குளிர்காலத்தில் முழங்கால் வலி எதனால் ஏற்படுகிறது?
கால்களில் வலி உணர்வு, குறிப்பாக ஒரு நபருக்கு முழங்கால் பகுதியில் ஏற்படும் காயங்கள் மூலமான வலியால் அவதிப்படுபவர்கள், குளிர்காலத்தில், வலியின் தீவிரத்தை இன்னும் கூடுதலாக உணர்வதாக ஆராய்ச்சிகளின் முடிவுகளில் தெரியவந்து உள்ளது. இது அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.
குளிர்கால நிலையில், முழங்கால் வலி ஏற்படுவதற்கான காரணங்கள்
குளிர்காலத்தில் குளிர்ந்த காலநிலை நிலவுவதால், இடுப்பு, முழங்கால்கள், கணுக்கால் உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் வலி உணர்வு ஏற்படுகிறது. இந்தகாலத்தில், நீங்கள் ஓட்ட பயிற்சி மேற்கொள்ளும்பட்சத்தில், மூட்டுப்பகுதிகளில் ஏற்படும் அதிக எடையின் காரணமாக, அங்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதன்காரணமாக, முழங்கால் மற்றும் மூட்டு வலிகள் ஏற்படுகின்றன.
பாரோமெட்ரிக் அழுத்தம்
பாரோமெட்ரிக் அழுத்தம் என்பது வளிமண்டல அழுத்தம் என்றும் குறிப்பிடப்படுகிறது. காற்றின் அழுத்தத்திற்கும், முழங்கால் வலி உணர்வின் அறிகுறிகளுக்கும் இடையேயான தொடர்பை, சில ஆய்வுகள் வெளிக்காட்டி உள்ளன. வெப்பம் அதிகம் உள்ள காலநிலையில் பாரோமெட்ரிக் அழுத்தம் அதிகமாகவும், குளிர்காலத்தில், இந்த அழுத்தமானது குறைவான நிலையிலும் உள்ளது. குளிர்காலத்தில் பாரோமெட்ரிக் அழுத்தம் சரிவடையும் நிலையில், உடலில் உள்ள திசுக்கள் விரிவடைகின்றன. தசைநாண்கள் தசைகள், மூட்டுகள் உள்ளிட்ட பகுதிகளில் வீக்கங்கள் ஏற்படுகின்றன. இந்த வீக்க உணர்வானது, திசுக்களைச் சுற்றி உள்ள நரம்புகளை அழுத்தி வலியை உண்டாக்குகின்றன. இதன்காரணமாகவே, மூட்டு வலியானது ஏற்படுகிறது.
பாரோமெட்ரிக் அழுத்தம், பருவநிலை மாற்றங்களுடன் தொடர்புடையது ஆகும். இந்தப் பருவநிலை மாற்றங்கள், உங்கள் முழங்கால் வலியை மேலும் மோசமாக்குகின்றன. பாரோமெட்ரிக அழுத்த மாற்றங்கள், குளிர்காலத்தில் முழங்கால் வலியின் தீவிரத்தை அதிகமாக்கும் காரணிகளில் முதன்மையானதாக உள்ளது.
மூட்டுத் திரவத்தில் மாற்றங்கள்
உங்கள் மூட்டுப்பகுதிகளுக்கு இடையே ஒரு திரவம் காணப்படுகிறது. மூட்டுப்பகுதிகளுக்குக் குஷன் போன்று செயல்படும் இந்தத் திரவமானது மூட்டுத் திரவம் அல்லது சினோவியல் திரவம் என்று அழைக்கப்படுகிறது. மூட்டுப் பகுதிகளை அதிர்ச்சிகள் மற்றும் தாக்கங்களில் இருந்து பாதுகாப்பதே, இந்தச் சினோவியல் திரவத்தின் முக்கியமான பணி ஆகும். இந்தத் திரவம், முட்டையின் வெள்ளைக்கரு நிலைத்தன்மையில் இருக்கும். குளிர்காலத்தில், வெப்பநிலைக் குறைந்து காணப்படும் சூழலில் திரவம், தடினமான நிலைக்கு மாறும். திரவத்தின் இந்தக் கெட்டித்தன்மையானது, மூட்டின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. இதன்காரணமாக, முழங்கால் மூட்டுகள் கடினத்தன்மையை அடைகின்றது. இது மூட்டுவலி ஏற்பட வழிவகுக்கின்றன.
உடல் செயலற்ற தன்மை அல்லது சோம்பல் நிலை
குளிர்காலத்தில் பெரும்பாலான மக்கள் சோம்பலும் செயலின்மையும் நிறைந்த நிலையில் இருப்பர். நீங்கள் ஒரே இடத்தில் எவ்விதச் செயல்பாடுகள் இல்லாமல், சோம்பல் உணர்வுடன் இருக்கும்பட்சத்தில், அது முழங்கால் மூட்டு வலியை வேண்டா விருந்தாளியை, வீட்டிற்கு வரவைப்பதற்கு ஒப்பான நிகழ்வு ஆகும்.
அதிக ஈரப்பதம்
அதிக ஈரப்பதத்துடன் கூடிய குளிர்ந்த காலநிலை என்பது, மூட்டுவலி ஏற்படுவதற்கான உகந்த சூழல் ஆகும். இந்தக் காரணிகள் எலும்பு மற்றும் குருத்தெலும்புகளில் உள்ள செல் கட்டமைப்புகளை வெகுவாகப் பாதிக்கின்றன. இதன்காரணமாக, அப்பகுதியில் சுருக்கம் மற்றும் விரிவு மாறி மாறி ஏற்படுகின்றன. இதனால் அப்பகுதியில் விரும்பத்தகாத அழுத்தம் உண்டாகிறது.
SAD (பருவகாலப் பாதிப்புக் குறைபாடு)
பருவநிலைகளில் ஏற்படும் மாற்றங்கள், மக்களின் மனநிலையை மாற்றுவதோடு மட்டுமல்லாது, மனச்சோர்வுக்கும் காரணமாக அமைகிறது. எதிர்மறை மனநிலைச் சோகத்தையும் மனச்சோர்வையும் தோற்றுவிக்கும். எதிர்மறை மனநிலைகள், வலியின் தீவிரத்தையும், அதன் அளவையும் மாற்றி அமைக்கின்றன.
தசைகளில் காணப்படும் இறுக்கம்
குளிர்காலத்தில் நிலவும் குளிர்ந்த வெப்பநிலையானது, உங்கள் உடலைச் சூடாக வைத்துக்கொள்ள உடலின் சில உறுப்புகளுக்கு, ரத்த ஓட்டத்தின் அளவை மாற்றி அமைக்கிறது. உதாரணமாக, முழங்கால் பகுதிக்குச் சாதாரண அளவிலேயே ரத்த ஓட்டம் அனுமதிக்கப்பட்டு, இதயம், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகளுக்கு அதிகளவிலான ரத்த ஓட்டம் மேற்கொள்ளப்படுகிறது. மூட்டுப்பகுதிகளில் ரத்த ஓட்டம் குறைவதால், அதிக வலி உணர்வை ஏற்படுத்துகின்றன.
குளிர்க் காலநிலையானது, தசைகள் எளிதில் இறுக்கம் அடைகின்றன. இது குறைந்த நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்துவதால், மூட்டுப்பகுதிகளில் புண்கள் அல்லது காயங்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
வைட்டமின் D
உங்கள் உடலைச் சூரிய ஒளிக்கு உள்ளாக்கும்போது, வைட்டமின் D தயாரிக்கப்படுகிறது. இந்த வைட்டமின் D ஊட்டச்சத்தானது, எலும்பு மற்றும் தசைகளின் ஆரோக்கியத்தில் முக்கியப்பங்கு வகிக்கிறது. வைட்டமின் D குறைபாடு உள்ளவர்கள், முழங்கால் வலியால் அவதிப்பட்டு இருப்பின், குளிர்காலத்தின் வலியின் அளவு மேலும் தீவிரம் அடையும்.
குளிர்காலத்தில் முழங்கால் வலிப்பாதிப்பைத் தவிர்ப்பது எப்படி?
உடலை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்ளவும்
உடலுக்கு இதம் அளிக்கவல்ல ஆடைகளை அணிய வேண்டும். போர்வைகளைப் பயன்படுத்துதல், வீட்டை எப்போதும் சூடான வெப்பநிலையிலேயே பராமரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம், குளிர்காலத்தில் ஏற்படும் முழங்கால் வலியில் இருந்து தப்பித்துக் கொள்ள இயலும்.
எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்
குளிர்காலத்தில் உடல் நீண்டநேரம் செயலற்ற நிலையில் இருப்பது இயல்பு தான் என்றபோதிலும், முழங்கால் வலியைத் தவிர்க்க, குறைந்தபட்ச அளவிலாவது உடலைச் சுறுசுறுப்பாக வைத்திடல் வேண்டும். யோகா, பைலேட்ஸ் உள்ளிட்ட உடல் நீட்சிப் பயிற்சிகள், இதற்குப் பேருதவி புரிகின்றன.
மேலும் வாசிக்க : உடற்பயிற்சியின் மூலம் கீல்வாதத்தை நிர்வகிக்க இயலுமா?
மனநிலையை மேம்படுத்த வேண்டும்
எதிர்மறையான மனநிலை மாற்றம், வலி சகிப்புத்தன்மையை அதிகம் பாதிக்கிறது. இது ஒரு நபரின் உளவியல் ரீதியிலான பின்னடைவு என்பதால், வலியைத் தாங்கும் திறன் முற்றிலும் பாதிப்படைகிறது. மனநிலையை நேர்மறையில் ஆரோக்கியமானதாக மாற்ற முயற்சிக்கையில் அது மூட்டுவலி பாதிப்பிற்குச் சிறந்த நிவாரணமாக அமைகிறது. மனநிலையை மேம்படுத்த ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் போதிய அளவிலான நல்ல உறக்கம் மிகவும் அவசியம் ஆகும்.
மருத்துவர்களின் பரிந்துரைகள்
சரியான மருத்துவ நிபுணரைக் கலந்தாலோசித்து, மூட்டுவலி குறித்து அவரிடம் முழுமையாகத் தெரிவிக்கவும். மூட்டு வலியைக் குறைக்கும் பொருட்டு, அவர்ச் சில மருந்து வகைகளைப் பரிந்துரைச் செய்வார். அவர்ப் பரிந்துரைத்த மருந்துகளைச் சரியான அளவில் எடுத்துக் கொள்வது நன்மைபயக்கும்.
வீக்கத்தைக் கட்டுப்படுத்தவும்
முழங்கால் பகுதிகளில் காயங்கள் ஏற்படுவதற்கான முதன்மையான அறிகுறி வீக்கமே ஆகும். இதுதான் மூட்டு வலியைத் தூண்டுகிறது.
போதிய அளவிலான உறக்கம்
போதிய அளவிலான உறக்கம் இல்லாத நிலை, வலி உணர்வை மேலும் தீவிரமாக்கிவிடும் என்பதால், தினசரி இரவு 7 முதல் 8 மணிநேர உறக்கம் உறங்குவது அவசியம் ஆகும்.
மேற்பட்ட வழிமுறைகளைக் கவனமாகப் பின்பற்றி, குளிர்காலத்தில் ஏற்படும் முழங்கால் வலி குறித்த பாதிப்பில் இருந்து முழுமையான நிவாரணம் பெற்று, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக..