இந்தியப் பெண்களும், வைட்டமின் D குறைபாடும்…
வைட்டமின் D குறைபாடு – அறிமுகம்
வைட்டமின் D குறைபாடு, இந்தியாவில் மிகப்பெரிய பொதுச் சுகாதாரப் பேசுபொருளாக மாறி உள்ளது. இது, குறிப்பாக, பெண்களிடையே அதிகப் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, 90 சதவீத அளவிலான இந்தியப் பெண்கள், வைட்டமின் D சத்தை, சூரிய ஒளியிடமிருந்தோ மற்றும் உணவுமுறைகளில் இருந்தோ பெறுவதில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. வைட்டமின் D சத்து எலும்புகள் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது.
வைட்டமின் D குறைபாட்டின் விளைவுகள்
நமது ரத்த சீரத்தில், 20 ng/ml அளவுக்குக் குறைவாக, வைட்டமின் D இருப்பதையே, வைட்டமின் D சத்துக்குறைபாடு என்கிறோம். இக்குறைபாடு பெண்களில் எளிதில் உடையும் எலும்புகள், வலுவற்ற தசைகள், அடிக்கடி தொற்று, நீடித்த சோர்வு, குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
அசோசெம் அமைப்பு நடத்திய ஆய்வின்படி, தலைநகர் டெல்லியில், 10 பெண்களில் 8 பேர், வைட்டமின் D சத்துக் குறைபாட்டால் அவதிப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. குறைந்த வைட்டமின் D மற்றும் அதிக சர்க்கரை, இந்தியப் பெண்களில் எலும்பு பாதிப்பு மற்றும் நீரிழிவு முன்னோடி நிலையை ஏற்படுத்துகிறது.
மாதவிடாய் முடிவடைந்தப் பெண்கள், குறைந்த கால்சியத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், இந்த வைட்டமின் D குறைபாடும் சேர்ந்து, அவர்களுக்கு எலும்புச் சிதைவுப் பாதிப்பு வரும் வாய்ப்பை அதிகப்படுத்துகின்றன. இதுமட்டுமல்லாது, அவர்களுக்கு அடிவயிற்று உடற்பருமன் பாதிப்பு ஏற்படவும் காரணமாக அமைகின்றன.
போதிய அளவு சூரிய ஒளி உடலில் படாதநிலை
இந்தியாவில், குறிப்பாக நாட்டின் வடமாநிலங்களில், பெண்கள் வெளியிடங்களுக்குச் செல்லும்போது, உட்லை முழுவதும் சேலை உள்ளிட்ட ஆடைகளால் சுற்றிக் கொள்கின்றனர். சூரிய ஒளி அவர்களின் உடலில் படுவது தடுக்கப்படுகிறது.இதனால், உடலில் வைட்டமின் D உற்பத்தி தடைப்படுகிறது.குளிர்காலங்களில், சூரிய ஒளி அதிகமாக இருந்தும், பெண்களின் ஆடையால் வைட்டமின் D உற்பத்தி தடைப்படுகிறது. இதைத் தடுக்க வழி கண்டறியப்படவில்லை.
பாரம்பரிய உணவுப்பழக்கவழக்கங்கள்
இந்தியப் பெண்கள் மேற்கொள்ளும், சில உணவுப்பழக்க வழக்கங்களும், அவர்களிடையே, வைட்டமின் D குறைபாடு ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக அமைகின்றன.
சால்மோன் மீன், முட்டை, காளான் உள்ளிட்டவைகளில் இருக்கும் வைட்டமின் D சத்துக்கூட, பெரும்பாலான இந்தியப் பெண்கள் சாப்பிடும் சைவ உணவு வகைகளில் இல்லை.
மீன் உள்ளிட்ட கடல் உணவுகள், வைட்டமின் D சத்து அதிகம் கொண்ட உணவுப் பொருளாக விளங்குகின்றன. இதன் அதிகப்படியான விலை, கடல் உணவுகளை எடுத்துக்கொள்வதில் உள்ள சமூக வரையறை, மீன் எண்ணெய் மாத்திரைகள், அதிக விலைக் கொண்டதாக இருப்பது உள்ளிட்ட காரணங்களால், இந்தியப் பெண்கள் இத்தகைய உணவுகளைத் தவிர்த்து விடுகின்றனர்.
இந்திய உணவுமுறைகளில் பெரும்பாலானோரால் முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பருப்பு வகைகள் உள்ளிட்டவைகளில், நம் உடலுக்குத் தேவையான வைட்டமின் D, போதுமான அளவில் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
பால், பால் பொருட்கள் உள்ளிட்டவைகளில் நம் உடலுக்குத் தேவையான வைட்டமின் D, போதுமான அளவில் இல்லை.
அரிசி, ரொட்டி உள்ளிட்டவைகளில், நம் உடலுக்குத் தேவையான வைட்டமின் D, போதுமான அளவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உட்புற வாழ்க்கைமுறை
கிராமப்புறப் பெண்கள் உட்பட பலர் தொழிற்சாலைகளின் உட்பகுதிகளில் அதிக நேரம் செலவிடுகின்றனர். இதன்காரணமாக, அவர்களின் உடலில் போதிய அளவிலான சூரிய ஒளி படாதநிலையில், வைட்டமின் D உற்பத்தி தடைபடுகின்றது.
நகர்ப்புற வாழ்க்கைமுறை
நகர்ப்பகுதிகளில் நிகழும் அதிகப்படியான மாசுபாடு, புகை மற்றும் புறஊதாக் கதிர்களின் அதிகப்படியான வீச்சுக் காரணமாக, பெண்கள் மட்டுமல்லாது அனைவரும் வெளியிடங்களுக்கு அதிகமாக வருவதில்லை. இதன்காரணமாக, அவர்களின் உடலில் போதிய அளவிலான சூரிய ஒளி படாதநிலையில், வைட்டமின் D உற்பத்தி தடைபடுகின்றது. நகர்ப்பகுதிகளில் பெரும்பாலானோர் இரவுப்பணி பார்ப்பதால், சர்காடியன் ரிதம் எனப்படும் உயிரியல் கடிகாரம் பாதிக்கப்பட்டு, அது மெலடோனின் சுரத்தலில் ஏற்றத்தாழ்வை நிகழ்த்தி, வைட்டமின் D செயலாக்கத்தைப் பாதித்துவிடுகிறது.
மரபியல் காரணிகள்
உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களின் பற்றாக்குறை மற்றும் கதிரியக்க அபாயங்கள் உள்ளிட்டவைகளினால், வைட்டமின் D செயல்பாடு மற்றும் அதன் வளர்சிதை மாற்றத்திற்குக் காரணமான ஜீன்களில் மாற்றம் நிகழ்கின்றன.
வைட்டமின் D அளவு
30 ng/ml மற்றும் அதற்குமேல் – சாதாரண நிலை
20 – 29 ng/ml – போதுமான அளவுதான் என்றபோதிலும், மேம்பாடு தேவை
12 – 19 ng/ml – எலும்பு நலம் மற்றும் ஆரோக்கியத்திற்கு உகந்த நிலை
12 ng/mlக்கும் குறைவு – வைட்டமின் D குறைபாடு மற்றும் வைட்டமின் D அதிகம் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
உடற்பருமன் கொண்ட பெண்கள்
உடல்பருமன் மற்றும் உடல் எடை அதிகம் கொண்ட பெண்களின் உடலில் வைட்டமின் D அளவு குறைவாகவே இருக்கும். வைட்டமின் D – கொழுப்பில் கரையும் வைட்டமின் என்பதால், உடலின் கொழுப்பில் சேகரமாகும்.
உறிஞ்சுதலில் உள்ள குறைபாடு
லாக்டோஸ் ஏற்புத்திறன் குறைவு, சேலியாக் நோய்கள், குடல் நோய்கள் உள்ளிட்ட குறைபாடுகள், உடல் வைட்டமின் D உறிஞ்சுதல் நிகழ்வில் ஏற்படும் குறைபாட்டால் நிகழ்பவைகளாக உள்ளன.
வைட்டமின் D குறைபாட்டைக் கண்டறியும் சோதனைகள்
25 – ஹைட்ராக்ஸி வைட்டமின் D ரத்த சோதனையின் மூலம், ரத்தத்தில் உள்ள வைட்டமின் Dயின் அளவைக் கண்காணிக்க முடியும். இதன்மூலம், குறைபாடு உள்ளதா அல்லது இல்லையா என்பதை எளிதாகக் கண்டறிய இயலும்.
எலும்பின் அடர்த்தியைக் காண உதவும் ஸ்கேன் சோதனையின் மூலம், எலும்பின் ஆரோக்கியத்தை மதிப்பிட முடியும். வைட்டமின் D குறைபாடு ஏற்படும்போது மட்டுமல்லாது, அவ்வப்போது, வைட்டமின் D அளவைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்பதே, பெரும்பாலான மருத்துவர்களின் பரிந்துரையாக உள்ளது.
இரத்த சோதனைக்காக, உடலின் நரம்புகளில் இருந்து ரத்த மாதிரியை எடுத்து, சோதனை மேற்கொள்ளும் போதே, ரத்தத்தில் உள்ள வைட்டமின் குறைபாட்டையும் நாம் கணடறிய முடியும்.
உடல் எடையைச் சரியான அளவில் பராமரிப்பது, தினமும் உடற்பயிற்சிகள் மேற்கொள்வது, போதிய அளவிலான சூரிய ஒளியை, உடலில் படவைப்பது உள்ளிட்ட செயல்பாடுகளின் மூலம் வைட்டமின் D குறைபாட்டைத் தவிர்க்கலாம்.
ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பு மற்றும் வைட்டமின் D குறைபாடு உடையவர்கள், மருத்துவரின் ஆலோசனையின்படி நடக்க வேண்டும். தங்களது உணவுப்பழக்கத்தை, நிபுணரின் வழிகாட்டுதலின்படி, மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் வாசிக்க : உங்களைப் பலவீனமாக்கும் உணவு – இவைகள் தானா?
வைட்டமின் D அதிகரிப்பால் ஏற்படும் நன்மைகள்
அதிகப்படியான சூரிய ஒளியை, உடலில் படவைத்து, அதன்மூலம் வைட்டமின் D அளவை, அதிகரித்துக் கொண்டால், டிமென்சியா பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறையும்.
குழந்தைகளின் உடலில் வைட்டமின் D அதிகரிக்கும்பட்சத்தில், அது அவர்களின் உடலில் கொழுப்பின் அளவைப் பெருமளவிற்குக் கட்டுப்படுத்துகிறது. குழந்தைப் பருவத்திலேயே, வைட்டமின் D அதிகமாக இருப்பவர்களுக்கு, அவர்கள் வளர்ந்தபின், முதல் வகை நீரிழிவுப் பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு குறைவு ஆகும்.
வைட்டமின் D குறைபாட்டிற்குக் காரணமான காரணிகளைத் தவிர்த்து, அதை மேம்படுத்தி, உடல்நலப் பாதிப்புகளில் இருந்து விரைவில் நிவாரணம் பெறுவோமாக….