ஆரோக்கியம், உணவுமுறையைத் தீர்மானிக்கும் ஜீன்கள்
கொரோனா பெருந்தொற்றுக் காலத்திற்குப் பிறகு, மருத்துவத்துறையில் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊட்டச்சத்து நடைமுறைக்கு, மக்கள் அதிக முக்கியத்துவம் தர துவங்கி உள்ளனர்.
ஊட்டச்சத்து அறிவியல் என்பது எப்போதுமே சிக்கலான மற்றும் வளர்ந்து வரும் துறையாக உள்ளது.புதிய ஆராய்ச்சிகள் மற்றும் மாறும் மருத்துவ நடைமுறைகளுக்கு ஏற்ப, உணவுப் பரிந்துரைகளும் தொடர்ந்து மாற்றம் அடைகின்றன. மரபியல் மற்றும் மரபணுவியலில் சமீபத்தில் ஏற்பட்டு உள்ள முன்னேற்றங்களின் பயனாக, ஊட்டச்சத்து முறையிலும் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன.
நமது உடலில் உள்ள மரபணுக்கள், நம் உணவுமுறையுடன் எவ்வாறு தொடர்பில் உள்ளன என்பதை விளக்கும் அறிவியலே, நியூட்ரிஜீனோமிக்ஸ் ஆகும். இந்தத் துறையானது, ஊட்டச்சத்து முறையைப் புரிந்துகொள்வதற்கு மட்டுமல்லாது, அதைத் தனிப்பயனாக்குவதற்கும் உதவுகிறது.
மரபணு மற்றும் ஊட்டச்சத்து முறையின் இணைப்பு
நாம் சாப்பிடும் உணவு வகைகளுக்கு, நமது உடலானது எவ்வாறு பிரதிவினைப் புரிகிறது என்பதைத் தீர்மானிப்பதில், மரபணுக்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. மரபணு விகிதமானது, நபருக்கு நபர் வேறுபடுவதால், ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதும் வீதமும் மாறுபடுகின்றன. நம் உடலானது, ஊட்டச்சத்துகளை எவ்வாறு செயலாக்குகின்றன, மரபணு மாறுபாடுகளின் வீதம், சில நபர்களுக்குச் சிலவகையான உணவுகள் அதிகப் பலன்களை அளிப்பதாக உள்ளன, மற்றவர்களுக்கு அதே உணவுகள் ஏன் அதே நன்மைகளை அளிப்பதில்லை என்பதை நியூட்ரிஜீனோமிக்ஸ் விளக்குகிறது.
மேம்பட்ட ஊட்டச்சத்து உறிஞ்சுதல் நிகழ்வு
நம் உடலின் முக்கியச் செயல்பாடுகளுக்குத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள் என்ப்படும் தாது உப்புகள் உள்ளிட்ட இன்றியமையாத ஊட்டச்சத்துகளை, திசுக்களானது எவ்வாறு திறம்பட உறிஞ்சுகின்றன என்பதை, மரபணு மாறுபாடுகளே தீர்மானிக்கின்றன. ஊட்டச்சத்துக் குறைபாடுகளினால் பாதிக்கப்பட்டு உள்ள நபர்களை, நியூட்ரிஜீனோமிக்ஸ் உதவியுடன் அடையாளம் கண்டு, அவர்களின் உணவுமுறைகளில் பொருத்தமான மாற்றங்களை மேற்கொள்வது மட்டுமல்லாது, அவர்களுக்கேற்ற பரிந்துரைகளையும் கூடுதலாக மேற்கொள்ள இயலும்.
தனிப்பயனாக்கப்பட்ட ஊட்டச்சத்து முறைகள்
பாரம்பரிய முறையிலான உணவு வழிகாட்டுதல் நெறிமுறைகள், மக்கள்தொகை அடிப்படையிலான பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டவைகளாக உள்ளன. ஒருவருக்குப் பலன் தரும் உணவுமுறை மற்றவருக்குப் பலனற்றதாக இருக்கலாம். இதற்கு மரபணு மாறுபாடுகளே காரணம்.குறிப்பிட்ட நபரின் மரபணு முன்கணிப்புகளைக் கருத்தில் கொண்டு, தனிப்பயனாக்கப்பட்ட ஊட்டச்சத்து முறைகளை உருவாக்க, நியூட்ரிஜீனோமிக்ஸ் துறையானது பேருதவி புரிகிறது.
உடல் எடை நிர்வாகம்
உடல் எடை இழப்பு மற்றும் பராமரிப்பு இவ்விரண்டும் கடும் சவாலான செயல்முறைகள் ஆகும். இதன்காரணமாகத் தான் சர்வதேச அளவில் உடல் பருமன் கொண்டவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடல் பருமன் கொண்டவர்களில் பெரும்பாலானோருக்கு நீரிழிவு, இதய நோய்ப் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
மரபணுக்கள் ஊட்டச்சத்தின் மையமாகச் செயல்படுவதோடு மட்டுமல்லாது, ஊட்டச்சத்து முறைகள் தொடர்பான நடைமுறைகளில் முக்கியப்பங்களிப்பையும் அளிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட நபரின் மரபணுவானது, ஊட்டச்சத்து முறையை எவ்வாறு பாதிக்கின்றன என்பது தொடர்பான நுண்ணறிவுகளை வழங்குகிறது. இது உடல் எடை மேலாண்மை உத்திகளை வகுக்க உதவுகிறது.
மேலும் வாசிக்க : ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக் குறிப்புகள் இதோ…!
உணவு ஒவ்வாமைப் பாதிப்புகள்
உணவு சகிப்பின்மை மற்றும் அதன் உணர்திறனுக்கு முக்கியப் பங்களிக்கும் மரபணுக் காரணிகளை அடையாளம் காண, நியூட்ரிஜீனோமிக்ஸ் பேருதவி புரிகிறது. உடலின் அனைத்து வகையான நோய்ப்பாதிப்புகளும், குடலில் இருந்தே துவங்குகின்றன என்று மருத்துவத்தின் தந்தை என்றழைக்கப்படும் ஹிப்போகிராட்டீஸ் மேற்கோள் காட்டி உள்ளார். உணவு சகிப்பின்மை நிலையானது, குடலில் வீக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாது, மூளையின் செயல்பாட்டையும் பாதிக்கும் வகையினதாக உள்ளது. இதன்விளைவாக, சிந்தனைத்திறன் குறைதல், ஞாபக மறதி அதிகரித்தல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பிட்ட நபரின் மரபணு சுயவிவரங்களுக்கு ஏற்ப, சகிப்பின்மை உணர்வை ஏற்படுத்தாத உணவுமுறையை உருவாக்க, நியூட்ரிஜீனோமிக்ஸ் உதவுகிறது.
ஆரோக்கியம் மற்றும் உணவுமுறையை நிர்ணயிக்கும் ஜீன்கள் அமைப்பில், நியூட்ரிஜீனோமிக்ஸ் அறிவியலின் உதவியுடன் மாற்றங்களை மேற்கொண்டு, ஆரோக்கியமான நல்வாழ்வை அமைத்துக் கொள்வோமாக…