பார்கின்சன் நோயின் அறிகுறி, சிகிச்சையை அறிவோமா?
பார்கின்சன் நோய்ப்பாதிப்பு ஒரு நரம்பியல் குறைபாடு ஆகும். இந்நோய் சர்வதேச அளவில் மில்லியன் கணக்கான மக்களைப் பாதித்துள்ளது. உடலின் செயல்பாடுகள் மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தவல்ல இந்தப் பார்கின்சன் பாதிப்பானது, நடுக்கம் மற்றும் விறைப்பு உணர்விற்கு அப்பாற்பட்டது ஆகும். இந்த நோய்ப்பாதிப்பானது, தனிப்பட்ட வாழ்க்கையின் செயல்திறன் முதல் உணர்ச்சி நல்வாழ்வு என ஒவ்வொரு அம்சங்களையும் பாதிக்கிறது.
பார்கின்சன் நோய்ப்பாதிப்பு தொடர்பான ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அதுகுறித்த மர்மங்கள் ஒவ்வொன்றாக விலகி வருகின்றன. பார்கின்சன் நோய்ப்பாதிப்பின் அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை முறைகள் பற்றி அறிந்து வைத்திருப்பது அவசியமாகும். இது நோயாளிகள் மற்றும் பராமரிப்பாளர்கள் என இருவரையும் வலிமை மற்றும் பின்னடைவைச் சமாளிக்க உதவுகிறது. இந்நோய்ப் பாதிப்பின் ஆரம்பக் கால அறிகுறிகளையும், சிகிச்சை முறையையும் புரிந்துகொள்வதன் மூலம், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இயலும்.
பார்கின்சன் நோய்ப்பாதிப்பானது, நரம்பியல் பாதிப்பு ஆகும். இது உடலின் இயக்கம் மற்றும் செயல்பாடுகளைப் பாதிக்கிறது. இது மூளையின் சப்ஸ்டான்சியா நிக்ரா எனப்படும் பகுதியில் டோபமைன் ஹார்மோன் சுரத்தலுக்குக் காரணமான நியூரான்களில் ஏற்படும் சிதைவுகளினால், இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது. டோபமைன் அளவு முழுமையாகக் குறையும் போது, அது உடலின் இயக்கங்களில் பெரும் அளவிலான மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இந்த மாற்றங்களே, பார்கின்சன் நோய்ப்பாதிப்பின் அடையாளங்களாக உருமாறுகின்றன.
பார்கின்சன் நோய்ப்பாதிப்பை, அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் மூலம், அறிகுறிகளைத் திறம்பட நிர்வகித்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வழிவகுக்கிறது.
பார்கின்சன் நோய்ப்பாதிப்பின் ஆரம்பக் கால அறிகுறிகள்
பார்கின்சன் நோய்ப்பாதிப்பின் ஆரம்பக் கால அறிகுறிகள் மிகவும் மென்மையானதாக இருப்பதால், அதனை எளிதில் அடையாளம் காண இயலாது. இந்த அறிகுறிகள் குறித்து முழுமையாக அறிந்திருப்பதன் மூலமே, அதன் சிகிச்சை முறையைக் கண்டறிந்து, பாதிப்பு தீவிரம் அடைவதைத் தடுக்கலாம்.
நடுக்க உணர்வு
கைவிரல்கள் அல்லது கைகளில் நடுக்க உணர்வை உணர இயலும். சில தருணங்களில், இது, கால், தாடை உள்ளிட்ட பகுதிகளிலும் உணரலாம். நீங்கள் ஏதாவது ஒரு செயல்பாட்டில் இருக்கும்போதோ அல்லது ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடங்களுக்கு நகரும்போதோ, நடுக்க உணர்வானது குறைவாக இருப்பதை உணர இயலும்.
விறைப்புத் தன்மை
பார்கின்சன் நோய்ப்பாதிப்பின் பொதுவான அறிகுறியாக, விறைப்புத்தன்மையானது விளங்கி வருகிறது. இது உடலின் இயக்கங்களில் பெரும்பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மெதுவான இயக்கங்கள் (Slowness)
இந்த நிலை, ‘bradykinesia’ என்று குறிப்பிடப்படுகிறது. இது உங்கள் செயல்பாட்டின் வேகத்தைக் குறைத்து, எளிய பணி கூட அவர்களுக்குச் சவாலானதாக மாறும். உட்கார்ந்து இருக்கும் இருக்கையில் இருந்து எழுந்திருத்தல், குளித்தல், உடைகளை மாற்றுதல் உள்ளிட்ட அன்றாட நிகழ்வுகளையும், இவர்கள் மிகவும் கஷ்டப்பட்டே மேற்கொள்ளும் சூழல் உருவாகும். கண் சிமிட்டுதல் போன்ற இயல்பான முகபாவனைகளையும் அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டே மேற்கொள்ள நேரிடும்.
இயக்கமற்ற அறிகுறிகள்
மனச்சோர்வு, பதட்டம், மலச்சிக்கல், போதிய அளவிலான உறக்கம் இல்லாத நிலை உள்ளிட்டவை இதில் அடங்கும். அடிக்கடி சிறுநீர்க் கழித்தல் உணர்வு, வாசனையை உணரும் திறன் இழப்பு, ஞாபக மறதி, அதீதச் சோர்வு உள்ளிட்டவையும் இதில் அடங்கும்.
பார்கின்சன் நோய்ப்பாதிப்பிற்கான சிகிச்சைகள்
பார்கின்சன் நோய்ப்பாதிப்பானது நரம்பியல் கடத்தல் நோய்ப்பாதிப்பு ஆகும். இதற்கு இன்னும் சரியான சிகிச்சை முறைகள் கண்டறியப்படாத நிலையில், மருந்துகள், அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சை முறைகளின் மூலமாகவே, அறிகுறிகள் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன.
மருந்துகள்
பார்கின்சன் நோய்ப்பாதிப்பிற்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகளில் முதன்மையானதாக, மருந்து முறைகள் உள்ளன. மூளையில் டோபமைனின் அளவைப் பராமரிப்பதே, இதன் நோக்கம் ஆகும்.
லெவோடோபா
கார்பிடோபா மருந்துடன், லெவோடோபா மருந்தை இணைந்து மேற்கொள்ளும் போது, பார்கின்சன் நோய்ப்பாதிப்பின் அறிகுறிகளைச் சிறந்த முறையில் நிர்வகிக்க உதவுகிறது.
டோபமைன் அகோனிஸ்டுகள்
இந்த மருந்துகள், நோய்ப்பாதிப்பின் துவக்க நிலைகளில் வழங்கப்படுகின்றன.
MAO-B தடுப்பான்கள்
இந்த மருந்துகள், சினாப்டிக் பிளவுகளில், டோபமைன் மறுபயன்பாடு மட்டுமல்லாது, அதன் கால அளவைக் கட்டுப்படுத்துகின்றன.
மேலும் வாசிக்க : டிமென்ஷியா தடுக்கவல்ல வாழ்க்கைமுறை மாற்றங்கள்
ஆழ்ந்த மூளைத் தூண்டுதல் (Deep Brain Stimulation)
பார்கின்சன் நோய்ப்பாதிப்பிற்கு உள்ளான நோயாளிக்கு, மருந்துமுறைகள் உரிய பதிலளிக்காத நிலையில், மருத்துவர், ஆழ்ந்த மூளைத் தூண்டுதல் சிகிச்சை முறையினைப் பரிந்துரைச் செய்கின்றார்.
இந்தச் சிகிச்சை முறையில், மருத்துவர் மூளையின் ஒரு பகுதியில் மின்முனைகளைப் பொருத்தி, மார்பில் இணைக்கப்பட்டு உள்ள சிறிய ஜெனரேட்டருடன் அந்த மின்முனைகளை இணைக்கின்றார். இதன்மூலம், மூளையின் பகுதிகள் பாதுகாப்பாகவும், எவ்வித இடையூறுகளும் இல்லாமல் செயல்படுகின்றன. இது பார்கின்சன் நோய்ப்பாதிப்பின் விளைவாக ஏற்படும் இயக்க அசாதாரணங்களில் இருந்து நிவாரணம் அளிக்க வழிவகுக்கும். இயக்க அசாதாரணங்களில் நடுக்கம், மந்த நிலை, விறைப்பு உள்ளிட்டவைகள் அடங்கும்.
உடலியல் சிகிச்சை
உடலின் செயல்பாடுகள் மற்றும் நெகிழ்வுத்தன்மையைப் பராமரிப்பதில், உடலியல் சிகிச்சைகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
தொழில்சார்ச் சிகிச்சைகள், நோயாளிகள் தங்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்வதற்கான திறனுக்கு ஏற்ப அவர்களுக்குள் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
மேற்குறிப்பிட்ட அறிகுறிகள், பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள், சிகிச்சை முறைகள் உள்ளிட்டவைக் குறித்த முழுமையான புரிதல்களை அறிந்து கொண்டு, பார்கின்சன் நோய்ப்பதிப்பில் இருந்து பூரண நலம் பெற்று, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…