மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எப்படி?
“மூளை என்பது உலகை நகர்த்தக்கூடிய தசை.”
– ஸ்டீபன் கிங்
மனித மூளை என்பது உடலின் மிகவும் முக்கியமான பகுதியாகும். இது அனைத்துச் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தும் மையமாக உள்ளது . இது நரம்புகளின் உதவியுடன் உடலின் அனைத்து உறுப்புகள் மற்றும் அமைப்புகளுடன் இணைக்கிறது. இது நரம்பு மண்டலத்தைக் கட்டுப்படுத்துகிறது. மூளை எண்ணங்கள், பகுத்தறிவு, தர்க்கரீதியான புரிதல், படைப்பாற்றல், நினைவகம் மற்றும் உணர்ச்சிகளின் மையமாக உள்ளது. உயிரியல் பரிணாம வளர்ச்சியில், இது மிகவும் சிக்கலான மற்றும் மிகவும் பரிணாம வளர்ச்சியடைந்த உறுப்பு ஆகும். நீண்ட, ஆரோக்கியமான மற்றும் வளமான வாழ்க்கையை வாழ, மூளையின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பது மிகவும் இன்றியமையாதது ஆகும்.
மூளை ஆரோக்கியம்
ஆரோக்கியம் என்பது நோய்நொடிகள் இல்லாமல் இருக்கும் நிலை ஆகும். நரம்பியல் தொடர்பான நோய்கள் மற்றும் பாதிப்புகளுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்கிறோம். அதேபோல் மூளை ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மூளை ஆரோக்கியத்திற்கு என்று, சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வரையறை இல்லை என்றபோதிலும், உடலின் செயல்பாடுகளை ஒருங்கிணைந்த முறையில் கற்றுத் தேறவும், அதனை நினைவில் கொள்ளவும், பல்வேறு முன்னணி நிறுவனங்கள், கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றன.
மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, பல்வேறு வகையான கூறுகள் உதவுகின்றன. இந்தக் கூறுகள், ஒன்றிணைந்து சிறந்த அளவிலான அறிவாற்றல் கட்டமைப்பை உருவாக்க, மிகவும் நெருக்கமாக இணைக்கப்பட்டு உள்ளன. வளமான நல்வாழ்க்கை, போதிய அளவிலான உறக்கம், நல்ல சிந்தனை, வழக்கமான தொடர்புகள் உள்ளிட்டவை இந்தக் கூறுகளில் அடங்கும். உலகச் சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, மூளை ஆரோக்கியம் என்பது சமூகம், உணர்ச்சி, அறிவாற்றல், உணர்வு, நடத்தை உள்ளிட்ட செயல்பாடுகளை உள்ளடக்கிய அனைத்து நிலைகளிலும் சிறப்பாகச் செயல்படும் மூளையின் நிலை என்று வரையறுக்கப்படுகிறது.
மனித மூளை, உடலின் அனைத்துச் செயல்பாடுகளுக்கும், தலைமை ஒருங்கிணைப்பாளராக விளங்குகிறது.
மூளையின் செயல்பாடுகள்
- உணர்ச்சி, அறிவாற்றல், மனதின் செயல்பாடுகளைப் பராமரித்தல்
- புலன் உறுப்புகளின் சமிக்ஞைகள் மற்றும் செய்திகளை விளக்குதல். இது உடலின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அடிப்படை ஆகும்.
- நடத்தை மற்றும் சமூக அறிவைப் பராமரித்தல் என மூன்று நிலைகளாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள்
வயது அதிகரிக்கும்போது, மூளை மற்றும் நரம்பியல் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இந்தப் பாதிப்புகள், மூளையின் ஆரோக்கியத்தில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளன. இந்தப் பாதிப்புகளானது, மூளையின் முக்கிய செயல்பாடுகளைச் சீர்குலைப்பது மட்டுமல்லாது, அந்தக் குறிப்பிட்ட நபரின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மிகவும் முக்கியம் ஆகும்.
மூளையின் ஆரோக்கியத்தை, கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி, மேம்படுத்திக் கொள்ள இயலும்.
வழக்கமான உடற்பயிற்சிகள்
உடற்பயிற்சிகளைத் தவறாது மேற்கொள்வதால், விளையும் உடல் ஆரோக்கிய நன்மைகளை, நாம் அனைவரும் அறிவோம். உடல்ரீதியாகச் சுறுசுறுப்பாக இருப்பவர்களுக்கு, நரம்பியல் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் குறைவாகவே இருப்பதாக, ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. உடற்பயிற்சிகளைத் தினசரி தவறாமல் மேற்கொள்வதன் மூலம், மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் கணிசமாக அதிகரிக்கிறது. இதன்மூலம், உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும், ஆக்சிஜன் மற்றும் பிற ஊட்டச்சத்துகள் சரியான அளவில் சென்றடைகின்றன. இந்தச் செயல்முறையானது, தங்குதடையின்றி, தொடர்ந்து சீராக நடைபெறுவதன் மூலம், வயது மூப்பு நிகழ்வானது தாமதப்படுத்தப்படுகிறது. நாள்தோறும் குறைந்தது 30 முதல் 60 நிமிடங்கள், உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது.
நல்ல உறக்கம்
போதிய அளவிலான உறக்கத்தை மேற்கொள்வதன் மூலம், மூளையும், உடலும், அன்றைய நாளில் ஏற்பட்ட அனைத்துச் சோர்வுகளில் இருந்து மீள்கிறது. சிறந்த உறக்கமானது, ஞாபகச் சக்தியை மேம்படுத்தவும், உடலில் தேவையில்லாமல் தேங்கி உள்ள அசாதாரண புரதக் குவிப்பை அழைப்பதிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது. இதன்மூலம், ஒட்டுமொத்த மூளை ஆரோக்கியமானது மேம்படுகிறது. தினமும் இரவில் குறைந்தது 7 முதல் 9 மணிநேர உறக்கம் என்பது அவசியமானதாகும்.
மேலும் வாசிக்க : மன ஆரோக்கியத்தில் உணவுமுறையின் தாக்கம்
ஆரோக்கியமான உணவுமுறை
ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுமுறையானது, மூளை ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாக உள்ளது. நாம் சாப்பிடும் உணவில் புரதங்கள், கார்போஹைட்ரேட், கொழுப்புகள், வைட்டமின்கள், நார்ச்சத்துகள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் சம அளவில் இருக்க வேண்டும். பச்சை இலைக் காய்கறிகள், முழுத் தானியங்கள், மீன், ஆரோக்கியமான கொழுப்புகள், புரதங்கள், நம் தினசரி உணவில் தவறாது இடம்பெற வேண்டும். சிவப்பு இறைச்சி, அதிகப்படியான உப்பு உள்ளிட்டவற்றைக் கூடுமானவரைத் தவிர்ப்பது நல்லது. புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கத்தில் இருந்து விலகி இருப்பது நல்லது. அதிகப்படியான மது உட்கொள்ளல், டிமென்ஷியா பாதிப்பு ஏற்பட வழிவகுத்துவிடும் என்பதால், மதுவகைகளின் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
ஆரோக்கியமான உணவுமுறையானது, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகிறது. இது உடலின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள செல்களுக்கும் தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கி, அது சீராகச் செயல்பட வழிவகுக்கிறது. கரோனரி தமனி நோய்ப்பாதிப்புகள், நீரிழிவு போன்ற வளர்சிதை மாற்ற பாதிப்புகள், அல்சைமர்ப் போன்ற நரம்பியல் கடத்தி பாதிப்புகள் உள்ளிட்டவைகளிடமிருந்து நம்மைக் காக்கிறது. ஆரோக்கியமான உடலிலேயே, ஆரோக்கியமான மனம் வசிக்கும் என்பதை நாம் அனைவரும் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவுமுறையானது, ஆரோக்கியமான மனம் மற்றும் ஆரோக்கியமான உடலைச் செவ்வனே பராமரிக்க உதவுகிறது.
வழக்கமான மனச் செயல்பாடுகள்
நமது மூளை, உடலின் தசைகளை ஒத்தது ஆகும். இது அதன் வடிவத்தை எப்போதும் காக்க, நாம் தவறாமல் பயிற்சிசெய்து வருவது நல்லது. மூளையின் வடிவத்தை மீட்டெடுக்கும் பயிற்சிகளாகப் புதிரை விடுவித்தல், சுடோகு விளையாட்டு உள்ளிட்டவைகள் உள்ளன. புதிய மொழியைக் கற்றுக் கொள்வதன் மூலம், மூளையைச் சுறுசுறுப்பாக இயங்க வைக்க முடியும்.
சமூக நிகழ்வுகளில் ஈடுபடுதல்
மனிதர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு சமூகம் ஆகும். நாம் நல்ல மன ஆரோக்கியத்தைப் பேணிக் காக்க, ஒருவருக்கொருவர் வழக்கமான தொடர்புகளை மேற்கொள்ள வேண்டும். மக்கள் தங்கள் நண்பர்கள், குடும்பத்தினர், உறவினர்கள், பிரியமானவர்கள் உள்ளிட்டவர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்புகளை, தொடர்ந்து உருவாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். இதன்மூலம், அவர்கள் தனிமையில் இருக்கும் நிகழ்வானது தவிர்க்கப்படுகிறது. தனிமை உணர்வை விலக்கி வைப்பதன் மூலம், கவலை, மனச்சோர்வு, மனநலம் சார்ந்த பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
இரத்தநாள ஆரோக்கியம்
நமது உடலில் உள்ள இதயம், அனைத்து உறுப்புகளுக்கும், ரத்தத்தைப் பம்ப் செய்து அனுப்புகிறது. மூளை ஆரோக்கியம் மேம்பட, மூளைக்கு ரத்தம் தங்குதடையின்றிச் செல்லும் வண்ணம், ஆரோக்கியமான ரத்த நாளங்கள் இன்றியமையாததாகிறது. இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உள்ளிட்ட அளவீடுகளைச் சிறிய கால இடைவெளிகளில் கண்காணித்து வருவது நல்லது. பக்கவாத பாதிப்பிற்கும், முதுமையின் காரணமாக ஏற்படும் மறதிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சுருங்கச் சொல்வதென்றால், மூளை ஆரோக்கியம் மேம்பட, ஆரோக்கியமான ரத்த நாளங்கள் மிகவும் முக்கியம் ஆகும்.
மூளையை, காயங்களில் இருந்து பாதுகாத்தல்
சைக்கிள் ஓட்டுதல், சாகசங்களில் ஈடுபடுதல், ஸ்கேட்டிங் செய்தல் உள்ளிட்ட நிகழ்வுகளின் போது, தலைக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாவண்ணம், பாதுகாப்பு கவசங்களை அணிவது சாலச் சிறந்தது ஆகும். நமது உடலில் தலை என்பது மிகவும் முக்கியமான பகுதி ஆகும். தலையில் ஏற்படும் காயங்கள் எத்தகைய அளவினதாக இருந்தாலும், அவை மன ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்பதால், தலைப்பகுதியில் காயங்கள் ஏற்படுவதற்கான சூழலைக், கூடுமானவரைத் தவிர்ப்பது நல்லது.
மேற்குறிப்பிட்ட வழிமுறைகளைக் கவனமாகக் கையாண்டு, மூளைப்பகுதிக்கு ஏற்படும் பேராபத்துகளில் இருந்து காத்து, மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவோமாக…