செயற்கைக் கருத்தரிப்பு முறையில் PGT சோதனையின் பங்கு
நீங்களும், உங்களது பார்ட்னரும் செயற்கைக் கருத்தரிப்பு முறையில், குழந்தையைப் பெற்றுக் கொள்ளத் திட்டமிட்டுள்ளீர்களா? ஆம் எனில், நீங்கள் முன்மாற்று மரபணுச் சோதனை (Preimplantation Genetic Testing ) பற்றி அறிந்திருப்பது அவசியம் ஆகும். செயற்கைக் கருத்தரிப்பு முறையில் பயன்படுத்தப்படும் இந்த மேம்பட்ட சோதனையானது, மரபணுக் குறைபாடுகளுக்கு உட்பட்ட கருக்களை, அடையாளம் காண உதவுகிறது. அடிக்கடி கருச்சிதைவுகளுக்கு உள்ளாகும் தம்பதியினர் மற்றும் பரம்பரைக் குறைபாடுகளைக் கொண்டவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் இந்தச் சோதனை அமைந்துள்ளது.
முன்மாற்று மரபணுச் சோதனை (Preimplantation Genetic Testing ) என்றால் என்ன?
முன்மாற்று மரபணுச் சோதனை (Preimplantation Genetic Testing) என்பது கருப்பையில் செலுத்துவதற்கு முன் கருவின் மரபணுக் குறைபாடுகளை கண்டறியும் செயல்முறையாகும்.இது கருவில் இருந்து செல்களைப் பிரித்தெடுத்து, அதில் ஏதாவது மரபணுக் குறைபாடுகள் உள்ளனவா என்பதைக் கண்டறிகின்றது. இந்த முறையில், குறைபாடுகள் முன்கூட்டியே கண்டறியப்படுவதால், ஆரோக்கியமான கருக்கள் மட்டுமே, முன்மாற்று நிகழ்விற்கு உட்படுத்தப்படுகின்றன. இதன்மூலம், மரபணுக் குறைபாடுகள், குழந்தைகளுக்குப் பரவாமல் தடுக்கப்படுகின்றன.
PGT சோதனை வழிமுறைகள்
செயற்கைக் கருத்தரிப்பு முறையானது, PGT சோதனையில் இருந்து துவங்குகிறது.
1. கருப்பையைத் தூண்டுதல் மற்றும் முட்டைகளை மீட்டெடுத்தல்
பெண்ணின் கருப்பையில், பல்லாயிரம் அளவிலான முட்டைகள் உற்பத்தி செய்யத் தூண்டப்படுகின்றன. இந்த முட்டைகள், அறுவைச் சிகிச்சையின் மூலம் மீட்டெடுக்கப்படுகின்றன.
2. கருவுறுதல்
விந்து, அய்வகத்தில் முட்டைகள் உடன் இணைந்து கருவுற்றுக் கருக்களை உருவாக்குகின்றன.
3. கரு வளர்ச்சி
ஆய்வகத்தில் கருக்கள், பிளாஸ்டோசிஸ்ட் நிலையை எட்டும் வரை வளர்க்கப்படுகின்றன.
4. கரு திசுப்பரிசோதனை
ஒவ்வொரு கருவில் இருந்தும், குறைந்த அளவிலான செல்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. கருவின் வளர்ச்சிக்குத் தீங்கு விளைவிக்காத வண்ணம், கருத் திசுப்பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
5. மரபணுச் சோதனை
ஆய்வகத்தில், பிரித்தெடுக்கப்பட்ட செல்களில், மரபணுச் சோதனை நிகழ்த்தப்படுகிறது. இதன்மூலம், அந்தச் செல்களில் உள்ள மரபணுக் குறைபாடுகள் கண்டறியப்படுகின்றன.
6. கரு தேர்ந்தெடுக்கப்படுதல்
மரபணுச் சோதனையின் முடிவுகளின் அடிப்படையில், மரபணுக் குறைபாடுகள் இல்லாத கருக்கள் மட்டுமே, உள்மாற்று நிகழ்வுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
7. கரு பரிமாற்றப்படுதல்
தேர்ந்தெடுக்கப்பட்ட கருவானது, கருப்பைக்கு மாற்றப்படுகின்றது. அது அங்கு கர்ப்பமாக உருமாறுகிறது.
செயற்கைக் கருத்தரிப்பு முறையில், PGT சோதனை மேற்கொள்ளப்படும் காலம், மிகவும் முக்கியமானது ஆகும். கருத் திசுப்பரிசோதனை மற்றும் கரு பரிமாற்றப்படுதல் நிகழ்வுகளுக்கு இடையே மரபணுச் சோதனை நிகழ்கிறது. இது செயற்கைக் கருத்தரிப்புச் சுழற்சியை, எவ்விதத் தடையுமின்றி ஒருங்கிணைக்க உதவுகிறது.
PGT சோதனையின் வகைகள்
மரபணுச் சிக்கல்களைக் கண்டறியும் PGT சோதனை நிகழ்வை, பல்வேறு வகைகளாகப் பிரிக்கலாம். PGT – A, PGT – M மற்றும் PGT – SR வகைகள், இவைகளில் முதன்மையானது ஆகும்.
அன்யூப்ளாய்டிகளுக்கான PGT சோதனை (PGT – A)
கருக்களின் குரோமோசோம்களில் எண்ணிக்கையில் அசாதாரண மாற்றங்கள் நிகழும் நிலையையே, அன்யூப்ளாய்டி நிலை என்கிறோம். இத்தகைய அன்யூப்ளாய்டி கருக்களைக் கண்டறிய, PGT – A சோதனை உதவுகிறது. இந்த அன்யூப்ளாய்டி நிலையானது, டவுண் குறைபாடு, டர்னர்க் குறைபாடு மற்றும் எட்வர்ட்ஸ் குறைபாடு உள்ளிட்டவைகளுக்குக் காரணமாக அமைகிறது. PGT – A சோதனையின் மூலம், அன்யூப்ளாய்டி கருக்கள் தவிர்க்கப்பட்டு, சரியான குரோமோசோம்கள் எண்ணிக்கையிலான கருக்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இதன்மூலம், கருத்தரிப்பு நிகழ்வு வெற்றிகரமாக அமைவதுடன், கருச்சிதைவு அபாயமும் தடுக்கப்படுகிறது.
ஒற்றை ஜீன் குறைபாட்டைக் கண்டறிய உதவும் PGT – M சோதனை
கருக்களில் ஒற்றை ஜீன்களில் நிகழும் குறைபாட்டைக் கண்டறிய, PGT – M சோதனைப் பயன்படுகிறது. ஒற்றை ஜீன்களில் நிகழும் சடுதி அல்லது திடீர் மாற்றங்களால், சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ், சிக்கிள் செல் அனீமியா, ஹண்டிங்டன் நோய் உள்ளிட்ட மரபியல் குறைபாடுகள் ஏற்படுகின்றன. PGT – M சோதனை, மரபணுக் குறைபாடுள்ள கருக்களைக் கண்டறிய உதவுகிறது.
கட்டமைப்பு மறுசீரமைப்புகளைக் கண்டறியும் PGT – SR சோதனை
குரோமோசோம்களில் நிகழும் இடமாற்றங்கள், தலைகீழ் மாற்றங்கள் மற்றும் நீக்குதல் நிகழ்வுகளால் ஏற்படும் கட்டமைப்பு மறுசீரமைப்புகளை அடையாளம் காண, PGT – SR சோதனை உதவுகிறது. இம்மறுசீரமைப்புகள் குரோமோசோம் சமநிலையை பாதித்து, கருச்சிதைவு மற்றும் பிறவிக் குறைபாடுகளுக்கு காரணமாகின்றன.நிலையான குரோமோசோம் கட்டமைப்பு கொண்ட கருக்களைத் தேர்ந்தெடுக்க, PGT – SR சோதனை உதவுவதன் மூலம், ஆரோக்கியமான கர்ப்ப நிகழ்வு சாத்தியமாகிறது.
PGT சோதனை ஏன் தேவை?
PGT சோதனை, தம்பதிகளுக்குப் பல்வேறு விதங்களில் அவசியமானதாகின்றது.
1. மரபணுக் குறைபாடுகளின் அபாயத்தைக் குறைக்கிறது
சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ், டவுண் குறைபாடு மற்றும் BRCA திடீர் மாற்றங்கள் உள்ளிட்ட மரபணுக் குறைபாடுகளைக் கண்டறிய, PGT சோதனை உதவுகிறது. இது பெற்றோர்களிடமிருந்து, குழந்தைகளுக்கு, மரபணுக் குறைபாடுகள் கடத்தப்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
2. கருத்தரிப்பு வெற்றி வாய்ப்பை அதிகரிக்கிறது
ஆரோக்கியமான கருக்கள், கருப்பையில் செலுத்தப்பட்டால் மட்டுமே, கருத்தரிப்பு நிகழ்வு வெற்றிகரமாக நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
3. ஆரோக்கியமான எதிர்காலத்திற்குத் திட்டமிடுகிறது
PGT சோதனையானது, தம்பதிகள், பரம்பரைக் குறைபாடுகள் இல்லாத குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளத் திட்டமிட வைக்கிறது. இதன்மூலம், அவர்களுக்கு மன அமைதியும், ஆரோக்கியமான எதிர்காலமும் அமைகிறது.
PGT சோதனையை, யார் மேற்கொள்ளலாம்?
செயற்கைக் கருத்தரிப்பு முறையை மேற்கொள்ளும் அனைவருக்கும் இந்த PGT சோதனைத் தேவைப்படுவது இல்லை. ஆனால், சில குறைபாடு உள்ளவர்களுக்கு, இந்தச் சோதனை மிகவும் அவசியமானதாக உள்ளது.
1. மரபணுக் குறைபாடுகள் கொண்ட தம்பதிகள்
சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ், சிக்கிள் செல் அனீமியா உள்ளிட்ட மரபணுக் குறைபாடுகள் கொண்ட தம்பதிகள், தங்களது குழந்தைகளுக்கு, இத்தகையக் குறைபாடு ஏற்பட்டுவிடக்கூடாது என்று எண்ணுபவர்களுக்கு, இந்த PGT சோதனை, இனிய வரப்பிரசாதமாக அமைகிறது.
2. அதிக வயதில் பிரசவிக்கும் தம்பதி
35 வயதிற்கு மேற்பட்ட தம்பதிகளுக்கு, அவர்களின் கருக்களில் குரோமோசோம்களின் எண்ணிக்கைகளில் அசாதாரண மாற்றங்கள் நிகழ அதிக வாய்ப்புகள் உண்டு. இத்தகைய தம்பதியினர்,PGT – A சோதனையை மேற்கொண்டு, ஆரோக்கியமான கருக்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
3. கருச்சிதைவு அபாயம் அதிகம் உள்ளவர்கள்
மரபணுக் குறைபாடுகள் காரணமாக, பல கருச்சிதைவுகளை அனுபவித்த தம்பதிகள், கருத்தரிப்புக்கு உகந்த கருக்களைக் கண்டறிய PGT சோதனை உதவுகிறது. மேலும், இது கருச்சிதைவுகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
4. பரம்பரைப் பரம்பரையாகக் குரோமோசோம் மறுசீரமைப்பு பாதிப்பு
இடமாற்றம் அல்லது தலைகீழ் மாற்றங்களினால், குரோமோசோம்களில் மறுசீரமைப்புகள் நிகழ்ந்துள்ள தம்பதிகளின் கருக்களில் சீரான் குரோமோசோம் கட்டமைப்புகளை உறுதிப்படுத்த PGT-SR சோதனை உதவுகிறது.
5. விளக்க இயலாத மலட்டுத்தன்மைப் பாதிப்பு கொண்டவர்கள்
மற்ற சோதனைகளால் கண்டறிய இயலாத மரபணு அடிப்படையிலான குறைபாடுகளை, PGT சோதனையின் மூலம் கண்டறியலாம், இதன்மூலம், ஆரோக்கியமான கருக்களைத் தேர்ந்தெடுக்க இயலும்.
6. செயற்கைக் கருத்தரிப்பு முறைத் தோல்வியுற்ற தம்பதிகள்
செயற்கைக் கருத்தரித்தல் முறைத் தோல்வியுற்ற தம்பதிகள், PGT சோதனையின் மூலம் ஆரோக்கியமான கருக்களைக் கண்டறிந்து, அதன்மூலம், வெற்றிகரமான கருத்தரிப்பைச் சாத்தியமாக்கிக் கொள்ள இயலும்.
மேலும் வாசிக்க : மனச்சோர்வு பாதிப்பிலிருந்து நிவாரணம் வேண்டுமா?
PGT சோதனைக்குத் தயாராகிறீர்களா?
PGT சோதனைக்குத் தயாராகும் நிகழ்வு, பல்வேறு படிநிலைகளைக் கொண்டது.
1. மரபணு நிபுணரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்
சம்பந்தப்பட்ட தம்பதிகள், நன்கு பயிற்சி பெற்ற மரபணு நிபுணரை அணுகி, PGT சோதனையின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள வேண்டும்.
2. நன்மைகள் மற்றும் அபாயங்களை அறிந்து கொள்ளுதல்
PGT சோதனை, பெரும்பாலானோருக்குச் சாதகமாக உள்ளபோதிலும், அதன் உணர்வுப்பூர்வமான மற்றும் நிதி தொடர்பான விசயங்களையும் அறிந்து கொள்ளுதல் அவசியமாகும்.
3. அதிகச் செலவுமிக்கது
PGT சோதனை,அதிகப் பொருட்செலவு கொண்டது மட்டுமல்லாமல், அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தவல்லது ஆகும். இந்தச் சோதனையைச் செய்து கொள்ள விழைவோர், அதற்குரிய பொருளாதாரக் கட்டமைப்புகளை முன்னரே மேம்படுத்துவது அவசியமானது ஆகும்.
PGT சோதனை, ஆரோக்கிமான குழந்தையைப் பெற்றுக் கொள்ள விழையும் தம்பதியினர் மேற்கொள்ள விரும்பும் சோதனை ஆகும். செயற்கைக் கருத்தரிப்பு முறையில் குழந்தைப் பெற்றுக் கொள்ள விரும்பும் தம்பதிக்கு, இந்த PGT சோதனை, இனிய வரப்பிரசாதமாக விளங்குகிறது என்று கூறினால் அது மிகையல்ல..