்மைக் கொண்டது . மேலும் புற்றுநோய் செல்கள் விரைவாகப் பல்கிப் பெருகும் தன்மை உடையவை. இந்தத் தன்மைக் கொண்ட செல்களை அடையாளம் கண்டு கண்காணிக்க, புளோரோடியாக்ஸிகுளுகோஸ் (FDG) ஐசோடோப் உதவுகிறது. இது அந்த புற்றுநோய் செல்களைத் துல்லியமாகப் படம்பிடிக்க உதவுகிறது.
நுரையீரல், மூளை, குடல் பகுதியில் ஏற்படும் புற்றுநோய் மட்டுமல்லாது லிம்போமா மற்றும் மெலனோமா வகைப் புற்றுநோய்ச் செல்களைக் கண்காணிக்கவும், அதற்குரிய சிகிச்சைகளை அளிக்கப் புளோரோடியாக்ஸி குளுக்கோஸ் (FDG) உதவுகிறது.
இந்தச் சோதனையைச் செய்து கொள்பவர்கள், சோதனைக்கு 6 மணி நேரம் முன்னதாகவே, உணவு சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 200க்கும் மேல் மிகாமல் இருக்க வேண்டும். (ரத்தத்தில் சர்க்கரையின் அளவை, குளுகோமீட்டர்க் கொண்டு அளவிட வேண்டும்). திரவ ஐசோடோப்பை உடலில் செலுத்திய பிறகு, ஒரு மணிநேரம் ஓய்வு நிலையில் இருப்பது அவசியம் ஆகும். ஸ்கேன் எடுப்பதற்கு முன்னர்ச் சிறுநீர்ப்பையைக் காலி செய்துவிட வேண்டும். இந்த ஸ்கேன் சோதனைக்கு, 15 முதல் 25 நிமிடங்கள் ஆகும்.
F18 PSMA
நமது உடலின் முக்கிய சுரப்பியாக உள்ள புராஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் புற்றுநோய் கட்டியை அடையாளம் காண உதவும் ஆன்ட்டிஜென் (PSMA – prostate-specific membrane antigen) ஆகும்.
புராஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பின் துவக்க நிலை அறிகுறியான புராஸ்டேட் ஸ்பெசிபிக் ஆன்ட்டிஜென் அதிகரித்து இருப்பதைத் தெரிந்து கொள்ளவும் மற்றும் ஒருவருக்குப் புராஸ்டேட் சுரப்பி புற்றுநோய் இருப்பதைக் கண்டறிய இந்த F18 PSMA வகை உதவுகிறது. மற்ற பட வகைகளில் அடையாளம் காண முடியாத புராஸ்டேட் சுரப்பு புற்றுநோய் செல்களை, இந்த வகை ஸ்கேன் மூலமாகவே, துல்லியமாகக் கண்டறிய உதவுகிறது.
இந்தச் சோதனையை மேற்கொள்வதற்கு முன் பட்டினி இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. ஊசி செலுத்தப்பட்ட பிறகு, ஒரு மணி நேரம் ஓய்விலிருந்தால் போதும். ஸ்கேன் எடுப்பதற்கு முன் சிறுநீர்ப்பையைக் காலி செய்து விடுவது நல்லது. இந்தச் சோதனை 20 முதல் 30 நிமிடங்கள் கால அளவு கொண்டது ஆகும்.
கார்டியாக் Pet ஸ்கேன்
கார்டியாக் Pet ஸ்கேன், இதயம் மற்றும் அதுசார்ந்த பாதிப்புகளைக் கண்டறியப் பெருமளவில் பரிந்துரைக்கப்படும் சோதனை ஆகும். இதயப் பகுதியில் உட்செலுத்தப்படும் ரேடியோடிரேசர், அதில் உள்ள பாதிப்புகளைக் கண்டறிந்து விரிவான முப்பரிமாண படங்களாக நமக்கு வழங்குகிறது.
இதய அறைகளுக்கு, ரத்த ஓட்டம் சீராகச் சென்றால் மட்டுமே, நமது உடலில் உள்ள அனைத்துப் பாகங்களும் நல்ல முறையில் இயங்கும். மாரடைப்பு உள்ளிட்ட குறைபாடுகள் ஏற்படும் போது, இதயத்தின் செயல்பாடுகள் ஆட்டம் காணத் துவங்கி விடுகிறது. இந்த ஸ்கேன் முறை, இதயத்தில் ஏற்படும் பாதிப்புகளை அதன் துவக்க நிலையிலேயே கண்டறிந்து, அதற்கேற்ற சிகிச்சை அளிக்க உதவுகிறது.
செரியன்னா (18F-FES)
புளோரோஎஸ்ட்ராடியோல் F18 என்ற வேதிப்பொருளையே, சுருக்கமாக, செரியன்னா எனக் குறிப்பிடுகிறோம். இது மார்பகப் புற்றுநோய்ச் செல்களுடன் ஈஸ்ட்ரோஜன் ரிசப்டார்ப் பாசிட்டிவ் ஏற்பி உடன் இணைந்து, புற்றுநோய் செல்களை அடையாளம் காண உதவுகிறது.
பயாக்ஸி சோதனை மேற்கொள்ளப்பட்டதில், ஈஸ்ட்ரோஜன் ரிசப்டார்ப் பாசிட்டிவ் ஏற்பி இருப்பது தெரியவரும் பட்சத்தில், இந்தச் சோதனை, மார்பகப் புற்றுநோய்ப் பாதிப்பைக் கண்டறிய உதவுகிறது.
இந்தச் சோதனையை மேற்கொள்வதற்கு முன் பட்டினி இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. ஊசி செலுத்தப்பட்ட பிறகு, 80 நிமிடங்கள் ஓய்வில் இருப்பது அவசியம் ஆகும். இந்தச் சோதனைக்கு முன்னதாக, ஹார்மோன்களின் செயல்பாடுகளைத் தடைச் செய்யும் சிகிச்சைகளைத் தவிர்க்க வேண்டும். இந்தச் சோதனை, 20 முதல் 30 நிமிடங்கள் கால அளவு கொண்டது ஆகும்.
மேலும் வாசிக்க : PET-CT என்றால் என்ன – அதன் பயன்பாடு என்ன?
நெட்ஸ்பாட் (கேலியம் Ga 68 டொடாடேட்)
நமது உடலில், ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் நரம்பு செல்களில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பிற்கு நியூரோஎண்டோகிரைன் கட்டிகள் என்று பெயர். இந்த நியூரோஎண்டோகிரைன் கட்டிகளில் காணப்படும் சொமாட்டோஸ்டாடின் ரிசெப்டார்களில், இந்த நெட்ஸ்பாட் இணைந்து, பாதிப்பைக் கண்டறிய உதவுகிறது.
நியூரோஎண்டோகிரைன் கட்டிகள் மிகவும் அரிதான வகைப் புற்றுநோய் கட்டி ஆகும். இது பொதுவாக நுரையீரல், குடல் பகுதிகள், வயிற்றுப்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் காணப்படுகின்றன.
இந்தச் சோதனையை மேற்கொள்வதற்கு முன் பட்டினி இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. சோதனைக்கு முன் சொமட்டோஸ்டாடின் மருந்துகளை உட்கொள்ளக் கூடாது. ஊசி செலுத்தப்பட்ட பிறகு 40 நிமிடங்கள் ஓய்வு நிலையில் இருப்பது அவசியம். இந்தச் சோதனை 25 முதல் 30 நிமிடங்கள் கால அளவு கொண்டது ஆகும்.
புற்றுநோயின் பாதிப்பைப் பொறுத்து, Pet-CT ஸ்கேனின் எந்த வகைச் சரியாகப் பொருந்தும் என்பதை உணர்ந்து, அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.