Front view of a child sitting on a yoga mat in a greenery filled park doing yoga.

சிறந்த மன ஆரோக்கியத்திற்கு உதவும் யோகா

யோகா மற்றும் மன ஆரோக்கியம், மக்களிடையே சமீபகாலமாகப் பிரபலமடைந்து வருபவையாக உள்ளன. மன அழுத்தம், பதட்ட நிலையைக் குறைக்க, யோகா பேருதவி புரிகிறது. மருத்துவத்துறையில் யோகாவின் பங்களிப்பு குறைவாக இருந்தாலும், மக்களிடையே இதன் பயன்பாடு அதிகரித்துள்ளது.

மன ஆரோக்கியம் கெடுவது ஏன்?

இன்றைய போட்டி உலகில், உணவுமுறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உடல் ஆரோக்கியம் கெடுவது மட்டுமல்லாது, மன ஆரோக்கியமும் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. உடல் மற்றும் மன ஆரோக்கியக் குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் தீர்வுக்காகத் தவிக்கின்றனர்.அவர்களுக்கு ஆபாந்பாந்தவனாக விளங்கி வருகிறது யோகா.

சிறந்த மனநல ஆரோக்கியத்திற்கு, யோகா முக்கிய பங்காற்றி வருகிறது என்று சொன்னால் அது மிகையல்ல. யோகாப் பயிற்சியினை மேற்கொள்வதால் கிடைக்கும் நேர்மறையான நன்மைகள், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவல்ல உளவியல் சிகிச்சையில் முக்கியப் பங்காற்றுகிறது. மனக்கலக்கப் பாதிப்பு உள்ளவர்களுக்கு, யோகா சிறந்த தீர்வாக உள்ளது. மனச்சோர்வு, கவனக்குறைவு, சரியான உறக்கமின்மை உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் அருமருந்தாக யோகா விளங்குகிறது. இது உங்களின் நடத்தை, மனநிலை, ஞாபகச் சக்தியை மேம்படுத்துகிறது. மன அழுத்தம் மற்றும் அதுசார்ந்தப் பாதிப்புகளைக் களைய யோகா, தியானம், சுவாசப் பயிற்சி உள்ளிட்டவைப் பேருதவி புரிகின்றன.

அமைதியான மனநிலை

இன்றைய இயந்திரத்தனமான போட்டி உலகில், மன அமைதி மிகவும் அவசியமானதாக உள்ளது. இந்த மன அமைதியைப் பெற, அனைவரும் கடும்பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றனர். யோகாப் பயிற்சியானது அவர்களுக்கு இனிய வரப்பிரசாதமாக அமைந்து உள்ளது.

நண்பர்களுடனும், மனதிற்குப் பிடித்தவர்களுடன் பொழுதைக் கழிக்கும்போது, நம் மனம் மகிழ்ச்சி அடையுமே தவிர, மன அமைதி ஏற்படுவது இல்லை. மற்றவர்களுடன் கூடி இருக்கும் போதும், பிடித்த விளையாட்டை விளையாடும் போது கிடைக்கும் மகிழ்ச்சியும் தற்காலிகமானதே ஆகும். இறுதியில் மனக்கசப்பு தான் ஏற்படுமே தவிர, மன அமைதி என்பது சாத்தியமே இல்லை.

மனஅமைதி கிடைக்க வேண்டுமென்றால், நாம் நமது செயல்முறையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். நண்பர்கள், உறவினர்களுடன் பொழுதைக் கழிக்கும் போது ஏற்பட்ட உற்சாகம் உள்ளிட்ட விரும்பத்தக்க நிகழ்வுகள், சிறிது நேரத்திற்குப் பிறகு மறைந்துவிடும். யோகாப் பயிற்சி அமைதியான மனநிலையை உருவாக்கி, சிந்தனைகளையும் செயல்களையும் மேம்படுத்துகிறது.கவலை, மனச்சோர்வு உள்ளிட்ட எதிர்மறைப் பாதிப்புகளைக் குறைப்பதன் மூலம் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் யோகாசனங்கள்

பாலாசனம்

குழந்தைத்தனமான இந்தப் போஸ், மனநல ஆரோக்கியத்திற்கு முக்கியப் பங்காற்றுகிறது. இந்த ஆசனமானது, நரம்புகளைச் சாந்தப்படுத்துகிறது. இந்த யோகாப்பயிற்சியானது, உங்கள் உடலை வளைத்து வயிறு மற்றும் தொடைப்பகுதியை ஓய்வுநிலைக்குக் கொண்டு செல்வதன் மூலம், மனம் மற்றும் உடல் அமைதியாக்குகிறது.

சுகாசனம்

இந்த ஆசனம், அதன் பெயருக்கு ஏற்றவாறு, மனம் அமைதியடைவதற்கான சூழலை உருவாக்கி, மகிழ்ச்சியைத் தூண்டுகிறது. தாமரை வடிவில் அமர்ந்து, இந்தப் பயிற்சியை மேற்கொள்ளவும். இந்த நிலையில் தொடர்ந்து இருப்பதன் மூலம், மனப் பதட்டம், மன இறுக்கம், மன அழுத்தம் உள்ளிட்டவைகள் உடலில் இருந்து நீங்கும்.

Image of a group of people doing yoga/stretching exercise in a room.

பகாசனம்

கொக்குப் போன்று நின்று மேற்கொள்ளும் பகாசன முறையானது, மனதை அமைதிப்படுத்தும் முக்கிய ஆசனங்களுள் ஒன்றாகும். உடல் எடை முழுவதும் கைகளில் தாங்கப்படுவதால், கவனம் சிதறாமல் செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கிறது.இந்த ஆசனத்தின் போது, உடலின் மேற்புறம் கீழ்ப்பக்கமாகவும், கீழ்ப்புறம், மேல்பக்கமாகவும் இருக்க வேண்டும்.

பஸ்சிமொட்டாநாசனம்

இது உடலின் ஆற்றலின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இந்த ஆசனத்தில், வயிறு மற்றும் தொடைகளை ஓய்வாக வைத்து, உடலை முட்டிகளை நோக்கி வளைக்க வேண்டும்.இதே நிலையில், 20 வினாடிகள் இருக்க வேண்டும்.

சக்ராசனம்

உடலைச் சக்கரம் போல வளைத்து மேற்கொள்ளப்படும் இந்த ஆசனம் செய்வதற்கு மிகவும் கடினமான ஆசனம் ஆகும். இந்த ஆசனத்தின் போது உடலின் அனைத்துத் தசைகளும் ஒருங்கிணைவதால், மன அமைதி நிலைக் கட்டாயம் கிட்டுகிறது. உங்கள் கைகள் மற்றும் கால்களைத் தரையில் உறுதியாகப் பற்ற செய்து, பின்பக்கமாகத் திருப்பி, உடலின் முன்புறம் மேல்நோக்கியபடி வைத்து சக்கர வடிவில் இந்த ஆசனத்தை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் வாசிக்க : இரத்தத்தில் சர்க்கரையின் அளவு – கட்டாயம் படிங்க!

தனுராசனம்

வில் வடிவில் மேற்கொள்ளப்படும் தனுராசனம், செய்யும் செயல்களில் ஈடுபாட்டை அதிகரிக்கின்றது. வயிற்றுப்பகுதியைத் தரையில் வைத்து, கைகள் மற்றும் கால்களை மேற்புறமாக உயர்த்த வேண்டும். கால்விரல்களை, கைவிரல்களால் இணைத்து, வில் போன்ற வடிவத்தை உருவாக்க வேண்டும். இந்த நிலையில், 20 வினாடிகள் இருத்தல் வேண்டும்.

சலம்ப சர்வாங்காசனம்

இந்த ஆசனம், மூளைக்குச் செல்லும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கின்றது. இந்த ஆசனத்தை, மிகவும் எச்சரிக்கையாக மேற்கொள்ள வேண்டும். இடுப்புப் பகுதியில் கைகளை வைத்து, உடலின் பின்பகுதியை மெதுவாக, மேற்புறம் நோக்கி உயர்த்த வேண்டும்.

யோகாப் பயிற்சிகளைக் கவனமாகக் கையாண்டு, மன ஆரோக்கியத்தைப் பேணிக்காத்து நல்வாழ்க்கை வாழ்வீராக…

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.