No Gym – உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளச் சில வழிகள்
ஜிம் எனப்படும் உடற்பயிற்சிக்கூடத்திற்குச் செல்வது உங்களுக்குப் பிடிக்கவில்லையா? அல்லது ஜிம்மிற்குச் செல்லச் சோம்பேறித்தனம் படுகிறீர்களா? பணிச்சுமையால், ஜிம்மிற்குச் செல்ல முடியவில்லையா? ஜிம்மிற்குச் செல்ல முடியாததால், உடலின் கட்டுக்கோப்பு சீர்குலைந்து விடும் என்ற வருத்தம் உங்களை வாட்டுகிறதா?
இத்தகைய சூழ்நிலைகளால் அவதிப்பட்டு வருபவர்களும், தங்களது உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள முடியும். இது சாத்தியமில்லை என்கிறீர்களா? சாத்தியப்படுத்துகிறோம். அதுவும் ஜிம்மிற்குச் செல்லாமலேயே, உங்களது உடலை, நீங்கள் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முடியும்.
உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும் பயிற்சிகளை ஜிம்மிற்குச் செல்லாமலேயே, நாம் இருக்கும் இடத்தில் இருந்தே, மாற்று வழிகளில் மேற்கொள்ள முடியும்.
கீழ்க்கண்ட எளிமையான வழிமுறைகளை மேற்கொண்டால், ஜிம்மிற்குச் செல்லாமலேயே, உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளலாம்.
உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும் பயிற்சிகள்
நடைப்பயிற்சி
உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்கு, ஜிம் செல்வது மட்டுமே தீர்வு ஆகாது. எளிமையான உடற்பயிற்சியான நடைப்பயிற்சியும், உங்களைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில், முக்கியப்பங்கு வகிக்கின்றது. நடைப்பயிற்சியின் பலன் உடனடியாக தெரியாவிட்டாலும், தொடர்ந்து செய்தால் நிச்சயம் பலனளிக்கும்.தினசரி குறைந்தது 10 ஆயிரம் அடிகள் நடந்தால், உடல் கட்டுக்கோப்பாகத் திகழத் துவங்கும்.
50 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள், வாரத்திற்கு 3 மணிநேரம் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்பட்சத்தில், அவர்களின் உடல் எடை, உடல் நிறைக் குறியீடு, இடுப்பு சுற்றளவு உள்ளிட்டவை, கணிசமாகக் குறையும்.
இன்னும் என்ன தயக்கம், இப்போதே நடைப்பயிற்சியைத் துவங்குங்க, உடல் ஆரோக்கியத்தைத் தட்டி எழுப்புங்க…
நடனப்பயிற்சி
நடனம் வெறும் கலை மட்டுமல்ல, உடலை கட்டுக்கோப்பாக வைக்கும் எளிய, அற்புதமான வழியும் ஆகும்.கால் அசைத்தல் நடவடிக்கை என்பது, உடல் எடையைக் குறைப்பதற்கு மட்டுமல்லாது, உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது. நீங்கள் 50 நிமிடங்கள் நடனம் ஆடினால், 500 கலோரிகளை எரிக்க முடியும் என்பதை அறிவீர்களா? நடனம் ஆடுவது, உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு நின்றுவிடாது, மன அழுத்தத்தைப் போக்கும் சிறந்த காரணியாகவும் விளங்குகிறது.
படிக்கட்டுகளை உபயோகியுங்கள்
மாடிக்குச் செல்ல, லிப்ட்களுக்குப் பதிலாக, படிக்கட்டுகளை உபயோகியுங்கள். இது நீங்கள் வழக்கமாக நடக்கும் அடிகளை அதிகரிக்கச் சிறந்த வழியாக இருப்பதோடு, உடலையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது. மாடிப்படிகளில் ஏறுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடற்பருமன் மற்றும் நீரிழிவு நோய் அபாயத்தைக் குறைக்கிறது.இது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாது, கலோரிகள் எரிப்பிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது.
மேலும் வாசிக்க : இந்தியப் பெண்களும், வைட்டமின் D குறைபாடும்…
விளையாட்டுகள் அவசியம்
உங்களுக்கு இருக்கும் வேலைப்பளுவின் காரணமாக, உடற்பயிற்சி செய்வதற்கு என்று நேரம் இருக்காது. நீங்கள் ஓய்வாக இருக்கும் நேரத்தில் உங்களுக்குப் பிடித்த விளையாட்டை விளையாடுங்கள். நீச்சல், டென்னிஸ், ஸ்குவாஷ், பாட்மிடன் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள், உங்கள் உடலை வலுவாக இருக்க உதவும். இந்த விளையாட்டுகளை, தொடர்ந்து விளையாடி வந்தால், உடலின் கொழுப்பு அளவு மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவும்.
ஸ்கிப்பிங் செய்தல்
ஸ்கிப்பிங் பயிற்சி, நமது உடல் முழுமைக்குமான பயிற்சி ஆகும். இந்தப் பயிற்சியை, தினசரி 5 முதம் 10 நிமிடங்கள் மட்டும் செய்து வந்தால் போதும். உடல் கட்டுக்கோப்பாக மாறுவதோடு மட்டுமல்லாது, ஆரோக்கியமும் மேம்படும்.
வீட்டிலேயே சில உடற்பயிற்சிகள்
கொரோனா பெருந்தொற்று காலத்தில், மக்கள் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யக் கற்றுக்கொண்டனர்.இதற்குக் கொரோனா பெருந்தொற்றிற்குத் தான் நாம் நன்றிச் சொல்ல வேண்டும். ஜிம்மிற்குச் சென்றால், பல்வேறு விதமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, உடலை வலுவாக்கலாம் என்பது உண்மைதான் என்றபோதிலும், வீட்டிலேயே, சில எளிய உடற்பயிற்சிகளை மேற்கொண்டும், உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இயலும் என்பதே உண்மை.
தற்காப்புக் கலையைக் கற்றுக் கொள்ளுங்கள்
தற்காப்புக்கலை, உங்களை ஆபத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வதோடு மட்டுமல்லாது, உடலை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. கிக் பாக்ஸிங், கலவையான தற்காப்புக்கலை, களரி உள்ளிட்ட கலைகள் உள்ளன. இவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கற்று, உங்களது உடலை வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.
யோகாப் பயிற்சி
பழங்காலத்தில், ஆரோக்கியமான உடல் மற்றும் அமைதியான மனம் பெற வேண்டி, யோகா மேற்கொள்ளப்பட்டது. யோகாப் பயிற்சியை, நாம் வீட்டிலேயே மேற்கொள்ள முடியும். இதற்கு ஒரு தரமான தரைவிரிப்பு மட்டும் போதுமானது. யோகா தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் மில்லியன் கணக்கில் கொட்டிக்கிடக்கின்றன். அதில் உங்களுக்குத் தேவையானதைப் பார்த்து, அதில் பயிற்சி மேற்கொள்ளலாம்.
உடல் எடையை வைத்தே உடற்பயிற்சி
இத்தகைய உடற்பயிற்சியானது மிகவும் எளிமையானதொரு பயிற்சி ஆகும். இதற்கென்றுத் தனியாக, எந்தவொரு உபகரணங்களும் தேவையில்லை. ஸ்குவாட், புஷ் அப்கள் உள்ளிட்ட பயிற்சிகளைச் சரியான முறையில் மேற்கொண்டு, உடலை வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
ஜிம்மிற்குச் செல்லாமலேயே, உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கான இத்தகையப் பயிற்சிகளை மேற்கொண்டு, உடல்நல ஆரோக்கியம் காப்போமாக….